நன்றி குங்குமம் டாக்டர்
கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி
மீண்டது தன்னம்பிக்கை
வெண்ணிலாவுக்கு இருபது வயது. கல்லூரியில் இளங்கலை முடித்திருக்கிறாள். அவளுக்கு சிறுவயது முதலே வலது கண் சிறியதாக இருக்கும் (microphthalmos), அதில் பார்வை கிடையாது. வலது கண்ணின் கருவிழி வெள்ளை நிறத்தில் இருக்கும். கல்லூரிப் பருவம் வரை அதைப்பற்றி பெரிதாக எண்ணாமல் இருந்தவளுக்கு தற்போது அப்படி இருக்க முடியாத நிலை. பிறருடன் பழகுவதிலும், வேலைக்கு முயற்சிப்பதிலும் அவள் தன் குறைபாட்டினை ஒரு மிகப்பெரிய தடங்கலாக நினைக்கிறாள். இது மிக இயல்பான ஒரு மனப்பான்மைதான். சில சமயங்களில் தன்னம்பிக்கையைக் குலைக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
அந்த விழியில் பிறவியிலேயே பார்வையில்லை என்பதை அவளும் அவளது குடும்பத்தாரும் எப்போதோ ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். மனத்தளவில் அதற்குத் தயாராகியும் விட்டார்கள். ஒற்றைக் கண்ணால் சிறப்பாக முடிக்கக் கூடிய படிப்பையே தேர்ந்தெடுத்திருந்தாள். பின்நாட்களில் அவள் தேர்ந்தெடுக்கப்போகும் வேலையும் அப்படித்தான் இருக்கும். இருந்தாலும் பிறரின் பார்வைகளையும், கேள்விகளையும் அவளால் சமாளிக்க முடியவில்லை. இதுவரை கறுப்புக் கண்ணாடி அணிவது, அந்த கண்களில் மட்டும் கறுப்பு நிற காண்டாக்ட் லென்ஸ் (tinted lenses) அணிந்து கருவிழியின் வெண்மை நிறத்தை மறைப்பது போன்றவற்றை முயற்சி செய்து பார்த்திருக்கிறாள். எதுவும் அவளுக்கு ஒத்துவரவில்லை.
காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தியதில் ஏற்கனவே சிறிதாக இருக்கும் அவளது கண்ணில் மேலும் ரத்த ஓட்டம் பாதித்து வலி, எரிச்சல் போன்றவை ஏற்பட்டன. அவளுடைய பிரச்சனைகளுடன் அவள் என்னை சந்தித்தபோது நான் அவளுக்கு corneal tattooing என்ற சிகிச்சையை பரிந்துரைத்தேன். அந்த சிகிச்சையில் அனுபவம் மிக்க கருவிழி சிறப்பு நிபுணர் ஒருவரிடம் அனுப்பி வைத்தேன்.
அவர் அவளுக்கு Charcoal dye பயன் படுத்தி சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். Corneal tatooing சிகிச்சை பல நூற்றாண்டுகளாக அறியப்பட்ட ஒரு சிகிச்சை தான். கருவிழி முழுவதுமாக வெள்ளை நிறத்தில் இருந்தாலோ, அல்லது கருவிழியின் ஒரு பகுதியில் வெள்ளை நிறப் புள்ளிகள்/ தழும்புகள் (corneal opacity) இருந்தாலோ இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. Aniridia என்ற பிறவியிலேயே கிருஷ்ணபடலம் இல்லாத நிலையை உடையவர்களுக்கும், கிருஷ்ண படலத்தின் நிறம் மிக லேசாக இருக்கும் (hypochromic iris) வேறு பிற நோய்களிலும் பார்வையில் அதிக கூச்சம் ஏற்படுவது இயல்பு. சிலருக்கு நரம்பியல் பிரச்சனைகள் காரணமாக பார்வை இரட்டையாகத் தெரியும். இத்தகைய நோயாளிகளுக்கும் இந்த சிகிச்சை
செய்யப்பட்டு வந்திருக்கிறது.
கண்களில் எந்தவிதக் குறைபாடும் இல்லாத நபர்களும் கூட சமீபமாக இத்தகைய மை சார்ந்த பொருட்களை பயன்படுத்தி உடலில் பச்சை குத்திக்கொள்வதைப் போலவே, கண்களின் வெள்ளை விழியிலும் ஓவியங்கள் வரைந்து கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். முறையற்ற வழியில் செய்யப்படும் சிகிச்சைகள் கண் பார்வைக்கு ஆபத்தாய் அமைந்துவிடக்கூடும் என்பதால் இவற்றைத் தவிர்ப்பதே நல்லது.
சமீபகாலமாக அழகியல் காரணங்களுக்காக இந்த சிகிச்சையை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சிகிச்சையில் வல்லவரான தோழி ஒருவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிகிறார். அவர் கார்னியல் டேடூயிங் சிகிச்சை குறித்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் அளவிற்கு பல நோயாளிகளுக்கு இந்த சிகிச்சையை அளித்தவர். அவர் முதன்முதலில் இந்த சிகிச்சையைச் செய்தது ஒரு பேருந்து நடத்துனருக்கு.
ஒற்றைக் கண்ணில் ஏற்பட்ட வெள்ளை நிறத் தழும்பால் பேருந்து நடத்துனர் மிகவும் மனமொடிந்து போய் இருந்திருக்கிறார். “டாக்டர்! நீங்க இப்ப இந்த தழும்பை மறைக்கிறதுக்கு ஏதாவது செய்யலைன்னா நான் தற்கொலை செய்துக்குவேன்” என்று அழுதிருக்கிறார். இந்த சிகிச்சையைப் பற்றி விளக்கி, நடத்துனர் சம்மதம் தெரிவித்ததும் சிகிச்சையைச் செய்திருக்கிறார் என் தோழி. அதன் விளைவு வெற்றிகரமானதாக அமைந்து மற்ற கண்ணைப் போலவே பார்வையற்ற கண்ணின் நிறமும் அமைந்துவிட்டது.
அதன்பின் பல நோயாளிகளுக்கு இந்த சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார். ஒருமுறை செவிலியர் ஒருவர் தன்னுடைய உறவினரை அழைத்து வந்திருக்கிறார். அவர் ஒரு ஆசிரியர். சிறுவயதில் கண்ணில் கல் பட்டதால் கருவிழி புண்ணாகி விட்டது. புண் ஆறியபோது அதன் ஒளி ஊடுருவும் தன்மை மாறிப்போய் வெண்மை நிறமாக ஆகிவிட்டது. முன்பு குறிப்பிட்ட வெண்ணிலாவைப் போலவே அவரும் பல கேள்விகளையும் கிண்டல்களையும் கடந்து வந்திருக்கிறார்.
ஒரு முறை சிறு குழந்தை ஒன்று அவரது கண்ணைப் பார்த்துவிட்டு பயத்தில் அலற, அவருக்கு மிகுந்த கவலையாகி விட்டதாம். அதன்பின் அவரும் டாட்டுயிங்க் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்து அவர் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டதாகக் கூறியிருக்கிறார். தன் அனுபவங்களையும் விவரித்து அரசு மருத்துவமனைக்கு நன்றி தெரிவித்து விரிவான மடலாக எழுதி மருத்துவமனை நிர்வாகத்திற்கும் ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்தார் அந்த ஆசிரியர். எப்பொழுதும் குற்றம் குறைகளையே கேட்டு வந்த மருத்துவர்களுக்கு அந்தப் பாராட்டு மிகுந்த ஆறுதலைப் பெற்றுத் தந்தது.
இப்படி கருவிழி வண்ணத்தை மாற்றுவதற்கென முன்பு India Ink போன்ற சாயங்கள் பயன்பட்டு வந்தன. அவை நீரில் கரையும் தன்மையை உடையவை என்பதால், சிலருக்கு நீண்ட நாட்கள் கழித்து அந்த வர்ணம் மங்கி விடக் கூடும். சில நோயாளிகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்ணின் கருவிழியில் tattooing செய்ய வேண்டியதாக இருந்தது. தற்சமயம் charcoal dye போன்ற எளிதில் நிறம் மங்காத சாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கருவிழியின் அடுக்குகளுக்கு இடையில் சுரங்கம் போன்ற சிறிய பாதையை அமைத்து, வர்ணமூட்டும் சாயங்கள் செலுத்தப்படுகின்றன. சமீபமாக femtosecond லேசர் சிகிச்சைகள் வந்த பின்பு அவையும் இந்த சிகிச்சைக்குப் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. கருவிழியின் ஒரு இடத்தை மட்டும் லேசர் கதிர்களால் தளர்த்தி அதன் அடுக்குகளின் இடையே சாயத்தை செலுத்தி விட முடிகிறது. இதனால் எதிர்காலத்தில் கருப்பு நிறம் குறையும் வாய்ப்பு அறவே இல்லை எனலாம்.
இது மட்டுமல்லாது இன்னும் பல cosmetic சிகிச்சைகள் கண் இழந்தவர்கள் சமூகத்தில் தாங்கள் இழந்த அடையாளத்தை மீட்டுத் தருகின்றன. சில மாதங்களுக்கு முன்பாக உறவினர் ஒருவரின் குடும்பத்தில் ஒரு வயதேயான குழந்தைக்குக் கண்ணின் உட்புறம் வெள்ளையாக ஏதோ தெரிகின்றது என்று கூறி குழந்தையின் புகைப்படத்தை அனுப்பியிருந்தனர். என் புலனத்தில் அந்த புகைப்படம் வந்து விழுந்தவுடன் எனக்குப் பேரதிர்ச்சி. ஏனெனில் அந்த குழந்தைக்கு பிறவியில் ஏற்படும் புற்றுநோய்களின் ஒன்றான Retinoblastoma ஏற்பட்டிருந்தது. இந்த நோய் ஏற்பட்டால் கண்ணையே அகற்றுவதுதான் ஒரே தீர்வு, இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகிவிடும். காலம் காலமாக கண் மருத்துவர்கள் கண்ணை அகற்றுவதற்கான (Enucleation) முன்னணிக் காரணங்களில் ஒன்றாக Retinoblastoma இருந்து வருகிறது.
அதன் பின் வெளியூரில் வசிக்கும் உறவினர், தங்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் காட்ட, அங்கு இதே நோய் உறுதிப்படுத்தப்பட்டது. ஒரு வயதுக் குழந்தைக்கு முழு கண்ணையும் அகற்ற வேண்டும், இல்லையெனில் குழந்தை உயிர் பிழைக்காது என்ற நிலை. மொத்த குடும்பமும் உடைந்து போனது. அறுவை சிகிச்சைக்குப் பின்பாக செயற்கைக் கண்ணைப் (prosthetic eye) பொருத்த முடியும், அதனால் எந்த விதத்திலும் பார்வை வராது, ஆனால் பார்ப்பதற்கு உண்மைக் கண் போலவே இருக்கும், குழந்தை வளர வளர சட்டைகள், செருப்புகள் இவற்றை மாற்றுவது போல் இந்தக் கண்ணின் அளவையும் மாற்றிக் கொள்ளலாம் என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். இதேபோன்ற வேறு காரணங்களால் கண்ணை இழந்து விட்டு பின் செயற்கைக் கண் பொருத்திக்கொண்டு இயல்பாக நடமாடும் மனிதர்களின் புகைப்படங்களையும் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அவற்றில் பார்ப்பதற்கு ஓரளவு இயல்பான முகத்தோற்றமே இருந்ததால், அந்த புகைப்படங்களை பார்த்தவுடன் பெற்றோர் வெகுவாக மீண்டு விட்டனர்.
விரைந்து அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.மருத்துவ வசதி எவ்வளவோ முன்னேறியுள்ள இக்காலத்தில் விபத்துகளும் சண்டைகளும் சம அளவில் அதிகரித்தே வருகின்றன. தீவிரமான காயங்களால் பாதிக்கப்பட்ட கண்ணினை முழுவதுமாக அகற்றுவதும் அவ்வப்போது செய்யும் சிகிச்சையாக இருக்கிறது. இத்தகைய செயற்கைக் கண்களில், நிரந்தரமாகப் பொருத்தக் கூடிய வகைகளும் இருக்கின்றன, தினந்தோறும் காலையில் கண்பந்து அமைந்திருக்கக் கூடிய குழிக்குள் (socket) பொருத்தி விட்டு, மாலையில் கழற்றி சுத்தப்படுத்தக் கூடிய வகையிலான செயற்கைக் கண்களும் இருக்கின்றன. இவை தவிர கருவிழியில் அதிக புண் ஏற்பட்டவர்களுக்கு Kerato prosthesis என்ற ஒரு கருவியும் வரப்பிரசாதமாய் இருக்கிறது.
இந்தக் கருவியின் மூலம் முழு அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவிற்கு பார்வையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத நபர்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்கின்றனர். கண்ணை இழந்தவர்கள் மற்றும் கண்களில் அழகியல் ரீதியான குறைபாடுகள் உடையவர்களுக்கு இத்தகைய சிகிச்சைகள் பேருதவி புரிகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை! கண்பார்வையை மீட்டுத் தரும் சிகிச்சைகளைப் போலவே இவையும் மிக முக்கியமானவை.
The post கண்ணைக்கட்டிக் கொள்ளாதே appeared first on Dinakaran.