×
Saravana Stores

ராஜகோபுர மனசு

பகுதி 1

உச்சிராத்திரியில், படுக்கையறையின் வெளிப்புற வலப்பக்க மாடத்தில் நின்றபடி, அருணாசலமலையின் இடப்பக்க ஓரத்தில், அழகாய் உதித்திருந்த மூன்றாம் பிறையையே, மன்னர் வீரவல்லாளன் பார்த்துக்கொண்டிருந்தார். வெற்றுமார்புடன் நின்றிருப்பவருக்கு லேசாக குளிர்ந்தாலும், மாடத்தைவிட்டு நகராமல், வைத்தகண் வாங்காமல் நிலவையே பார்த்துக் கொண்டிருந்தார். காரணம், துண்டுபிறையானாலும் நிலவு அத்தனை அழகாயிருந்தது. பெரும்இருளின் பின்னணியில் இருந்தாலும், அந்த மெல்லிய பிறைவெளிச்சத்தில், அருணைமலை அதைவிட அழகாயிருந்தது.

படுத்துறங்கும் ஈசனின் தோற்றம்கொண்ட அருணையை, நிலவின் பின்னணியில் காணும்போது, பிறையை ஜடாமுடியில் சூடிக்கொண்ட ஈசனின் ஞாபகம், மன்னருக்குள் பெருக்கெடுத்தது. தலைக்குமேல் கைகூப்பி வணங்கியபடி, ‘‘எம்சிவமே, எம்சிவமே’’ என உள்ளுக்குள் விசும்பினார். அந்த அரியகாட்சியினை காண, ‘‘ஏய், மல்லமா, சொக்கி, இங்கே பாருங்களேன்’’ என அழைத்தபடி மனைவியரை நோக்கித் திரும்ப, அக்காளும், தங்கையுமாய், பஞ்சணையில் கைமடித்து உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

‘‘உறங்கிவிட்டீர்களா?’’ என வாய்க்குள் முணுமுணுத்தபடியே நகர்ந்து, கட்டிலுக்கு அருகே போய், உறங்கும் மனைவிமார்களையே சில நொடிகள் பார்த்தபடி நின்றார். ‘`எப்பேர்பட்ட பெண்மணிகள்?’’ மனசுக்குள் சொல்லியபடி யோசனையில் ஆழ்ந்தார்.‘‘டெல்லி சுல்தானின் படைத்தளபதி மாலிக்காபூரிடம் போரிட்டு, படுதோல்வியுற்று, ஹோயசாலத்தின் தலைநகரான கன்னடதேச துவாரதசமுத்திரத்தை (இன்றைய ஹளபேடு) இழந்து, இந்த திருவண்ணாமலைக்கு நகர்ந்து, ஏழு வருடங்களாயிற்று. அனைத்தையும் இங்கு நிலைநிறுத்திக் கொள்ளவே இரண்டு வருடங்கள் ஓடி போய்விட்டது.’’‘‘ஆனால், இக்கட்டான அந்தக் காலங்களில் இவர்களின் ஒத்துழைப்பு அபாரமானது. போர்க்காலங்களில் தோளோடுதோள் நின்றதாகட்டும். தோற்றுத்துவண்டபோது, தளராமல் தன்னம்பிக்கை தந்ததாகட்டும்.

தலைநகரம் மாறி நகர்ந்தபோது, அரசிகள் என கம்பீரம் காட்டாமல், ஜனங்களோடு ஜனங்களாக நடந்து வந்ததாகட்டும். வந்த இடத்தில் ஜனங்களுக்குள் ஏற்பட்ட பூசல்களை, தேடிப் போய் நிதானமாகக் கேட்டு தீர்த்ததிலாகட்டும். ஜனங்களின் தேவைகளை சரியாக கண்காணித்து பூர்த்தி செய்ததிலாகட்டும். அப்பேரிடர் காலங்களில் பெருந்துணையாக இருந்தார்கள்.’’
‘‘ப்ப்ப்பா. எனக்கு மட்டுமல்ல. இந்த பாரத தேசத்திற்கே இது போதாத காலம்.

உள்ளுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டிருந்தவர்களை, அதற்கான தண்டனையாக, எங்கோ பாலைவனத்திலிருந்து வந்தவன், தலைமுடியைப்பிடித்து உலுக்குகிறான். கோயிலுக்குள் நுழைந்து கொள்ளையடிக்கிறான். செருப்புக்காலோடு கருவறைக்குள் நுழைந்து, வழிபட்டு சிலையை உடைத்து சின்னாபின்னமாக்குகிறான். அதை எதிர்ப்போர் எவரானாலும், அந்த வேசிமகன் வெட்டிச்சாய்க்கிறான்.’’ மன்னர் அந்த சிந்தனையிலும் பல்கடித்தார்.

‘‘போர்தர்மமின்றி, அறிவிப்பு ஏதுமின்றி தடாரென ஊருக்குள் நுழைந்து கொள்ளை அடிக்கிறவனை வேசிமகனென்று சொல்லாமல் வேறென்ன சொல்ல? ஹோய்சாலேஸ்வரர் கோயிலில் நடந்ததை, சிலைகளை சிதைத்ததை இப்போது நினைத்தாலும், கோபம் பொங்குகிறது. அதற்குப் பழிதீர்த்தே கொப்பளித்துக்கொண்டே தானிருக்கிறது. வீரவல்லாளன் கோபத்தில் முஷ்டியை முறுக்கினார். வீரவல்லாளன், ஹோய்சாலத்தின் மூன்றாம் தலைமுறை மன்னன்.

சிங்கத்தையே வேட்டையாடிய பரம்பரை. ஹோய்சாலம் என்றால் சிம்மத்தை வென்றவன் என்று பொருள். அரசின்கொடியே அதைக் கதையாய்ச் சொல்லும். அற்புதமான வீரவித்துக்களை கொண்ட ஹோய்சாலம், சோழர்களிடமே பெண் கொடுத்து, பெண்ணெடுத்த பரம்பரை. பாண்டியர்களிடமும் கொண்டான் கொடுத்தான் உறவுகொண்டவர்கள். வீரவல்லாளனின் தாத்தன் சோமேந்திர வல்லாளன், உடையார் ராஜராஜரையே நேரில் பார்த்து பழகியவர்.

ராஜேந்திரரிடம் நெருக்கம் கொண்டிருந்தவர். அவர்களின் அப்பன் – மகன் நேசத்தை, கதைகதையாய் தாத்தன் சொல்ல, சிறுவயதில் வல்லாளன் வாய்பிளந்து கேட்டிருக்கிறார். அவர்களின் கடல்விஜய வெற்றிக்கதைகளை கேட்டு, குறிப்பாக, அப்பனுக்கு துணையாகப் போர்களங்களில் நின்ற, ராஜேந்திரரின் வெற்றிக்கதைகளை, எவரும் படையெடுத்து வராதபடிக்கு, எல்லைச்சாமியாய் சோழஅரசுக்கு காவல்நின்ற கதைகளைக்கேட்டு, பிரமிப்பாகி மயிர்க் கூச்செறிந்திருக்கிறார். அந்த பிரமிப்பில், இளவயதில், வாள் பயிற்சியின்போது, மனதுக்குள் ‘‘நானே ராஜேந்திரன்’’ என வாள்வீசி நின்றிருக்கிறார். அதென்னமோ தெரியவில்லை. அவருக்கு ராஜராஜசோழனை விட, ராஜேந்திரசோழனே பிடித்திருந்தது.

அந்த ஈர்ப்பே அவரை ராஜேந்திரப்பித்தாக்கியது. அந்த ராஜேந்திரப்பித்தே வீரவல்லாளனை வீரத்தில் மேம்பட்டவனாக்கியது. போர்க்களத்தில் விளையாடவைத்தது. தன் தந்தையின் காலத்தில் சிதறுண்டு கிடந்த, அரசின் வடக்குப் பகுதிகளை, தன் பெரும்வெற்றிகளால் ஒன்றிணைத்த பெருமை, அவருக்கே உண்டு. அப்படி, தெற்குப் பகுதிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக, பாண்டியர்களுக்குள்ளான பஞ்சாயத்தை தீர்க்கப்போயிருந்த சமயத்தில்தான், போதாதகாலமாய், டெல்லியிலிருந்து மாலிக்காபூர், தலைநகரின்மீது, அறிவிப்பின்றி படையெடுத்து வந்திருந்தான்.

விஷயமறிந்து, விரைவாகத் தலைநகரம் திரும்பி வருவதற்குள், எல்லாம் முடிந்துபோயிற்று. தோள்துண்டைய விழ்த்து, இடுப்பில் கட்டிக் கொண்டு நின்று, தோல்வியை ஒத்துக்கொள்ளும் படியாயிற்று. அன்று நடந்தது, இப்போது, இந்த நொடியில், இந்த இரவில் நடப்பது போல, மன்னர் அவமானப்பட்டு, தலையைக் குனிந்துகொண்டார். மலைமோதி திரும்பி, மாடத்தில் நுழைந்த சில்லென்ற காற்று, அவரின் சிந்தனையை மாற்றியது. அவர் மீண்டும் நகர்ந்து, மாடத்திற்குப் போய், மலையைப் பார்த்தபடி நின்று கொண்டு பெருமூச்சு விட்டார்.

‘‘வருடாவருடத்திற்கு கப்பம் என்கிற தண்டனையோடு, மூட்டை மூட்டைகளாய், தங்கம், வெள்ளி, பொன் ஆபரணங்களையும், மந்தைமந்தையாய், யானை, குதிரை செல்வங்களையும் அபராதமாய் வாரிக் கொடுத்துவிட்டு, அழகான தலைநகரை விட்டு நகர்ந்து, கிட்டத்தட்ட நாடோடிபோல மனைவியர்களோடும், ஆடு, மாடு கன்றுகளோடு, தலைமேல் மூட்டைகள் சுமந்தபடி நடந்த ஜனங்களோடும், இந்த திருவண்ணாமலையை அடைந்து, அருண சமுத்திரமென இதன் பெயரை மாற்றி, இரண்டாம் தலைநகரமாக அறிவித்து, மொத்த அரசு நிர்வாகத்தையும் இங்கே நகர்த்தி, ஏழுவருடமாயிற்று. இந்த ஏழு ஆண்டுகளில் எத்தனை பாடுகள்? எத்தனை அவஸ்தைகள்?’’

‘‘அன்றுமட்டும், தலைநகரில் நானில்லாத சமயத்தில் நடந்த தாக்குதலின்போது, சரியான தலைமை அங்கிருந்திருந்தால். ராஜராஜனுக்கு அரணாக ஒரு ராஜேந்தரன் நின்றதுபோல, ஒரு மகன் நின்றிருந்திருந்தால்? ராஜேந்திரன். ப்பா… எப்பேர்பட்ட மன்னன். மகனாகவும் உத்தமன். மன்னனாகவும் அற்புதன். ஆனால் எனக்கு?’’ மன்னர் மீண்டும் நீண்ட பெருமூச்சு விட்டார்.
மன்னருக்கு இரண்டு மனைவிகள்.

மூத்தவள் மல்லமா என்கிற மல்லமாதேவி. இளையவள் பெயர் சல்லமாதேவி. மூத்தவளுக்கு விருபாக்க்ஷ வல்லாளன் என்கிற பிள்ளையுண்டு. பேரில்தான் விருபாக்ஷம். உண்மையில் சவலைப்பிள்ளை. வாழைப்பழத்தைக்கூட உரிக்கத் தெரியாத தத்தேறி. அவன் வீரிய வித்துக்களைக் கொண்ட ஹோய்சாலத்தின் சொத்தைவிற்று. தலைநகர சண்டையின்போதாவது சிறுவன். ஆனால், இப்போது இந்த விடலைப் பருவத்திலும் போர்க்கவசஉடை அணிய முடியாத நோஞ்சானாய்த் தானிருக்கிறான். பொறுப்பை ஏற்றுக்கொள்ள விரும்பாத கோழையாய்த் தானிருக்கிறான்.

‘‘இவனை வைத்துக்கொண்டு இந்த அரசை எப்படிக் காப்பாற்ற? ஹோய்சாலப் பரம்பரையை எப்படி வளர்க்க?’’ என ஒருநாள் புலம்பியபோதுதான், மூத்தவளின் அறிவுறுத்தலின்படி, அவளின் சம்மதப்படி, வாரிசுக்காக அவளது தங்கையையே திருமணம் செய்துகொண்டார். இளையவள் சல்லாமாதேவி அழகி மட்டுமல்ல, சற்று சமயோசிதமானவளும்கூட. அவளை திருமணம் செய்வதற்குமுன்பே, அவளது ெசய்கைகளில் மன்னர் வியந்திருக்கிறார். தலைநகரிலிருந்து அழுது புலம்பியபடி இடம்பெயர்ந்த குடிமக்களை சமாதானப்படுத்தும் விதமாக, கன்னியாக இருந்த போதும், பல்லக்கிலிருந்து இறங்கி, ஜனங்களோடு ஜனங்களாக, தோளில் கைபோட்டு முதலில் நடந்தவள் அவளே.

குழந்தைகளையும், நடக்கமுடியாத வயதானவர்களையும், கனிவோடு, படைவீரர்களின் குதிரைகளில் ஏற்றி அழைத்துவர, அவரிடம் வேண்டுகோள் வைத்தவள் அவளே. இடம் பெயர்ந்த சமயத்தில், குழந்தைகளை மனதில் வைத்து, ஆறு மாதங்களுக்கு கறந்தபாலை, காசுக்கோ, பண்டமாற்று முறையிலோ விற்பனை செய்யக் கூடாதென உத்தரவிடவேணுமென யோசனை தெரிவித்தவளும் அவளே.

அநேக சமயங்களில் அவளின் முடிவுகள் அறிவார்ந்ததாக இருக்கும். அதனால், அவளை தனிப்பட்ட முறையில் மன்னருக்கு மிகவும் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல், ஒரு வீரமகனை தனக்கான அரசவாரிசு பெற்றுத் தரப்போகிறவள் என்பதாலோ என்னவோ, மன்னருக்கு அவள்மீது சற்று கூடுதல் பிரியமிருந்தது. காதலுடன் சொக்கியென்றே அழைப்பார். ஆனால், விதி அங்கும் விளையாடியது. சல்லமாதேவியை திருமணம் முடித்து, இத்தனை வருடங்களாகியும், குழந்தைச்செல்வம் கூடவில்லை. அந்தணர்கள் வாக்குப்படி, எவ்வளவோ யாகவழிபாடுகள் செய்தாயிற்று. ஜோதிடர்கள் ஆலோசனைப்படி, எத்தனையோ பரிகார பூஜைகளும் செய்தாயிற்று. பலனில்லை. பலனில்லையா அல்லது நேரம் கூடி வரவில்லையா? தெரியவில்லை.

ஹோய்சாலத்தின் வீரவம்சம் தன்னோடு முடிந்து போய்விடுமோ என்கிற கவலையோடும், புத்திரபாக்கியம் வேண்டும் என்கிற வேண்டு தலோடும், மனைவியரோடு கிரிவலம் போய்க் கொண்டிருந்த ஒரு சமயத்தில், ஆதி திருவண்ணாமலையபடிவாரத்திலிருந்து, தடதடவென ஓடிவந்த யாரோவொரு ஜடாமுடிகிழவர், காவலை மீறி, அருகே வந்து, ‘‘பாக்கியம் உண்டு, இல்லேன்னு யாரு சொன்னது? வருவான். வந்து அவனே தருவான்.

அவன் வரணும்ன்னா நீ கோபுரம்கட்டு. காலத்துக்கும் பேர் சொல்லும் படியாக பிரகாரகோபுரம் எழுப்பு’’ என சன்னதம் வந்ததுபோல சொல்லிவிட்டு, வயதுக்கு மீறிய வேகத்தோடு. சரசரவென மலைமீது ஏறி காணாமல் போனார். சட்டென்று மலையேறி காணாமல் போனவரைக் கண்டு, திகைத்துப்போய் நின்ற மன்னர், ‘‘கோபுரமா? அதுவும் நானா? எப்பேர்பட்ட புண்ணிய தலமிது. வடக்கின் காசிபோல, தெற்கின் புனிதம் இந்த அருணாசலம்.

அப்பேர்ப்பட்ட புண்ணிய தலத்தின் கோபுரத்தை, பஞ்சத்துக்கு பயந்து இடம் பெயரும் மக்களைப் போல, போரில் தோல்வியுற்று இடம் பெயர்ந்த நானா கட்டுவது?’’ என்ற சலனத்தோடு நிமிர்ந்தபோது, நிலைகளிலேற்றிய அகல்விளக்குகளின் வெளிச்சத்தால் அழகாக மின்னிய கிளிகோபுரம் கண்ணில் பட்டது. முன்னூறு வருடங்களுக்கு முன் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட, எண்பத்தியொரு அடி உயரம் கொண்ட, அந்த கோபுரத்தின் கம்பீரஅழகு, வீரவல்லாளனை மயக்கியது. ராஜேந்திரசோழன் ஈர்த்ததுபோல, அவன் கட்டிய கோபுரமும் ஈர்த்தது. ‘‘எனது ராஜேந்திரன் கட்டிய கோபுரம்’’ என பிரியத்துடன் கிளிகோபுரத்தை பார்த்த மன்னர், ‘‘சரி, இதுபோல் ஒருகோபுரம் நாமும் கட்டினால் தானென்ன? ஒன்றல்ல, நான்கு திசைக்கும் கோபுரங்கள் கட்டினாலென்ன? என விழிகள் விரித்து மெல்லிதாக ஆசைப்பட்டார்.

அருணாசல ஈசன் லேசுபட்டவனில்லை. கண்டாரை, அந்த கணத்திலேயே அடிமை கொள்ளும் கள்வனவன். அவனுக்குரியவர்களை ஈர்த்து, அவனுக்கான வேலைகளில் வயப்படுத்துவதில் வல்லவன். வீரவல்லாளன் மறுநாளே அமைச்சர் பெருமக்களைக் கூட்டினார். தன்ஆசையை விவரித்தார். ‘‘கிளிகோபுரம்போல நான்கு கோபுரங்கள் கட்டவேண்டும். ஆனால் கிளிகோபுரத்தின் உயரத்தைத் தாண்டக்கூடாதென’’ ராஜேந்திர சோழன் மீது கொண்ட மரியாதையில் கட்டுப்பாடு விதித்தார்.

‘‘இதன் சாதகபாதகங்களைப் பேசி, ஒரு வாரத்தில் சபை எனக்கு பதில் சொல்லட்டும்’’ என உச்சஸ்தாயியில் கட்டளையிட்டார். மறுநாள் சபை கூடியது, காலையும் மாலையும் கூடி, விவாதித்தது. அங்கு கோபுரம் கட்டுவதற்கான சாதகபாதகங்கள் விவாதிக்கப்பட்டது. தஞ்சையிலிருந்தும், மாமல்லையிலிருந்தும், சிற்பிகளும், கருமார்களும், வரவழைக்கப்பட்டனர்.

கட்டுமானச் செலவுகள் குறித்தும், கோபுரம் நிர்மாணிக்க எத்தனை காலமாகுமென்பது குறித்தும், கேள்விகள் எழுப்பப்பட்டன. சபை எல்லாவற்றையும் குறிப்பெழுதி வைத்துக்கொண்டது. குறித்துக்கொண்ட விவரங்களை வைத்துக்கொண்டு, விரிவாகப் பேசி, அரசுநிர்வாகம் திமிலோகப்பட்டது. முடிவாக, மன்னர்முன் நின்ற சபை, கணக்கு வழக்குகளை காண்பித்து, நிதிவசதியில்லையென உதடுபிதுக்கியது.

கருவூலத்தின் கையிருப்புக் கணக்குகளை காண்பித்து, ‘‘இதுவே கையிருப்பு’’ என கைவிரித்தது. ‘‘இப்போதுதான் தலைநகரை மாற்றி, பல கட்டுமான நிர்மாணங்களை முடித்து, ஓரளவிற்கு அமர்ந்திருக்கிறோம். அதற்குள் இவ்வளவு பெரியசெலவை, அதுவும் நான்கு கோபுரக்கட்டுமானப் பணியை, நிர்வாகம் தாங்காது. ஏற்கனவே நொந்துபோயிருக்கிற மக்களின் ஆதரவு இதற்கு இருக்காது.

‘‘இதென்ன தேவையில்லாத வேலை’’ என்கிற குமைச்சல் மக்கள் மத்தியில் எழும்பும். அது நல்லதில்லை. அதுவுமில்லாது, வருடாவருடம் கப்பம் வாங்குகிற டெல்லி சுல்தானுக்கு, இது கண்ணை உறுத்தும். புதுத் தலைநகரில் ஏதோ பெருவளம் பெருகிவிட்டது போல என்கிற எண்ணத்தைத் தந்து, மேலும் கப்பத்தொகையை கூட்டவைக்கும். அது மேலும் ஆபத்து’’ என எச்சரித்தது.
‘‘மற்றவை இனி மன்னர் முடிவு’’ என குனிந்து வணங்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தது. அத்தனையையும் அமைதியாகக் கேட்டபடி அமர்ந்திருந்த மன்னர், ‘‘அப்போது கோபுரம் கட்டுவதற்கான மாற்றுவழியே கிடையாதா?’’ என கர்ஜித்தார். இல்லையென்கிற பதிலை நேரடியாகக் கூறாமல், தலைகுனிந்தபடி சபை அமர்ந்திருந்தது.

‘‘ஏனில்லை, உண்டு’’ என்று கம்பீரமாய் அரசியர் பக்கத்திலிருந்து குரல்வர, மொத்தசபையும் குரல்வந்த திசைநோக்கி திரும்பிப் பார்த்தது. அங்கு இளையராணி சல்லமாதேவி நின்று கொண்டிருந்தார். தன்னை திரும்பிப் பார்த்த மூத்த அமைச்சர்களை கைகள்கூப்பி வணங்கினார். மரியாதை நிமித்தமாக எழும்பி நிற்க முயன்ற, இளையவர்களை, ‘‘அமருங்கள்’’ என சைகையில் கைகாட்டியபடியே, ‘‘நிச்சயம் நம்மால் கோபுரம் கட்டமுடியும்’’ அழுத்தமாகக் கூறினார்.

குமரன் லோகபிரியா

The post ராஜகோபுர மனசு appeared first on Dinakaran.

Tags : Rajagopura Manasu ,King ,Veeravallalan ,Arunachamalai ,Rajagopura ,
× RELATED ராஜகோபுர மனசு பகுதி-7