×

போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி

சேலம், ஜூலை 26: ஐந்து ஆண்டுக்கு பிறகு சேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடக்கிறது. இதற்காக அரங்குகள், கடைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சேலத்தில் ஆடிப்பண்டிகையையொட்டி போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி விழா நடத்தப்படும். ஆடித்திருவிழாவை காணவரும் பக்தர்கள் அரசு பொருட்காட்சியும் கண்டுகளிப்பார்கள். அதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பண்டிகையின்போது பொருட்காட்சி நடத்தப்படும். இந்த பொருட்காட்சி 60 நாட்களுக்கு மேலாக நடக்கும். அரசு பொருட்காட்சி நடக்கும் நாளில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தருவார்கள். பொருட்காட்சியில் அரசுத்துறையின் அரங்குகள், பெண்கள் ஆபரண, அலங்கார பொருட்கள் கடைகள், டெல்லி அப்பளம், பஜ்ஜி கடைகள், ராட்டினம் என ஏராளமான விளையாட்டு சாதனங்கள் இடபெறும்.

இந்த நிலையில் சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டிடம் மிகவும் பழுதானதால் அக்கட்டிடத்தை இடித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹96 கோடியில் புதியதாக ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பணிக்காக கடந்த 2019ம் ஆண்டு முதல் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி விழா நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள மாநகராட்சி சொந்தமான காலி நிலத்தில் அரசு பொருட்காட்சி விழா நடத்தப்பட்டது.

கடந்தாண்டு ஜூலையில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா செய்யப்பட்டது. இதன் பின்னர் போஸ் மைதானம் சீரமைக்கப்பட்டது. ஐந்து ஆண்டுக்கு பிறகு மீண்டும் நடப்பாண்டு போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக ஆங்காங்கே குழிதோண்டி கம்புகள் கட்டி அரங்குகள், கடைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஓரிரு நாட்கள் நிறைவடைந்துவிடும். வரும் ஆக.7ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஆடித்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதற்குள் அரசு பொருட்காட்சி திறப்பு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி appeared first on Dinakaran.

Tags : Government Exhibition ,Bose Maidan ,Salem ,Salem Bose Grounds ,
× RELATED அரசு பொருட்காட்சியில் குவிந்த மக்கள்