×

தன்னம்பிக்கையுடன் துணிந்தேன் வெற்றி பெற்றேன்!

நன்றி குங்குமம் தோழி

அழகுக்கலை நிபுணர் ப்ரியா

‘‘திருமணம் போன்ற நிகழ்வுகளில் மணப்பெண்ணுக்கு மட்டும்தான் அலங்காரம் என்ற நிலை இப்போது மாறிவிட்டது. வீட்டில் உள்ள அனைவருமே மேக்கப் போட்டுக் கொள்ள விரும்புகிறார்கள். அது திருமணம் மட்டுமில்லை… எந்த ஒரு சுபநிகழ்ச்சி என்றாலும், இவர்கள் மேக்கப் போட்டுக் கொள்ளவே விரும்புகிறார்கள்.

கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு மட்டுமில்லாது பிறந்தநாள், மெஹந்தி விழா, நிச்சயதார்த்தம், நண்பர்களின் சந்திப்பு, பார்ட்டிகள் என அனைத்து விழாக்களுக்கும் அந்தந்த இடத்திற்கு ஏற்ப மேக்கப் போட்டுக் கொள்வது என்பது சாதாரண வழக்கமாகிவிட்டது. இதனால் அழகுக் கலைஞர்கள் மற்றும் அதன் நிலையங்களுக்கான அவசியம் அதிகமாகிவிட்டது’’ என்கிறார் காஞ்சிபுரத்தில் அழகுக்கலை நிலையத்தை பல வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வரும் ப்ரியா.

‘‘ஒவ்வொரு பெண்ணும் தன்னை அழகாக காட்டிக் கொள்வது மிகவும் அவசியமானதா என்று கேட்டால், நான் மிகவும் அவசியம் என்றுதான் சொல்வேன். ஒருவரின் பளிச்சென்ற தோற்றம் அவர்களுக்குள் தன்னம்பிக்கையை பல மடங்கு அதிகரிக்கும். தற்போது மணப்பெண், குடும்ப பெண்கள் மட்டுமில்லை, மணமகனுக்கும் மேக்கப் செய்கிறார்கள்’’ என்றவர், அழகுக்கலை குறித்தும் மணப்பெண் அலங்காரம், டாட்டூ மற்றும் மணப் பெண்ணுக்கான ஆரி ப்ளவுஸ்கள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

‘‘நான் இந்த துறைக்கு வரும் முன் ஆசிரியர் பயிற்சி முடித்து சில காலம் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தேன். எனக்கு அழகுக்கலை மேல் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாகத்தான் அதற்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். முழுமையாக அந்தக் கலையை கற்றுக் கொண்டேன். பின்னர் அழகுக்கலை மீது கொண்ட ஈடுபாடு காரணமாக அதற்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து அழகுக்கலையை கற்றுக் கொண்டேன்.

எட்டு வருடங்கள் ஆசிரியர் பணியோடு பகுதி நேரமாக அழகுக்கலையை தொடர்ந்து வந்தேன். பிறகு சொந்தமாக ஒரு பார்லர் ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் துவங்கியதுதான் ‘ப்ரியா பியூட்டி பார்லர்’. தற்போது ஆறு வருடங்களாக இதனை காஞ்சிபுரத்தில் வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். மணப்பெண் அலங்காரம் பார்லரில் செய்வதோடு விழா நடைபெறும் வெளியிடங்களுக்கும் சென்று செய்து வருகிறேன்’’ என்றவர் அழகுக்கலை குறித்து மக்கள் மனதில் உள்ள பொதுவான எண்ணங்களை விவரித்தார்.

‘‘திருமணம் என்றால் மணப்பெண் தனித்து தெரிய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இன்று திருமணத்திற்கு வருபவர்கள் அனைவரும் மணப்பெண்ணுக்கு நிகராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களும் மேக்கப், உடை மற்றும் ஆபரணங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். மேக்கப்பில் புடவை கட்டுதல், மெஹந்தி டிசைனிங் பிளவுஸ், கூந்தல் அலங்காரம், ஃபேசியல், ப்ளீச்சிங், பெடிக்யூர், மெனிக்யூர், புருவம் திருத்துதல், ஆயில் மசாஜ், சருமம் மற்றும் முடி பராமரிப்புகள், ஹென்னா கண்டிஷனர், டையிங், வாக்ஸிங், த்ரெட்டிங் போன்ற ஏராளமான அழகு முறைகள் உள்ளன.

அவை அனைத்திற்குமே தற்போது நல்ல வரவேற்பு இருக்கிறது. தன்னை அழகுப்படுத்திக் கொள்ள விரும்பாத பெண்களே கிடையாது. 18 வயது இளம் யுவதிகள் முதல் 90 வயது பாட்டி வரை தங்களின் வயதிற்கு ஏற்ப அழகாக தெரிய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் இதற்கு வயது என்பது ஒரு தடையே இல்லை என்று தான் சொல்லணும்’’ என்றவர், இன்றைய மணப்பெண்கள் தங்களின் அலங்காரம் எவ்வாறு இருக்கு வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை விவரித்தார்.

‘‘திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். வாழ்வில் ஒரே முறை நிகழும் மகிழ்ச்சியான வைபவம் என்பதால் மணப்பெண்ணுக்கு அன்றைய நாள் மிகவும் முக்கியமான நாட்களில் ஒன்றாக இருக்கிறது. திருமணத்தில் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே தான் ஆர்வத்துடன் பார்க்க விரும்புவார்கள். மணப்பெண்ணுக்கான அலங்காரம் செய்வது என்பது ரொம்பவும் ஸ்பெஷலானது. இப்பொழுதெல்லாம் காலத்திற்கு ஏற்ற நவீன மாற்றங்களைச் செய்து மணப்பெண்களின் அலங்காரத்தை மெருகேற்ற அழகுக்கலை நிபுணர்கள் பல்வேறு புது உத்திகளை பயன்படுத்துகிறார்கள்.

அவரவர் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ப மணப்பெண்ணின் நிறத்திற்கேற்ப ஃபவுண்டேஷன் தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் அவர்களுக்கு ஏற்ற பவுடர், லிப்ஸ்டிக் போட வேண்டும். கண்களைச் சுற்றி ஐ-லைனர் வரையும் போது மிகுந்த சிரத்தையுடன் அழகுடனும் வரைய வேண்டும். சிலருக்கு சருமத்தில் சின்ன தழும்பு இருக்கும் அதை கன்சீலர் கொண்டு மறைக்க வேண்டும். புடவை நிறத்திற்கேற்ப ‘ஐ-ஷேடோ’வை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

பொதுவாக மணப்பெண்ணின் அழகுக்கு அதிகம் மெருகூட்டுவது என்பது அவரது சிகையலங்காரம் தான். அதில் அவரது முக ஜாடைக்கேற்ற ஹேர்ஸ்டைலை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் மணப்பெண் அழகான தேவதை போன்று ஜொலிப்பார். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மணப்பெண்ணை அழகாகக் காட்ட வேண்டியது அழகுக்கலை நிபுணர்களின் பொறுப்பு’’ என்றவர் அழகுக்கலை நிலையம் துவங்குவதற்கான அடிப்படை தேவைகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

‘‘அழகுக்கலையை உங்களின் துறையாக தேர்வு செய்தால், முதலில் ஒரு நல்ல தரமான அழகு நிலையத்தில் பயிற்சி பெற வேண்டும். அப்போதுதான் அனுபவ ரீதியாக நிறையக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளும் நல்ல தொழில்முறை அனுபவங்களும் கிடைக்கும். பயிற்சி முடித்து அழகு நிலையம் தொடங்குவதற்கு முன், முதலில் ஆர்டர்களை பிரிலான்ஸ் முறையில் சிறிய முதலீட்டில் எடுத்து செய்யலாம். அதில் நல்ல அனுபவம் மற்றும் முழுமையான அறிவு பெற்ற பிறகு அழகு நிலையம் ஆரம்பிக்கலாம்.

அதில் குறிப்பாக சருமம், தலைமுடி சார்ந்த பிரச்னைக்கான தீர்வு அளிக்க தேவையான உபகரணங்கள் மற்றும் அது குறித்து முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் இவை இரண்டும் சார்ந்த பிரச்னைக்காகத்தான் எங்களை நாடி வருவார்கள். அதில் சிறு பிழை ஏற்பட்டாலும், பாதகம் நம்முடைய தொழிலுக்குதான். அடுத்து நாம் வாடிக்கையாளர்களுக்கு இங்கு பயன்படுத்தப்படும் க்ரீம், சொல்யூஷன், ஃபேஸ் பேக் போன்றவை நல்ல தரமானதாக இருக்க வேண்டும். நாம் தொழில் செய்யும் இடம் சுத்தமாக இருந்தால் அதுவே வாடிக்கையாளர்களை ஈர்க்க செய்யும். கடைசியாக இந்த துறையில் அன்றாடம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

நாங்க மணப்பெண் அலங்காரம் செய்யும் மணப்பெண்ணின் திருமணத்தில் ஸ்டால் அமைத்து இலவசமாக டாட்டூ போட்டு விடுகிறோம். மேலும் புடவைக்கு ஏற்ப ப்ளவுஸ்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில் ஆரி வேலைப்பாடு செய்து தருகிறோம். வாடிக்கையாளர்களின் திருப்தியே எங்களின் தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது. ஆதரவற்ற மற்றும் ஏழைப் பெண்களுக்கு இலவசமாக ஆரி வேலைப்பாடு பயிற்சி அளித்து அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரும் எண்ணம் உள்ளது. மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகுக்கலை குறித்த வகுப்புகளும் எடுத்து வருகிறேன்.

இன்னும் நிறைய திட்டங்கள் கைவசம் உள்ளது. அதனை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும்’’ என்றவர், இதனை தொழிலாக துவங்க இருக்கும் பெண்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

‘‘அழகுக்கலை பயின்றவுடனே பலர் பார்லர் ஆரம்பிக்க நினைப்பார்கள். முதலில் சில காலம் ஒரு பிரபல அழகு நிலையத்தில் வேலை பார்த்து அனுபவம் பெற்று பிறகு பார்லர் துவங்குங்கள். அங்கு உங்களின் சர்வீஸ் பிடித்து வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட முறையில் உங்களை அழைப்பார்கள்.

அதன் மூலம் உங்களுக்கு என தனிப்பட்ட வாடிக்கையாளர் வட்டம் சேரும். அதன் பிறகு தனி பார்லர் வைக்கலாம். நான் எளிதில் இந்த நிலைக்கு வரவில்லை. பல போராட்டங்களை சந்தித்து தனி மனுஷியாக சிரமப்பட்டு தான் இந்தத் தொழிலில் முன்னேறினேன். இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் அனைவரும் ஒரு கைத்தொழிலை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். எத்துனை துயர் வரினும் துணிந்து எழுந்து நிற்கலாம்’’ என தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் ப்ரியா.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

The post தன்னம்பிக்கையுடன் துணிந்தேன் வெற்றி பெற்றேன்! appeared first on Dinakaran.

Tags : Priya ,Dinakaran ,
× RELATED அம்பத்தூரில் கால்வாய்களில் ரோபோடிக்...