×

பதக்க வேட்டையை தொடங்கிய மானு பாக்கர்; மகளிர் டேபிள் டென்னிஸ் மனிகா வெற்றி தொடக்கம்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 2வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றில் கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்ஸியுடன் நேற்று மோதிய மனிகா பத்ரா (29 வயது, 18வது ரேங்க்) 11-8 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 12-10, 11-9 என அடுத்த 2 செட்களையும் வென்ற மனிகா 3-0 என முன்னிலையை அதிகரித்தார். 4வது செட்டில் கடுமையாகப் போராடிய அன்னா ஹர்ஸி (103வது ரேங்க்) 11-9 என வென்ற நிலையில், 5வது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த மனிகா 4-1 என்ற செட் கணக்கில் (11-8, 12-10, 11-9, 9-11, 11-5) அபாரமாக வென்று ரவுண்ட் ஆப் 32க்கு முன்னேறினார். இப்போட்டி 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

சரத் கமல் சறுக்கல்
ஆண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று களமிறங்கிய இந்திய நட்சத்திரம் அசந்தா சரத் கமல் (42 வயது, 40வது ரேங்க்) 2-4 என்ற செட் கணக்கில் (12-10, 9-11, 6-11, 7-11, 11-8, 10-12) ஸ்லோவேனியாவின் டெனி கோஸுலிடம் (126வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். இப்போட்டி 53 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்த தோல்வியுடன் சரத் கமலின் ஒலிம்பிக் பயணம் நிறைவடைந்தது. அவர் 5வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பதக்க வேட்டையை தொடங்கிய மானு பாக்கர்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்றவர் என்ற பெருமையை வசப்படுத்தி உள்ள மானு பாக்கர், பரபரப்பான பைனலில் இலக்கு நோக்கி உற்சாகமாக குறி வைக்கிறார். மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்ற மனு பாக்கர், ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் பதக்கத்தை முத்தமிட்ட முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

மகளிர் பேட்மின்டன் சிந்து முன்னேற்றம்
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் (எம் பிரிவு) மாலத்தீவின் பாத்திமா அப்துல் ரசாக்குடன் நேற்று மோதினார். இந்த போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-9, 21-6 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி வெறும் 29 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே 2 முறை ஒலிம்பிக் பதக்கங்களை முத்தமிட்டுள்ள சிந்து. பாரிசில் 3வது பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பதக்க வேட்டையை தொடங்கிய மானு பாக்கர்; மகளிர் டேபிள் டென்னிஸ் மனிகா வெற்றி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Manu Packer ,Table ,Manica ,Paris ,India ,Manika Patra ,Paris Olympics ,Great Britain ,Anna Hursey ,Women's Table Tennis Manika ,Dinakaran ,
× RELATED பாதாம் அல்வா