×

JEE தேர்வில் வென்ற பழங்குடியின மாணவிகள்!

நன்றி குங்குமம் தோழி

அடிப்படை வசதிகள் இல்லாத வகுப்பறைகள். பள்ளிக்குச் சென்று வர போதுமான பேருந்து வசதிகள் கிடையாது. பள்ளிக்கு நெடுந்தூரம் நடந்து செல்ல வேண்டும். இவற்றை எல்லாம் கடந்து தங்களின் கனவுகளை வென்று காட்டியிருக்கிறார்கள் பழங்குடியின மாணவிகளான ரோஹிணியும், சுகன்யாவும். தங்களுடைய வறுமையை போக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு தங்கள் கண் முன் தெரிந்த வெளிச்சம்தான் கல்வி. அதை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறியிருக்கிறார்கள் இந்த மாணவிகள்.

இது குறித்து இரண்டு மாணவிகளிடமும் பேசும் போது…‘‘என்னுடைய சொந்த ஊர் சேலத்தில் உள்ள கரியேகோவில்’’ என்று பேசத் துவங்கினார் சுகன்யா. ‘‘நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் இங்குதான். அப்பாக்கு கூலி வேலை. என்னுடைய அண்ணா +2 வரைதான் படிச்சிருக்கார். வீட்டுச்சூழல் காரணமா அவரால் பள்ளிப் படிப்பை மேலே தொடர முடியவில்லை. எங்க குடும்பம் ஏழ்மையானது. இவர்களின் வருமானத்தில்தான் எங்க குடும்பமே நகர்கிறது. அதனால்தான் நான் நல்லா படிச்சு வேலைக்கு போகணும்னு முடிவு செய்தேன். அதுவே என்னுடைய கனவாகவும் மாறியது.

எங்க ஊர்ல இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி. அங்கதான் நான் படிச்சேன். தினமும் நடந்துதான் போகணும். அடிப்படை போக்குவரத்து வசதி கிடையாது. பள்ளிக்கூடத்திலும் போதுமான வசதி இருக்காது. நான் படிக்கும் பள்ளி உறைவிடப் பள்ளி என்பதால் அங்கு தங்கி படிக்கலாம். ஆனால் அங்கு போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால் பெண்கள் தங்கி படிக்க மாட்டோம். தினமும் காலையில் 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பணும். நடந்து போக வேண்டும் என்பதால் காலை சீக்கிரமே கிளம்பிடுவோம்.

பள்ளி நேரம் முடிந்து மாலையும் அங்கு சிறப்பு வகுப்புகள் நடக்கும். அது முடிக்க இரவு 8.30 மணியாயிடும். நான் அங்கு தங்குவது இல்லை. மேலும், இரவு நேரம் என்பதால் வீட்டில் இருந்து வந்து கூட்டிக் ெகாண்டு போவாங்க. எனக்கு மருத்துவராகணும்னு ஆசை. அதனால நீட் தேர்விற்கான பயிற்சி எடுக்க இருந்தேன். நான் கணக்கு நன்றாக போடுவேன். அதைப் பார்த்த என் கணக்கு ஆசிரியர்தான், நீட் மட்டுமில்லை JEE தேர்வுக்கும் படிக்க சொன்னார்.

எதிர்காலம் நல்லா இருக்கும் என்று அவர் சொன்னதால், நான் அவரிடம் அதற்கான பயிற்சி எடுத்தேன். நான் நல்லா படிப்பேன். காரணம், கல்விதான் எங்களின் எதிர்காலம். என் வீட்டிலும் என்னை நன்றாக படிக்கச் சொல்லி ஊக்குவிப்பாங்க. நானும் நல்லா படிச்சேன். பொதுவா எங்க பழங்குடி இனத்தில் பெண்கள் +2 வரை படிப்பதே அரிதானது. அப்படியே படிச்சாலும் பள்ளிப் படிப்பு முடிச்சதும், கல்யாணம் செய்து வச்சிடுவாங்க. ஆனால் எங்க வீட்டில் ‘நீ என்ன படிக்க நினைக்கிறியோ படின்’னு என் அண்ணனும் அப்பாவும் சொல்லிட்டாங்க. தொடர்ந்து JEE தேர்வுக்கு என்னை தயார்படுத்த ஆரம்பித்தேன். காரணம், தேர்வுக்கு ஒரு மாத காலம் இருக்கும் போதுதான் நான் இந்தப் பயிற்சியினை எடுத்தேன். நல்ல மதிப்பெண் பெறவேண்டும்னு கடினமாக படிச்சேன்.

தேர்வையும் நன்றாக எழுதினேன். அதன் பலன்தான் இந்த வெற்றி. எங்க அப்பாவும் அம்மாவும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. என் பள்ளியில் எனக்கு பாராட்டு விழா நடத்தினாங்க. என்னுடன் தேர்வு எழுதிய என் தோழிகள் இருவரும் தேர்ச்சிப் பெற்றாலும், போதிய கட் ஆப் மதிப்பெண்கள் பெறவில்லை. நான் இந்த தேர்வில் தேர்வானதால், அது எங்க ஊரில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இதன் மூலம் எங்க ஊரில் உள்ள பலருக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும்’’ என தன்னம்பிக்கையோடு சொல்கிறார் சுகன்யா.

இவரைப் போலவே திருச்சி மாவட்டம், இலுப்பை ஊரை சேர்ந்த ரோஹிணி என்ற பழங்குடியின பெண்ணும் JEE தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.‘‘எனக்கு படிப்பு மேல எப்போதுமே ஆர்வம் அதிகம் உண்டு. நான், அப்பா, அம்மா, அண்ணன், அக்கா. இதுதான் என் குடும்பம். அப்பா, அம்மா இருவருமே கட்டிட வேலைக்காக கேரளாவுல இருக்காங்க. அண்ணனும் அக்காவும் இங்க காட்டு வேலைக்கு போயிடுவாங்க. அதனால் நான் காலையில் சமைச்சு வச்சிட்டு வேலைக்கு போயிடுவேன்.

பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் நானும் விவசாய வேலைக்கு போவேன். JEE தேர்வு பற்றி என் பள்ளி மூலமாதான் எனக்கு தெரிய வந்தது. இது படிச்சா நல்ல வேலை கிடைக்கும் என்று ஆசிரியர் சொன்னதால், நான் அதற்கான பயிற்சி எடுக்க தயாரானேன். நான் நல்லா படிப்பேன். அதனால் அரசு மூலம் எனக்கு JEE படிக்க உதவி கிடைச்சது. அந்த உதவி கிடைக்கலைனா என்னால் இந்த தேர்வு எழுதி இருக்க முடியாது.

நான் படிப்பதற்கான அனைத்து செலவு மற்றும் பரீட்சை எழுதுவதற்கான பயிற்சிக்கான வசதிகளும் எனக்கு அரசு மூலமாகத்தான் கிடைத்தது. நானும் கவனம் சிதறாமல் படிச்ேசன். JEE தேர்வில் முதற்கட்ட வெற்றி பெற்றேன். அதன் பின்னர் அட்வான்ஸ் தேர்வு எழுத சென்னையில் இரண்டு மாதம் பயிற்சி ெகாடுத்தாங்க. அதிலும் வெற்றி பெற்றுவிட்டேன். இந்த வசதி எங்க ஊரில் நன்றாக படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை’’ என்றார் ரோஹிணி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post JEE தேர்வில் வென்ற பழங்குடியின மாணவிகள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Rohini ,Sukanya ,Dinakaran ,
× RELATED தொழிலதிபரான பள்ளி மாணவி!