- காரைக்குடி
- அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி
- டாக்டர்
- எம். ஜோதிபாசு
- காரைகுடி அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி, ஜூலை 31: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது என தேர்வாணையர் முனைவர் மு.ஜோதிபாசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் 2024ல் நடந்த இறுதி பருவமுறை தேர்வுகளில் (இளநிலை, முதுநிலை பாடங்கள்) இரண்டு பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடியாக பட்டம் பெறவும், உயர்கல்வி தொடரவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2024 இரண்டாம் வாரத்தில் அவரவர் படித்த கல்லூரிகளில் நடத்தப்பட உள்ளது.
இத்தேர்வுக்கான விண்ணப்பத்தினை www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இணைப்பு கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் 2024ல் நடந்த இறுதி பருவமுறை தேர்வு எழுதியவர்களில் இரண்டு பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இச்சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பினால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தாள் ஒன்றுக்கு ரூ.1000க்கான வங்கி வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி என்ற பெயரில் எடுத்து வரும் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் உரிய வழியாக பல்கலைக்கழக தேர்வு பிரிவிற்கு அனுப்ப வேண்டும்.
ஏப்ரல் 2024ல் நடந்த தேர்வுகளுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து, இம் மறுமதிப்பீட்டின் அடிப்படையில் சிறப்பு துணைத் தேர்வுக்கு தகுதி பெறும் மாணவர்கள் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் தேர்வு முடிவுகள் வெளியான மூன்று நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணங்களை பல்கலைக்கழக தேர்வு பிரிவில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
The post கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு: தேர்வாணையர் தகவல் appeared first on Dinakaran.