×

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தில் நடக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ஒன்றிய அரசின் நிர்பயா நிதியை முழுமையாகப் பெற்று பயன்படுத்துவதற்காக உயர் மட்ட அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை நியமிக்க கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் 2019ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தமிழக உள்துறை செயலாளர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நிர்பயா நிதி மூலம் தமிழகத்தில் காவல் நிலையங்களில் பெண்கள் ஆதரவு பிரிவை அமைத்து வலுப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையில் புதிதாக 13 ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வந்த 19 பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றம் தடுப்பு திட்டம், சைபர் தடயவியல் ஆய்வகங்களுக்கு கருவிகள் கொள்முதல் செய்தது உள்ளிட்ட திட்டங்களுக்கு நிர்பயா நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு திட்டத்தின் கீழ் 2018 முதல் 2024 வரை 10 கோடி ரூபாய் பட்ஜெட் மதிப்பீட்டில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியத்தில் இருந்து 2016ம் ஆண்டு ஒருமுறை உதவியாக 5 கோடியே 65 லட்சம் ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

The post பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தில் நடக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai High Court ,CHENNAI ,Court ,Union Government ,
× RELATED கிண்டி ரேஸ்கோர்ஸ் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி