நன்றி குங்குமம் தோழி
‘‘அதுக்கான நேரம் கிடையாது…
உனக்கு அது சொன்னா புரியாது…
ஏய்… உன்ன நீயே நம்பு…
வேணா நமக்கு வீண் வம்பு…
நல்ல நண்பன்னு சொல்லி ஊதிட்டு போறான் சங்கு…
நமக்கு நாம குடும்பம் வேட்கை மட்டும் தான்டா…
இந்த உலகுக்கு நீ யாருன்னு காட்டிட்டு போடா…’’
என்று நடனமாடிக் கொண்டே பாட ஆரம்பித்தார் ராப்பர் ஜாக்குலின். மும்பையில் ‘வைல்ட் வைல்ட் வுமன்’ என்று ராப்பிங் குழுவினை இவருடன் சேர்ந்து ஐந்து பெண்கள் நடத்தி
வருகிறார்கள். பொதுவாக ஆண்கள்தான் ராப்பிங் செய்வாங்க. ஆனால் இது முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இயக்கி வரும் குழு. மும்பையில் எப்போதும் பிசியாக இருக்கும் இந்தக் குழுவில் ஒருவரான ஜாக்குலினை சென்னைக்கு வந்திருந்த போது சந்தித்தோம்…
‘‘என்னை ஜாக்குலின் என்பதைவிட ஜேக்வின் என்று சொன்னால்தான் ராப்பிங் உலகில் தெரியும்’’ என்று பேசத் துவங்கினார். ‘‘சின்ன வயசில் எனக்கு இசை மேல் தனி ஈடுபாடு உண்டு. கல்லூரியில் படிக்கும் போது சும்மா நண்பர்கள் மத்தியில் நான் ராப்பிங் செய்வேன். ஒரு நாள் நான் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்கு லேட்டா வந்தேன். அதனால் என் பேராசிரியர் மேடையில் ஏற்றி நீ ஏதாவது செய்தாதான் உன்னை மன்னிப்பேன்னு சொன்னார். என் தோழிகளுக்கு நான் ராப்பிங் செய்வேன்னு தெரியும். எல்லோரும் ராப்பிங் ராப்பிங்ன்னு கத்த ஆரம்பிச்சாங்க. நானும் செய்தேன். நான் பாடினதைப் பார்த்து என் பேராசிரியர் நீ ரொம்ப நல்லா செய்ற. இதையே நல்லா பயிற்சி எடுன்னு சொன்னார். அப்படித்தான் நான் ராப்பிங்குள் நுழைந்தேன்.
நான் பிறந்தது சென்னையில் என்றாலும், அப்பாவிற்கு மும்பையில் வேலை என்பதால், என் மூணு வயசில் குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாயிட்டோம். ஆனாலும் சென்னையில் என் அக்கா இருக்காங்க. எங்க வீடும் இங்க இருக்கு என்பதால், மாசத்தில் இரண்டு முறையாவது சென்னைக்கு வந்திடுவேன்’’ என்றவர், இந்தக் குழு அமைத்தது பற்றி கூறினார்.
‘‘மும்பையில் மஹிம் என்ற பகுதியில் பாப் மார்லே டெம்பில்னு ஒரு இடம் இருக்கு. அங்கு பால் என்பவரின் அறிமுகம் எனக்கு கிடைச்சது. அவர் என்னை ஒரு கிட்டாரிஸ்டிடம் அறிமுகம் செய்தார். அவரிடம் தான் நான் இசை பற்றி முழுமையா தெரிந்து கொண்டேன். அங்குதான் பீட் பாக்சிங், ராப் இசைக்கான பயிற்சி எடுத்தேன். ஆண்கள்தான் பெரும்பாலும் பயிற்சி எடுக்க வருவாங்க. பெண் ராப்பர்கள் பலர் இருந்தாலும், அவர்களுக்கு ஆண்களுக்கு கிடைக்கும் பப்ளிசிட்டி கிடைப்பதில்லை. நான் ஆரம்பத்தில் ஆண்கள் ராப்பிங் குழுவில்தான் இருந்தேன். அவர்களுக்கு நான் அதில் இருப்பது விருப்பம் இல்லை. அதனால் என்னை நீக்கிட்டாங்க.
ரொம்பவே வருத்தப்பட்டேன். அந்த சமயத்தில் என் தோழி கிராந்தி நாரி, அவளும் ஒரு ராப்பர்தான். ராப்பிங் சைபர் நடப்பதாகவும் அதில் கலந்துக்க சொல்லி அழைத்தாள். நான் இருந்த மனநிலைக்கு என்னால் செய்ய முடியும்னு நம்பிக்கை இல்லை. ஆனால் என் கல்லூரித் தோழிதான் உன்னால முடியும்னு சொல்லி அனுப்பி வைத்தாள். அந்த சைபரில்தான் ஹாஷ்டாக் பிரித்தி, கிராந்தி நாரி, பிரதிக்கா, MC மஹிலாவினை சந்தித்தேன். அப்ப கிராந்தி என்னிடம் இது போல் சைபர்கள் நிறைய நடக்கும். அதில் பெரும்பாலும் ஆண்கள் தான் கலந்து கொள்வார்கள்.
பெண்கள் இல்லை. நாம ஒரு குழுவா செய்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. அப்போது முடிவு செய்தேன். நான் இதை விடப்போறதில்லைன்னு. அந்த சைபரில்தான் நாங்க ஐந்து பேரும் இணைந்தோம். எங்களின் நோக்கமும் ஒன்றாக இருந்ததால், சேர்ந்து செயல்பட முடிவு செய்தோம். அப்படித்தான் ‘வைல்ட் வைல்ட் வுமன் குழுவும்’ உருவானது’’ என்றவர், ராப்பிங் மூலம் பல சமூக சேவைகளும் செய்து வருகிறார்.
‘‘குழு அமைத்த பிறகு அதுகுறித்து பலருக்கு தெரியப்படுத்த நினைத்தோம். எங்களின் ராப்பிங்குடன் ஒரு சமூக சிந்தனையும் இணைத்தோம். அதில் முதல் திட்டமாக தில்லியில் உள்ள சேரிப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு காட்டன் நாப்கின்களை பயன்படுத்த சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். பிளாஸ்டிக் நாப்கினால் ஏற்படும் சுற்றுப்புற தீமைகளை அவர்களுக்கு புரிய வைத்தோம். அதன் பிறகு அங்கு எங்களின் நிகழ்ச்சியினை நடத்தினோம்.
ராப்பிங் பொறுத்தவரை யாரும் நம்மைத் தேடி வரமாட்டாங்க. நாமதான் வாய்ப்பை தேடிப் போகணும். அதன் பிறகு பெண்கள் கொண்ட குழுவால் இதை செய்ய முடியுமான்னு யோசிப்பாங்க. நம்மிடம் திறமை இருந்தாலும், ஆண்கள் நிறைந்த இந்த ராப் உலகில் நமக்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவுதான். அதை நாமதான் ஏற்படுத்திக் கொள்ளணும். மும்பை மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க இப்போது நாங்க நிகழ்ச்சி செய்து வருகிறோம்.
சென்னையில் கடந்த ஆண்டு கோவளத்தில் ஒரு நிகழ்ச்சி செய்ேதாம். ‘வணக்கம் சென்னை’ன்னு சொன்னவுடன் அங்கு சூழ்ந்து இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொடுத்த வரவேற்பு எங்களை அப்படியே புல்லரிக்க வைத்தது. எங்களின் அனைத்து நிகழ்ச்சியிலும் சென்னை ரொம்ப மனசுக்கு நெருக்கமான நிகழ்ச்சின்னு சொல்லணும். அடுத்து என் அக்காவின் கல்யாணம். ஆரம்பத்தில் எங்க வீட்டில் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
நான் கால் சென்டரில் வேலை பார்த்துக் கொண்டு இதை பொழுதுபோக்காக செய்தாலும் இதுதான் என் எதிர்காலம்னு முடிவு செய்துவிட்டேன். அதை என் வீட்டில் உள்ளவர்களுக்கு புரிய வைக்க என் அக்காவின் திருமண நிகழ்ச்சியினை பயன்படுத்திக் கொண்டேன். கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியின் போது எங்க வைல்ட் வைல்ட் குழுவில் உள்ள அனைவரும் கையில் மைக்கினை பிடித்துக் கொண்டு ‘let me tell u what is there in my mind’ என்று பாட ஆரம்பித்தோம்.
அவ்வளவுதான் கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவங்க எல்லோரும் எங்களின் வைப்பிற்கு மாறினாங்க. அதுவரை இதற்கு எதிர்ப்பு சொன்ன என் அம்மா எங்க எல்லோரையும் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிஞ்சிட்டாங்க. இதுவரை நாங்க பல நிகழ்ச்சிகள் செய்து இருந்தாலும், அதற்கான அடித்தளம் என் அக்காவின் கல்யாண மேடைதான். எங்களின் கனவே இதனை இந்தியா மட்டுமில்லை, உலகம் முழுக்க அறிமுகம் செய்யணும்’’ என்றவர் இதற்கான பாடல் வரிகளை எவ்வாறு அமைப்பார் என்பது பற்றி விவரித்தார்.
‘‘நாங்க ஐந்து பேரும் சேர்ந்துதான் ஒரு பாட்டினை உருவாக்குவோம். ஒரு பீட் இருக்கு. அதற்கு என்ன வரிகளை அமைக்கலாம்னு யோசிப்போம். எங்க ஒவ்வொருவரின் எண்ணங்கள் பாடல்களா மாறும். பொதுவாக ராப்பிங் செய்யும் போது, ஒருவர் பாடும் போது இடையில் ஒருவர் பிரேக் டான்ஸ் செய்வார். மறுபக்கம் ஒருவர் சுவற்றில் ஓவியங்கள் வரைவார். மற்றவர்கள் பாடுவார்கள். இவை எல்லாம் சேர்ந்ததுதான் ராப்பிங். எங்களில் இருவர் பிரேக் டான்ஸ் செய்வாங்க. ஒருவர் வரைவார். இருவர் பாடுவோம்.
கல்யாணம், கல்லூரி நிகழ்ச்சி, சைபர் என எல்லா இடங்களிலும் நாங்க நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். ராப் என்பது ஹிப்ஹாபின் ஒரு பகுதி. ஹிப்ஹாபில் பிரேக்கிங், DJ, MC, கிராஃபிட்டி, பீட்பாக்சிங் என ஐந்து விதமான நிகழ்வுகள் இருக்கும். அதில் ஒன்றுதான் ராப்பிங். பிரேக்கிங், பிரேக் டான்ஸ், MC மைக்கினை கன்ட்ரோல் செய்வது, கிராஃபிட்டி வரைவது, பீட் பாக்சில் வாயில் இசை அமைப்பது…
இதனுடன் ராப் பாடல்களை பாடணும். இவை எல்லாம் சேர்த்து 45 நிமிடத்திற்குள் பர்பார்ம் செய்யணும். இதில் வருமானம் நாம் நினைக்கும் அளவிற்கு இருக்காது. சில நிகழ்ச்சிக்கு நாங்க எங்க சொந்த செலவில் சென்று இருக்கிறோம். ராப்பிங் மட்டுமில்லாமல் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் செய்ய வேண்டும். அதன் மூலம் எங்க குழுவினை உலகளவில் அடையாளப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் எதிர்கால திட்டம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார் ஜாக்குலின்.
தொகுப்பு : ஷம்ரிதி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
The post 5 பெண்கள்… எண்ணங்கள்… இலக்கு 1 appeared first on Dinakaran.