×

மோசடியாக பதியப்பட்ட பத்திர பதிவுகளை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை ரத்து!!

சென்னை : மோசடியாக பதியப்பட்ட பத்திர பதிவுகளை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் முறைகேடாக பதியப்படும் பத்திர பதிவுகளை அந்தந்த மாவட்ட பதிவாளர்களே நேரடியாக ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்த சட்ட திருத்தம் கடந்த 2022 ஆகஸ்ட் 16 முதல் அமலுக்கு வந்தது.இந்நிலையில், தமிழக அரசின் இந்த புதிய சட்ட திருத்தத்தை எதிர்த்து புதுக்கோட்டை வளர்மதி, திருச்செங்கோடு நித்யா பழனிச்சாமி, விழுப்புரம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

அதில் அவர்கள் கூறியதாவது, “தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு பத்திர பதிவு சட்டத்தில் புதிதாக கொண்டு வந்துள்ள பிரிவு 77-ஏ, 77-பி ஆகிய பிரிவுகளின்கீழ் போலியாக பதியப்பட்ட பத்திரங்களை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யலாம் என்றும், அதுதொடர்பான மேல்முறையீட்டை பத்திர பதிவு துறை தலைவர் விசாரிக்கலாம் என்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தன்னிச்சையானது. பல்வேறு முறைகேடுகளுக்கும் இது வழிவகுத்துள்ளது. எனவே, இந்த சட்ட திருத்தம் செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கோரியிருந்தனர். மேற்கண்ட வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள்,”போலி பத்திரம் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தால் அந்த பத்திரம் செல்லாது என அறிவிக்கும் தமிழக அரசு அரசாணையை ரத்து செய்து உத்தரவிடுகிறோம். தமிழக அரசு கொண்டு வந்த 77ஏ, 77 பி ஆகிய சட்ட பிரிவுகள் செல்லாது. அந்த பிரிவுகளை ரத்து செய்கிறோம்,”இவ்வாறு உத்தரவிட்டனர்.

The post மோசடியாக பதியப்பட்ட பத்திர பதிவுகளை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,High Court ,
× RELATED கிண்டி ரேஸ்கோர்ஸ் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி