- கார்த்தி
- சென்னை
- காங்கிரஸ்
- எவ்க்ஸ் எலங்கோவன்
- கார்த்தி சிதம்பரம்
- காங்கிரஸ் கட்சி தி.மு.க
- எவ்க்ஸ்.எலங்கோவன்
- சிதம்பரம்
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்- கார்த்தி சிதம்பரம் இடையே எழுந்துள்ள வார்த்தை போர் முற்றிய நிலையில் காங்கிரசார் மத்தியில் கோஷ்டி பூசல் உருவாகுமோ என்ற அச்சம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த பிறகு 40க்கு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது.
இந்த நிலையில் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் காங்கிரசார் அதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து கார்த்தி சிதம்பரம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,‘‘ கார்த்தி சிதம்பரம் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்துகிறார். உள்ளாட்சி தேர்தல் வர போகிறது, அதில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டாமா? கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக் கூடாது என டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி ப.சிதம்பரத்திற்காக, கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸ் தலைமை சீட் கொடுத்தது. திமுக இல்லாவிட்டால் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
அவ்வளவு ஏன் டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது. இப்போது தேர்தலில் ஜெயித்துவிட்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசிக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது எம்பியாகிவிட்டார். ஆனால் உள்ளாட்சி தேர்தல் இருக்கிறதே அதை மனதில் வைத்துக் கொண்டு கார்த்தி பேச வேண்டும். தேர்தலுக்கு முன்பு கார்த்தி சிதம்பரம் இப்படி பேசியிருக்க வேண்டியதுதானே’’ என்று கார்த்தி சிதம்பரத்தை விமர்ச்சித்து பேசியது காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியாக ஈவிகேஎஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் இடையே வார்த்தை மோதல் அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் தான் பேசிய வீடியோவை இணைத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதிலடி கொடுத்தார். அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு கருத்து சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். அந்த வீடியோவில், ‘கூட்டணி கட்சியின் தயவினால் தான் நான் உட்பட அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றோம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
தமிழ்நாடு அரசு, முதல்வரின் சிறப்பான திட்டங்கள் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது’’ என்று கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார். இந்நிலையில், சிவகங்கை மாவட்ட தேவகோட்டையில் கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில்.‘‘ நான் பேசியதை அவர் முழுமையாக கேட்டாரா என்று தெரியவில்லை. கட்சி வளர வேண்டும் என்று நான் சொன்னதை நாட்டுக்கு கேடு என்று சொல்கிறார். அவரை விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை. நான் பேசியது சரியா, தவறா என்பதை கட்சியினரிடம் கேளுங்கள்.
கூட்டணியால் தான் நான் வெற்றி பெற்றேன் என்று தான் கூறினேன். காங்கிரசில் இருந்து என்னை நீக்க வேண்டும் என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியது வேடிக்கையாக உள்ளது. அவர் பேசியதற்கு நான் எதிர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ என்றார். ஈவிகேஎஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் இடைய எழுந்துள்ள திடீர் வார்த்தை போர் தமிழக காங்கிரசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. ஏனென்றால் தலைவர்களிடையே எழுந்துள்ள இந்த மோதல் போக்கு தற்போது கட்சியினர் மத்தியில் கோஷ்டி பூசலாக உருவெடுக்க தொடங்கியுள்ளது.
The post ஈவிகேஎஸ்.இளங்கோவன்-கார்த்தி சிதம்பரம் மோதல்: முற்றுகிறது வார்த்தை போர், வருத்தத்தில் மூத்த தலைவர்கள் appeared first on Dinakaran.