×

57 பேருடன் புறப்பட்டுச் சென்ற சிங்கப்பூர் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: டிவிட்டரில் பதிவிட்டு டெலிட் செய்த கும்பல்

சென்னை, அக். 18: சிங்கப்பூருக்கு 57 பேருடன் புறப்பட்டுச் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இது வழக்கம்போல் புரளி என்பது உறுதியானது. இதில், டிவிட்டரில் பதிவு வெளியிட்டு டெலிட் செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று பகல் 12 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 49 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட 57 பேருடன் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு, சென்னையில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்திற்கு, ஒரு டிவிட்டர் குறுந்தகவல் வந்தது. அதில் சென்னையில் இருந்து இன்று மதியம் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானத்தின் கழிவறைகளில், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து பரபரப்படைந்த ஏர் இந்தியா அதிகாரிகள், உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகள், விமான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரமாக தகவல் கொடுத்தனர். அப்போது அந்த விமானம் சிங்கப்பூரை நெருங்கிக்கொண்டு இருந்தது. இதையடுத்து சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் அவசர தகவல் கொடுத்தனர். இதனால் சிங்கப்பூர் விமான நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் அந்த விமானம் நேற்று மாலை 4.40 மணிக்கு சிங்கப்பூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து அவசரமாக கீழே இறக்கப்பட்டதோடு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், விமானத்துக்குள் ஏறி சோதனை நடத்தினர்.

ஆனால் விமானத்தில் எந்தவிதமான குண்டுகளும் இல்லை என்பது தெரிய வந்தது. எனவே இது வழக்கம்போல் விஷமிகள் கிளப்பிவிட்ட புரளி என்று தெரிய வந்தது. இதற்கிடையே சென்னை விமான நிலைய போலீசார், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சமூக விரோத கும்பல் அனுப்பிய டிவிட்டர் பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்த பதிவை போட்ட நபரே டெலிட் செய்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த டிவிட்டர் பதிவை போட்டது யார், எந்த இடத்தில் இருந்து வந்தது என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நவீன கருவிகளை உபயோகித்து, டெலிட் செய்யப்பட்ட பதிவை மீண்டும் புதுப்பித்து, இந்த வதந்தியைக் கிளப்பிய சமூக விரோதிகளை தேடி வருகின்றனர்.

The post 57 பேருடன் புறப்பட்டுச் சென்ற சிங்கப்பூர் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: டிவிட்டரில் பதிவிட்டு டெலிட் செய்த கும்பல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Singapore ,Twitter ,Dinakaran ,
× RELATED கலைஞர் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க அன்புமணி வலியுறுத்தல்