பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 5வது பெண் தலைமை செயலாளராக ஷாலினி ரஜனிஷ் வரும் 1ம் தேதி பொறுப்பேற்கிறார். கர்நாடக மாநில அரசில் முக்கிய பொறுப்பாக மட்டுமில்லாமல் மாநில அரசின் முதன்மை பதவியாக இருப்பது மாநில தலைமை செயலாளர் பதவியாகும். இதில் சீனியாரிட்டி அடிப்படையில் பலர் பதவி வகித்துள்ளனர். பெரும்பான்மையாக ஆண்கள் மாநில தலைமை செயலாளராக இருந்த நிலையில் முதல் முறையாக கடந்த 2001ம் ஆண்டு தெரெசா பட்டாச்சார்யா என்பவர் முதல் பெண் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
பி.கே.பட்டாச்சார்யா மற்றும் தெரேசா பட்டாச்சார்யா இருவரும் தம்பதிகள். பி.கே.பட்டாச்சார்யா கடந்த 2001 ஜனவரி 1 முதல் ஜூன் 30ம் தேதி வரை 6 மாதங்கள் மாநில தலைமை செயலாளராக இருந்தார். அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், சீனியாரிட்டி அடிப்படையில் அவரது மனைவி தெரெசா பட்டாச்சார்யா கடந்த 2001 ஜூலை 2ம் தேதி முதல் 2002 மார்ச் 30ம் தேதி வரை மாநில தலைமை செயலாளராக இருந்தார்.
அதை தொடர் ந்து மாநிலத்தின் இரண்டாவது பெண் தலைமை செயலாளராக மாலதிதாஸ் கடந்த 2006 அக்டோபர் 2ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை 3 மாதங்கள் பதவியில் இருந்தார். பின் கே.ரத்னபிரபா கடந்த 2017 டிசம்பர் 1ம் தேதி முதல் 2018 மார்ச் 31ம் தேதி வரை மாநில தலைமை செயலாளராக இருந்தார். நான்காவது பெண் தலைமை செயலாளராக வந்திதா சர்மா கடந்த 2022 ஜூன் 1 முதல் 2023 நவம்பர் 30ம் தேதி வரை 17 மாதங்கள் பதவியில் இருந்தார்.
அதை தொடர்ந்து தற்போது மாநில தலைமை செயலாளராக இருக்கும் ரஜனிஷ் கோயல் வரும் 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்கு பின் யார் புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு விடைகாணும் வகையில் நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தற்போது கூடுதல் தலைமை செயலாளராக இருக்கும் ஷாலினி ரஜனிஷை மாநில அரசின் புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன் மூலம் மாநிலத்தின் 5வது பெண் தலைமை செயலாளர் என்ற பெருமையை ஷாலினி ரஜனிஷ் பெறுகிறார். கடந்த 2001ம் ஆண்டு கணவர்-மனைவி ( பி.கே.பட்டாச்சார்யா மற்றும் தெரெசா பட்டாச்சார்யா) ஆகியோர் மாநில தலைமை செயலாளராக ஒருவர் பின் ஒருவர் பதவி வகித்தனர். தற்போது 23 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கணவர்-மனைவி (ரஜனிஷ் கோயல் மற்றும் ஷாலினி ரஜனிஷ்) ஆகியோர் மாநில தலைமை செயலாளர் பதவி வகிக்கிறார்கள்.
மேலும் இதற்கு முன் இருந்த நான்கு பெண் தலைமை செயலாளர்களில் வந்திதா சர்மா மட்டும் 17 மாதங்கள் பதவியில் இருந்தார். மற்ற இருவர் 3 முதல் 8 மாதங்கள் வரை மட்டுமே இருந்தனர். ஷாலினி ரஜனிஷ் வரும் 2027 ஜூன் 30ம் தேதி வரை 35 மாதங்கள் பணியில் இருக்கும் வாய்ப்பு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கர்நாடக மாநிலத்தின் 5வது பெண் தலைமை செயலாளராக ஷாலினி ரஜனிஷ் பொறுப்பேற்கிறார் appeared first on Dinakaran.