சென்னை: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மேம்பாடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண மீட்பு பணிகள் மேற்கொள்ள தமிழ்நாட்டில் இருந்து ஜி.எஸ்.சமீரன் ஐஏஎஸ் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஐஏஎஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக்குழுவை அனுப்பி வைத்தார். அந்த மீட்பு குழு உடனடியாக வயநாடு சென்று முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இக் குழு, மேப்பாடி, சூரமலை ஆகிய பகுதிகளில் தீவிரமான மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்திட வயநாட்டின் மேப்பாடியில் உதவி மையம் ஒன்றை தமிழ்நாட்டு மீட்பு குழுவினர் நிறுவியுள்ளனர். அங்கு உதவி மேசையும் நிறுவப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள், உதவி கோருபவர்கள் கூடுதல் விவரங்கள் மற்றும் தகவல்களை 9894357299, 9344723007 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மேம்பாடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி மையம் திறப்பு appeared first on Dinakaran.