×
Saravana Stores

மனவாசி

சீரடியில் வேப்ப மரத்தடியில் தவம் செய்துகொண்டிருந்த இளைஞரான பாபா திடீரென்று மறைந்துபோனார். எங்கே போனார், ஏன் போனார் என்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சீரடிக்குத் திரும்பி வந்தார். அப்படி இரண்டாவது முறையாக பாபா வந்ததும் சுவையான நிகழ்ச்சிதான். ஔரங்காபாத் தூப்கேடா (தூப்காவ்) வைச் சேர்ந்த சாந்த்பாடீல் பெரிய தனவந்தர். ஒருமுறை தம்முடைய சொந்த ஊரிலிருந்து ஔரங்காபாத் சென்றுகொண்டிருந்தபோது, அவர் சவாரி செய்த குதிரையை வழியில் புல் மேய்வதற்காக விட்டார். அதனால் மேய்வதற்காகச் சென்ற குதிரையைத் தொலைத்து விட்டார்.

அந்தக் குதிரையின் மேல் மிக அன்பு கொண்டிருந்த சாந்த்பாடீல் இரண்டு மாதங்களாக அதனைத் தேடிக்கொண்டிருந்தார். எனினும் குதிரையைப் பற்றிக் கொஞ்சமும் தகவல் பெற இயலவில்லை. ஏமாற்றத்துடன் குதிரைச் சேணத்தைத் தன் தோளில் போட்டுக் கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு மாமரத்தின் அடியில் பக்கிரி (விசித்திர மனிதர்) ஒருவர் உட்கார்ந்து இருந்தார். கஃப்னி என்ற நீண்ட அங்கியையும், தொப்பியையும் அணிந்து கொண்டு, கையில் சட்கா என்னும் குட்டையான பருமனான ஒரு தடியையும் வைத்திருந்தார். ஹூக்கா குடிப்பதற்குத் தயார்செய்து கொண்டிருந்தார்.

சாந்த்பாடீல் அவ்வழியாகச் செல்லவும் பக்கிரி அவரைக் கூப்பிட்டார். புகைபிடித்துவிட்டு, கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் என்று சொன்னார். ’ஏன் குதிரைச் சேணத்தை தோளில் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டார். அதற்கு சாந்த்பாடீல் தமது தொலைந்து போன குதிரையைப் பற்றிச் சொன்னவுடன், பக்கிரி சிரித்துவிட்டு, ‘பக்கத்திலுள்ள சோலையில் போய்த் தேடுங்கள்’ என்று சொன்னார். அங்கு சென்று பார்த்தபோது, தாம் சற்று முன்பு தேடியபோது காணாத குதிரை, இப்போது அங்கு நிற்பதைக் கண்டு வியந்து, மகிழ்ச்சியுடன் குதிரையைக் கூட்டிக் கொண்டு பக்கீரிடம் வந்தார். அந்த பக்ரி ஒரு சாதாரண மனிதரல்ல. ஆனால் ஓர் அவுலியா (ஞானி) என்று எண்ணினார்.

பக்கீரதம்முடன் புகைபிடிக்கும்படிக் கூறினார். புகையிலை, புகைக்குழாய் இருந்தும் அதைப் பற்ற வைப்பதற்கு நெருப்பும், புகையை உறிஞ்சுவதற்குப் பயன்படும் துணியை நனைப்பதற்குத் தண்ணீரும் வேண்டும். பக்கிரி தமது கத்தியை எடுத்துத் தரையில் கீறினார். அதிலிருந்து எரியும் ஒரு நிலக்கரி நெருப்புத் துண்டம் வந்தது. அதை அவர் குழாய்க்குள் இட்டார். பின்னர் தம் சட்காவைத் தரையில் அடித்தார். தண்ணீர் கசியத் தொடங்கியது. அதில் துணியை நனைத்து வடிகட்டியாக உபயோகித்துத் தாம் புகைபிடித்துவிட்டு சாந்த்படீலுக்குக் கொடுத்தார்.

பக்கிரியின் செயலைக் கண்டு ஏற்கனவே ஆச்சரியமடைந்த படீல், புகைக்குழாயை மஹானின் ஆசியாகக் கருதி ஏற்றுக்கொண்டார். அவரது திருவடிகளைத் தொட்டு வணங்கித் தம் வீட்டிற்கு எழுந்தருள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பக்கிரி அதற்கு இசைந்து பாடீலின் வீட்டுக்குச் சென்றார்.

சிறிது காலத்திற்குப் பிறகு பாடீலின் மருமகனுக்கு சீரடியில் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. பாடீல் பக்கீரையும் திருமணத்திற்கு வரும்படி அழைக்கவே, பக்கீரும் திருமணக் கோஷ்டியுடன் சீரடி வந்தார். வண்டியிலிருந்து இறங்கிய பக்கீரைப் பார்த்தவுடன் மஹல்சாபதி ‘யா…சாயி’ (சாயி வரவேண்டும்) என்று கூப்பிட்டார். அன்றிலிருந்து மஹாசமாதி அடையும் வரை சீரடியிலே சாயிபாபா இருந்தார்.

பாபாவின் அற்புத லீலையோடு ஷேகாவைச் சேர்ந்த ஸ்ரீகஜானன் மஹராஜ் சத்குருவும், அக்கல்கோட் ஸ்ரீஸ்வாமி ஸமர்த்தரும் செய்த இரு லீலைகளையும் இங்கு காணலாம்.
பகவானின் திருவிளையாடல்களை உபன்யாசமாகவும், பஜனைப் பாடல்களைப் பாடும் பாடகராக விளங்கும் கோவிந்தபுவா ஷேகாவ் கிராமத்திலுள்ள சிவாலயத்திற்கு பஜன் செய்வதற்காக வந்திருந்தார். அவருடைய அடங்காத குதிரையையும் கூட்டி வந்து, ஆலயத்தின் வாசலில் கட்டிவைத்தார். அந்தக் குதிரை ஆவேசமான குதிரையாகும். சில சமயம் அது கட்டுகளை அறுத்துக்கொண்டு தெருவில் ஓட ஆரம்பித்துவிடும். கண்ணில் கண்ட அனைத்துப் பொருள்களையும் மிதித்து நாசமாக்கிவிடும்.

அதனால் கோவிந்தபுவா மிகுந்த மனவேதனையடைந்தார். அக்குதிரையை பழக்கப்படுத்த முயற்சி செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. அந்த அடங்காத குதிரையை யாரும் வாங்குவதற்குத் தயாராய் இல்லை. இலவசமாக் கூட யாருக்கும் கொடுக்க முடியவில்லை. எனவே, அதைக் கட்டி வைப்பதற்கு முரட்டுச்சங்கிலி ஒன்றைக் கொண்டு வருவார். இப்பொழுது அந்தச் சங்கிலியைக் கொண்டு வர மறந்துவிட்டார். எனவே, மிகுந்த மனக்குழப்பத்துடன் இறைவனை வேண்டிக் கொண்டு ஒரு சாதாரண கயிற்றில் குதிரையைக் கட்டினார். பின் உபன்யாசம் செய்வதற்குச் சென்று விட்டார். உபன்யாசம் முடிந்தவுடன் தூங்கவும் போய்விட்டார்.

குதிரை பற்றிய நினைவே இல்லை. திடீரென்று தூக்கத்தில் இருந்து குதிரை ஞாபகத்துடன் பதைபதைத்து எழுந்தார். குதிரை கட்டியிருந்த இடத்துக்கு வேகமாக ஓடி வந்தார். ஆனால், அங்கு குதிரை அமைதியாக நின்று கொண்டிருந்தது. ஆச்சரியத்துடன் குதிரையை நெருங்கி வந்தார். குதிரையின் கால்களுக்கு இடையில் கஜானன் மஹாராஜ் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. கோவிந்தபுவா சற்குருவின் திருவடிகளை வணங்கிப் பணிந்தார்.

அப்போது மஹராஜ் எழுந்து குதிரையைப் பார்த்து, ‘ஹே நண்பா! உன்னுடைய தீய செயல்களை நிறுத்திவிடு. நல்ல குணமுடையவனாக இரு. சிவாலயத்தின் ஈசன் முன்னால் நீ நின்று கொண்டிக்கிறாய் என்பதை நினைவில் கொள். இனி யாரையும் நீ துன்புறுத்தக் கூடாது’ என்று ஆணையிட்டு சென்று விட்டார். கோவிந்தபுவா ஸ்ரீ மஹராஜ் சென்ற திசைநோக்கி, ‘ஸ்வாமி இக்குதிரையைப் போலவே என்னையும் ஆசிர்வதியுங்கள்’ என்று வேண்டிக் கொண்டார்.

அக்கல்கோட் மஹாராஜாவின் பட்டத்து யானை கவ்வார் மஹீபதி கோயிலுக்கருகில் உள்ள கொட்டகையில் கட்டப்பட்டிருக்கும். அந்த யானைக்கு மதம் பிடித்து விட்டது. எனவே, மஹாராஜா ஸ்ரீஸ்வாமி ஸமர்த்தரை தரிசனம் செய்துவிட்டு, ’என் யானையைச் சுட்டுவிடப்போகிறேன்’ என்றார். ‘வேண்டாம்! நான் வருகிறேன்’ என்றார் ஸமர்த்தர். அந்த யானையின் முன்சென்றார் ஸமர்த்தர், ‘ஏ! பைத்தியக்கார யானையே! வெறி வந்து விட்டதா உனக்கு! உன் அகந்தையை விட்டொழி!’ என்று ‘சில கெட்ட வார்த்தைகளால்’ வசைபாடினார். இதைக் கேட்டவுடன் அந்த யானை தன் துதிக்கையால் ஸ்ரீஸ்வாமி ஸமர்த்தரின் பாதங்களை வருடி, கண்ணீர் சிந்தியது. அந்த அற்புதமான காட்சியை மக்கள் கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

இந்நிகழ்ச்சிகளில் பலவித குறிப்புகள் உள்ளன என்று ஆச்சார்ய E. பரத்வாஜா தன்னுடைய ‘SAIBABA THE MASTER’ என்னும் புத்தகத்தில் ‘SAIBABA THE ETERNAL SYMBOL’ அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். அதாவது ‘பாபா’ குதிரையை மீட்டுக் கொடுத்ததன் மூலம், தன்னை ‘சத்குரு’ என்று தெரிவித்துக்கொண்டார் (thereby made himself known for what he is, a SADGURU). மனமே மனிதனை தனது லட்சியத்திற்குக் கொண்டு செல்லும் குதிரை.

ஆனால், அவன் அதை சரியானபடி அடக்கத் தவறினால், அது உலகியல் வாழ்வு என்ற காட்டில் திசை தவறிச் செல்லும். ஒரு மனிதன் மிகத் தீவிரமாக உண்மையைத் தேடும் போது, அவனுக்கு நிச்சயமாக ஒரு பரிபூரணமான குருவோடு தொடர்பு ஏற்பட்டு, அவர் அவனுக்கு அவனது ஆத்மீகப் பயணத்துக்குரிய குதிரையை மீட்டுக் கொடுப்பார். புத்தமதத்தின் Ten Bulls or Ten Ox Herding என்பது இதே உண்மையைக் குறிக்கிறது” என்று கூறுகிறார்.

மயக்கமாகிய சுழற்காற்றினால் மனமாகிய குதிரை என் சொல்லைக் காதில் வாங்காமல் பல வழியில் அலைகின்றது.
‘‘மாளா மயல்சண்ட மாருதத்தால் மனவாசி என்சொல்
கேளா தலைகின்ற தால் ஒற்றி மேவும் கிளர் ஒளியே”
என்று நெஞ்சின் நிலையை இறைவர்பால் எடுத்தோதுகிறார் வள்ளல் பெருமான்.

(மனவாசி – மனமாகிய குதிரை)
அத்தகைய மனமாகிய குதிரையை தீயதன் பக்கம் செல்லவிடாமல் நல்லதன்பால் செலுத்துவது அறிவு ஆகும். குதிரை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் (குதிரைப் பாகன்) போல் மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்பார் பரிமேலழகர் (மனம் – குதிரை; அறிவு – குதிரைப் பாகன்).
அடக்குவதற்கு அரிதான ஐம்பொறிகளைத் திருவள்ளுவர் யானைகளாக உருவகம் செய்கிறார். அதனைக் கலங்காத நெஞ்சம் என்னும் அங்குசத்தால் அடக்கி ஆளுதல் வேண்டும். அவ்வாறு ஆள்பவரே பெரியோர் ஆவர்.

‘‘உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.’’ என்பது குறள்.
இதனையே திருமந்திரம்,
‘‘முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவெனும் தோட்டியை
வைத்தேன்’’
என்று கூறும்.

(வேழம் – யானை; தோட்டி – யானையை அடக்கும் அங்குசம்).‘‘நாள்தோறும் பெரியோர் அறிவுரைகளை அங்குசமாகக் கொண்டு உள்ளம் என்னும் யானையைத் தடுத்து நிறுத்தி அறமும் பொருளும் வழுவாமல் தாம் எண்ணியவற்றை முடிக்க வேண்டும்.’’ என்பது அகநானூற்றில் (286) ஓரம்போகியார் கூற்று.இங்ஙனம், மனத்தை குதிரை என்றும், யானை என்றும் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட பௌத்த ஜென் மரபில் காளை என்பது அடக்க வேண்டிய காட்டு மனம் என்று குறிப்பிடப்படுகிறது.

சீனக் குருவான காகுவான் 12ஆம் நூற்றாண்டில் தாவோயிசத் தத்துவத்தின் காளைகளை அடிப்படையாகக் கொண்டு பத்து காளைகளின் படங்களை வரைந்தார். பின்னர் அவற்றுக்குரிய கவிதைகளையும், உரைகளையும் எழுதினார். 1957ல் பால் ரெப்ஸ் (Paul Reps), நியோஜன் சென்ஸகி (Nyogen Senzaki) எழுதிய Zen Flesh Zen Bones என்னும் புத்தகத்தில் பத்து காளைகள் பற்றிய விளக்கம் வெளியிட்ட பிறகு தான் மேற்கத்திய நாடுகளில் இம்முறை பரவலாக அறியப்பட்டது.

பத்து காளைகள் என்பது ஜென் மரபில் தியான பயிற்சிக்கான ஆரம்பகால உருவகங்களில் ஒன்றாகும். காளையைத் தேடி, அதன் கால் தடங்களைக் கண்டறிந்து, அதனை உணர்ந்து, அதனைப் பிடிப்பது. பின் அதனை அடக்கி அதன் மீது சவாரி செய்து வீடு திரும்புதலாகும். ஒரு மேய்ப்பன் தொலைந்து போன தன் காளையைத் தேடுவது, சாதகன் ஒருவன் ஆத்ம ஞானம் அடைய வேண்டி மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தோடு ஒப்பிடப்படுகிறது.

(A herdman’s serach for his missing ox is likened to an individual’s journey towards enlightment). காளையைத் தேடி கண்டுபிடித்து வீடு திரும்புதல் ஆத்ம ஞானமாகிய தன் சுயத்தை அடைதலாகும். மனதின் இயல்பிற்கு விழிப்புணர்வின் நிலைகளாக இந்த பத்துக் காளைகள் குறிப்பிடப்படும். இந்த நிலைகளின் மூலம் சமதா (அமைதியான) தியானத்திற்கு முன்னேறுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஸ்ரீகஜானன் மஹராஜ் குதிரையை அடக்குதல், ஸ்ரீஸ்வாமி ஸமர்த்தர் யானையை அடக்குதல். இவ்விரண்டு லீலைகளும் நம் ஐம்புலன்களை அடக்கி ஆளுதல் வேண்டும் என்பதைத் தெரிவிப்பன. ‘அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை’ என்கிறது வள்ளுவம்.பாபாவின் அற்புதத்தில் குதிரையை மீட்டு திரும்புதல், மனத்தின் சுயத்தைக் (ஆன்ம ஞானம்) கண்டறிதல் என்னும் தத்துவப் பொருளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

‘‘எவன் ஒருவனுக்குப் பற்றுணர்வுத்திறம் உள்ளதோ, எவனது மனம் அடக்கியாளப் படுகிறதோ, எவனது உணர்வுகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ அவன் சாரதியின், நல்ல குதிரையின் செயலை ஒத்து, சேரும் இடத்தையடைகிறான். அதாவது ஆத்ம அனுபூதி என்ற நிலையைப் பெறுகிறான்’’ என்பது பாபாவின் அருள்வாக்கு. சாயி சரணம்.

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

 

The post மனவாசி appeared first on Dinakaran.

Tags : Manavasi ,Baba ,Seeradi ,
× RELATED முதல்வர் பதவியை ராஜினாமா...