×

கலவரத்தை தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராம் பதிவு அமைதிக்கு பங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திருச்சி எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை

திருச்சி, ஜூலை 30: கலவரத்தை தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அமைத்திக்கு பங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 11ம் தேதி திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை (எ) துரைசாமி (எ) எம்.ஜி.ஆர்.நகர் துரை என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள தைலமரக் காட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் துரை மற்றும் அவருடன் இருந்தவரை பிடிக்க சென்றனர். அப்போது துரை போலீசாரை தாக்க முயன்றபோது, தற்காப்பிற்காக புதுக்கோட்டை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் துரை இறந்தார்.

இந்நிலையில், இறந்து போன எம்.ஜி.ஆர் நகர் துரைசாமியின் ஆதரவாளர்கள் சில தினங்களுக்கு முன்பாக, இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில், “mgr-nagar-official” முகவரியில் இருந்து திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் புகைப்படத்தை பகிர்ந்து, அத்துடன் “திருச்சியில் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு தலைகள் சிதறும்” என்ற பதிவை பகிர்ந்து பொதுமக்கள் மத்தியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரங்களை தூண்டும் விதத்திலும் இன்ஸ்டா எஸ்டோரி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தது குறித்து ேபாலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர், விசாரனையில் புத்தூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டி (21) என்பவர் தான் பதிவேற்றம் செய்துள்ளார் என தெரியவந்தது.

இந்நிலையில் சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து ராஜபாண்டியினை போலீசார் தேடிவந்தனர். அப்போது, குழுமணி உறையூர் சாலையில் உள்ள ராமநாதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ராஜபாண்டியை பிடிக்க சென்றபோது, ராஜபாண்டி பட்டாகத்தியை காட்டி மிரட்டியதால், அவர் மீது சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோன்று, பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பொதுமக்கள் அமைதிக்கு அச்சுறுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும் நபர்களை பற்றிய தகவல்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண். 94874 64651 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

The post கலவரத்தை தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராம் பதிவு அமைதிக்கு பங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திருச்சி எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Instagram ,Trichy SP Varunkumar ,Trichy ,Trichy district ,SP ,Varunkumar ,Dinakaran ,
× RELATED திருச்சி: பைக்கில் சாகசம் செய்தவர் கைது