×
Saravana Stores

ராகு, கேது தோஷம் வராமல் தடுக்க முடியுமா??

ஓ… தாராளமாக முடியும். எங்கேனும் குருவிக் கூடு, பாம்புப் புற்றிருந்தால் அதனால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லையெனில் இடிக்காதீர்கள். அடர்ந்த வனங்களையும், காடுகளையும் அழிக்கக் கூடாது. அறுபது எழுபது வருட பச்சை மரங்களை வெட்டுவதற்கு முன்பு யோசியுங்கள். அரசு இடத்தை தந்திரமாக வளைக்கும்போது ராகு உங்களை வளைப்பார். ராகுவும், கேதுவும் பாட்டன் பாட்டிக்கு உரித்தான கிரகங்களாதலால் முன்னோர்களின் சொத்துக்களையோ, அவர்கள் வாழ்ந்த வீடுகளையோ நியாயமில்லாமல் விற்க வேண்டுமா என்று பலமுறை சிந்தித்து முடிவெடுங்கள். முக்கியமாக கேதுவின் அருளைப்பெற வேண்டுமெனில் கோயில் சொத்துக்களை எப்படியேனும் குறைந்த விலையில் வாங்கிப் போடலாமா என்று நினைப்பது கூடாது. கற்றுக் கொடுத்த குருவையே நிந்திப்பதை செய்யவே கூடாது. மிக முக்கியமாக புண்ணிய தீர்த்தங்களை மாசுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்ளாவிட்டாலும் அதில் காலை கழுவாதீர்கள். பரம்பரை பரம்பரையாக வணங்கி வந்த குல தெய்வம் மற்றும் கிராம தேவதைகளின் வழிபாடுகளை நிறுத்தாமல் தொடருங்கள். உங்கள் மூல ஊற்றின் ஒரு கண் அங்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏராளமான பணத்தை வைத்துக் கொண்டு லோபித்தனமாக இருக்கக் கூடாது. ஏனெனில் யோகக்காரகனான ராகுவை ஓரிடத்தில் முடக்காதீர்கள். பிறன்மனை நோக்குவதும், களவாட நினைப்பதும் கடுமையான களத்திர தோஷமாக மாறும். கன்றுக்கு பால் விடாமல் ஒட்ட ஒட்ட பால் கறப்பது கூட தோஷத்தை அதிகரிக்கும். பொய் சாட்சி கூறும்போது உங்களின் வாக்கு ஸ்தானத்தில் தானாக ராகுவோ, கேதுவோ அமர்வது நிச்சயம்.

தவறான எண்ணங்களை, தர்மமில்லாத தீங்கான காரியங்களை செயல்படுத்தினால் ஒருவரின் ஜாதகத்தில் அது மோசமான இடங்களில் அமர்ந்து தோஷமாக தன்னை காட்டிக் கொள்கிறது என்று பார்த்தோம். அப்போது அந்த எண்ணங்களை வெறும் எண்ணங்களாகவே விட்டுவிட்டால் போதும். அப்படியே கட்டுப்படுத்தி செயல் வடிவமாக மாற்றாமல் இருந்தாலே போதும். இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகச் சொன்னால் திருடுவதற்கு வாய்ப்பு கிடைத்தும் திருடாமல் இருந்தால் அவர் ஜாதகத்திலுள்ள ராகு அவருக்கு யோகத்தை கொடுப்பார். இதுதான் சூட்சுமம். செயல் விளைவு என்று எதையுமே மாறி மாறி வினையாக மாற்றாமல் அப்படியே எண்ண வடிவிலேயே அதை நிறுத்தினாலேயே போதும். உங்களுக்கு தீய எண்ணங்களே வரக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. அது சாத்தியமும் இல்லை. மனம் என்று இருந்தால் அது நாலாவிதமாகவும் நினைக்கத்தான் செய்யும். ஆனால், செயலாக மாற்றும்போது, அக உலகில் இருந்தவை புற உலகில் செயலாக மாறும்போது நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி அதற்குரிய பலனை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். ‘‘நான் இதை பண்ணும்போது யாரும் பக்கத்துலயே இல்லையே’’ என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டு போக முடியாது. ஏனெனில் காலதேவன் உங்களை எப்போதும் கவனித்துக் கொண்டிருப்பான்.

The post ராகு, கேது தோஷம் வராமல் தடுக்க முடியுமா?? appeared first on Dinakaran.

Tags : Rahu ,
× RELATED காளஹஸ்தி சிவன் கோயிலில் நடிகை நமீதா சிறப்பு பூஜை