×
Saravana Stores

திருவேற்காடு கூவம் கரையை ஒட்டிய குடியிருப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பூந்தமல்லி: திருவேற்காடு கூவம் நதி கரையை ஒட்டிய குடியிருப்புகளை அகற்ற 3வது முறையாக நோட்டீஸ் ஒட்ட சென்ற அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இங்கு குறிப்பாக கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும் நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாக கூறி அகற்றுவதற்காக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக சாலைமறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே வருவாய்த் துறையினர் இந்தப் பகுதியில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து அளவீடு செய்தனர். இதில் 160 வீடுகளை அகற்றுவதற்கு முடிவு செய்து அந்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டினர். இந்நிலையில் நேற்று திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜு தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்த வீடுகளில் 3வது முறையாக இறுதி நோட்டீஸ் ஒட்டுவதற்கு வந்தனர்‌. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்ட வீடுகளில் வருவாய் துறையினர் நோட்டீசை ஒட்டினர். அந்த நோட்டீசில் ஏழு நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து திருவேற்காடு நகர மன்ற துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் லயன் ரமேஷ், நகர் மன்ற உறுப்பினர் இளங்கோ மற்றும் ஊர் பெரியவர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் இரண்டு வார காலம் அவகாசம் கேட்டனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் உடன்படவில்லை. ஏற்கனவே கணக்கெடுத்த வீடுகளில் ஆறு வீடுகளில் உள்ளவர்கள் வீடுகளை அகற்றுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அந்த வீடுகளை தற்போது அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

The post திருவேற்காடு கூவம் கரையை ஒட்டிய குடியிருப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Tiruvekadu Koovam bank ,Poontamalli ,Koovam river ,Thiruvekadu ,Perumal Koil Street ,Tiruvekadu Municipality ,Koovam ,Tiruvekadu ,
× RELATED பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில்...