சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை ஏற்பாடு செய்ய தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து மின்னணு டெண்டர்கள் வரவேற்கப்படுகிறது. 700 ஓட்டுநர்கள் மற்றும் 500 நடத்துனர்கள் 11 மாதங்கள் பணியாற்ற தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் எந்த பணிக்கு எத்தனை நபர்கள் அனுப்ப முடியும் என்பதை ஒப்பந்தாரர்கள் ஒப்பந்த புள்ளியை சமர்ப்பிக்கும் போது தெரிவிக்க வேண்டும். ஓட்டுநர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1074.42ம் மாதத்திற்கு ரு.27,934.87ம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1061.44ம் மாதத்திற்கு ரூ.27,597.53ம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் அனுப்பும் பணியாளர்கள் ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் விதிக்கப்பட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இந்த டெண்டர் குறித்து வரும் ஆக.6ம் தேதி மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். ஒப்பந்த புள்ளிகளை வரும் ஆக.6ம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம். இந்த டெண்டரில் பங்கேற்க டெபாசிட்டாக ரூ.25 லட்சம் செலுத்த வேண்டும். இந்த ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் ஆக.28ம் தேதி, அன்றைய தினம் மாலை 3 மணிக்கே ஒப்பந்தம் திறக்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களை தமிழக அரசின் டெண்டர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த டெண்டர் அறிவிப்பு குறித்து ஏஐடியுசி பொதுச்செயலாளர் ஆறுமுகம் கூறியதாவது: ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கும் போது அதில் நிறைய சிக்கல்கள் ஏற்படுகிறது. உதாரணமாக விபத்துகள் ஏற்படும் போது விபத்தில் சிக்கும் பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காது, அதேபோல் ஓட்டுநருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் உரிய இழப்பீடு கிடைக்காது. மேலும் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும் ஓட்டுநர்கள் முழுதிறனுடன் இருக்க மாட்டார்கள். அரசின் சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் ஆண்டு தோறும் 1500 பேருக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயிற்சி வழங்கப்பட்டு திறமையான பணியாளர்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் 15,000 பேர் இதில் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களை நேரடியாக நியமனம் செய்யலாம். மக்களுக்கு சேவை வழங்க பணியாளர்களை நியமிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் நேரடியாக நியமிக்க வேண்டும் என்றே கேட்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்கள் நியமனம்: டெண்டர் கோரியது எம்டிசி appeared first on Dinakaran.