- திருவிழா
- நாமக்கல், புதுகை
- நாமக்கல்
- புதுக்கோட்டை
- பொங்கலை அம்மன் கோவில்
- மலையம்பட்டி கிராமம்
- இராசிபுரம்
- நாமக்கல் மாவட்டம்
- நாமக்கல், புதுகை கோவில் திருவிழா: 300 ஆடு பலி மற்றும் கறி விருந்து
- இன் ஆண்கள்
நாமக்கல்: நாமக்கல் மற்றும் புதுக்கோட்டையில் நடந்த கோயில் விழாவில் 300 ஆடுகளை பலியிட்டு கறி விருந்து போட்டனர். இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள மலையாம்பட்டி கிராமத்தில் பொங்களாயி அம்மன் கோயில் அமைந் துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில் பொங்களாயி அம்மனுக்கு நேற்றிரவு 11 மணிக்கு சிறப்பு பூஜை செய்து, ஒரு பெண் ஆட்டை பலி கொடுத்தனர். தொடர்ந்து போதமலையை சேர்ந்த மலையாள பூசாரி நள்ளிரவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தார். இதையடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 200க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாக்களை பலியிட்டு, 1,800 கிலோ ஆட்டு இறைச்சியை சுடச்சுட சமைத்து சமபந்தி கறி விருந்து விமரிசையாக நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இந்த விழாவில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி இல்லை. இன்று அதிகாலை முதலே ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் நின்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட கறி விருந்தை சுவைத்து சாப்பிட்டனர். இதில் சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொங்களாயி அம்மன் திருவிழாவில் நடக்கும் கறி விருந்தில் பங்கேற்பவர்களுக்கு ஒரேயொரு கட்டுப்பாடு உண்டு. கறிச்சோற்றை யாரும் வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. இதனால் பங்கேற்றவர்கள் உணவை அங்கேயே சாப்பிட்டு விட்டு சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கெண்டையன்பட்டியில் முத்து முனீஸ்வரர் கோயில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த கோயிலில் ஆண்கள் மட்டுமே வழிபாடு செய்வர். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் கிடா வெட்டு பூஜை நடைபெறும். இந்தாண்டு கிடா வெட்டு பூஜை நேற்றுமுன்தினம் இரவு துவங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. பக்தர்கள் நூறுக்கும் மேற்பட்ட ஆடு மற்றும் சேவல்களை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக முத்து முனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு கோயில் பரம்பரை பூசாரிகள் தீர்த்தம் கொடுத்தனர். அந்த தீர்த்தத்தை பக்தர்கள் மீது தெளித்த பின்னர் பூஜைகள் நடந்தது. இதையடுத்து பூசாரிகள் சாமி ஆடி குறி சொல்லி அருள்வாக்கு கூறினர்.
இதனை தொடர்ந்து பலியிடப்பட்ட ஆடு, சேவல்களை சமைத்து முத்து முனீஸ்வரருக்கு படையல் செய்யப்பட்டது. தொடர்ந்து பூஜையில் கலந்துகொண்ட சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கறிவிருந்து அளிக்கப்பட்டது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பூஜை நடந்து வருகிறது. இது ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விழா. இதில் பெண்கள் பங்கேற்க மாட்டார்கள். பூஜை சோறும் சாப்பிடுவதில்லை. அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் ஒன்று கூடி பூஜை நடத்துவது சிறப்பாக இருந்தது என்றனர்.
The post நாமக்கல், புதுகையில் கோயில் விழா : 300 ஆடுகளை பலியிட்டு கறி விருந்து: ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.