×

விநாயகர், அம்மன் கோயில் இடிக்கப்படுகிறது என்ற எச்.ராஜா குற்றச்சாட்டு தவறானது: மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் மூத்த அலுவலர்களுக்கு எதிராக எச்.ராஜா சில தவறான மற்றும் தீங்கிழைக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார். அதாவது, ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ள இடத்தில் உள்ள துர்கை அம்மன் கோயில் மற்றும் ரத்ன விநாயகர் கோயிலை மெட்ரோ ரயில் நிறுவனம் தேவையில்லாமல் இடித்து வருவதாகவும், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சில உயர் அலுவலர்கள் மீது தவறான தகவல்களை, முழுமையான விவரம் அறியாமல் தெரிவித்துள்ளார். இது, பல்வேறு ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது, இடையூறாக உள்ள கட்டிடங்களை அகற்றுவது, சில இடங்களில் இடமாற்றம் செய்வது தவிர்க்க முடியாதவை. இதில் மத நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களும் அடங்கும். இது சட்டத்தின் முறையான செயல்முறையைப் பின்பற்றி செய்யப்படுகிறது. ​​இந்த நடவடிக்கைகள் எந்த வகையிலும் எந்த மத சார்பும் இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில், சாத்தியமான இடங்களில், 2018ல் அங்கீகரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி இடித்தல், மாற்றம் மற்றும் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய சில கோயில்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சில பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மாற்றி செயல்படுத்தியுள்ளது.

தற்போது கட்டப்பட்டு வரும் நிலையத்தின் வடிவமைப்பு, ஒயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோயிலின் சுமார் 15 ஆண்டுகள் பழமையான நுழைவு கோபுரம் மற்றும்  ரத்ன விநாயகர் கோயிலை இடமாற்றம் செய்வது என்பது 2018ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. துரதிஷ்டவசமாக, சுரங்கப்பாதை கட்டுமான வடிவமைப்பின் கட்டுப்பாடுகள் காரணத்தினால் மேற்கூறிய கட்டமைப்புகளின் மாற்றம், இடமாற்றத்தை தவிர்க்க முடியவில்லை. இந்த விவகாரம் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பொய் தகவலை எச்.ராஜா பரப்பி உள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post விநாயகர், அம்மன் கோயில் இடிக்கப்படுகிறது என்ற எச்.ராஜா குற்றச்சாட்டு தவறானது: மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : H.Raja ,Vinayagar ,Amman ,Temple ,Metro Rail Corporation ,CHENNAI ,Chennai Metro Rail Corporation ,H. Raja ,Amman temple ,Dinakaran ,
× RELATED களைகட்டும் விநாயகர் சதுர்த்தி!