×

காசோலை மோசடி வழக்கில் கோச்சடையான் பட தயாரிப்பாளர் ரூ1 கோடியை செலுத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு


சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தை மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பட வெளியீட்டுக்காக ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனம் கடன் பெற்றிருந்தது.இந்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் 5 கோடி ரூபாய்க்கான காசோலையை ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் வழங்கியிருந்தது. காசோலையை வங்கியில் பணம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குனர் முரளி மனோகர் மீதும் ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவன உரிமையாளர் அபிர்சந்த் நஹர், காசோலை மோசடி வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அல்லிகுளம் நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. மேலும் 7 கோடியே 70 லட்சம் ரூபாயை இழப்பீடாக அபிர்சந்த் நஹருக்கு வழங்குமாறு முரளி மனோகருக்கு உத்தரவிட்டது.  இதையடுத்து முரளி மனோகர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், காசோலை மோசடி வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் விதிக்கும் இழப்பீட்டு தொகையில் 50% தொகையை செலுத்துமாறு நிபந்தனை விதித்துதான் தண்டனை நிறுத்தி வைக்கப்படும். ஆனால், இந்த வழக்கில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படாமல் முரளி மனோகரின் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அபிர்சந்த் நஹர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ஏற்கனவே 8 கோடியே 99 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்டதாக முரளி மனோகர் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, மீத கடன் தொகையான ரூ1 கோடியே 1 லட்சத்தை 4 வாரங்களில் அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு எண்ணில் முரளி மனோகர் செலுத்த வேண்டும்.தண்டனை தொடர்பாக அல்லிகுளம் நீதிமன்றம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.

The post காசோலை மோசடி வழக்கில் கோச்சடையான் பட தயாரிப்பாளர் ரூ1 கோடியை செலுத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rajinikanth ,Gochadaiyan ,Media One Global Entertainment ,Ad Bureau Advertising ,Kochadaiyan ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!