×

அடிப்படை வசதி, பாதுகாப்பு குறைபாடு தமிழ்நாட்டில் 18 கிளை சிறைகளை மூட உத்தரவு: சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: நாடு முழுவதும் பாதுகாப்பற்று பழுதடைந்த நிலையிலும், கைதிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், பாதுகாப்பு குறைபாடுகளுடனும் போதுமான கைதிகள் இன்றியும் இருக்கும் சிறைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக வருவாய் துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து அனைத்து கிளை சிறைகளையும் ஆய்வு செய்து, தகுதியற்ற சிறைகளை கண்டறியலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. தமிழ்நாட்டில் உள்ள கிளை சிறைகளை இக்குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கிடைத்த முடிவின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் 18 கிளைச் சிறைகளை நிரந்தரமாக மூடுமாறு தமிழக சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர்தயாள் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கிளை சிறைகளில் உள்ள அடிப்படை வசதி, பாதுகாப்பு தொடர்பாக நடத்திய ஆய்வின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், செய்யாறு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், கடலூர் பரங்கிப்பேட்டை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, முசிறி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், திருமயம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், திருவாடானை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆகிய 18 கிளை சிறைகள் மூடப்படுகின்றன. இதில் மேட்டுப்பாளையம், கடலூர் பரங்கிப்பேட்டை, கீரனூர், பட்டுக்கோட்டை, திருவாடானை, சாத்தூர் ஆகிய 6 கிளைச் சிறைகள் ஏற்கெனவே தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. செய்யாறு சிறை கடந்த 2014ம் ஆண்டு முதல் மாவட்ட வருவாய்த்துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த உத்தரவின் மூலம் எஞ்சிய சிறைகளில் உள்ள கைதிகள் படிப்படியாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post அடிப்படை வசதி, பாதுகாப்பு குறைபாடு தமிழ்நாட்டில் 18 கிளை சிறைகளை மூட உத்தரவு: சிறைத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Vellore ,Supreme Court ,
× RELATED ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார்...