×

போட்டி போட்டு ஓட்டி 2 பஸ்கள் உரசியதால் ஆத்திரம் டிரைவர் மீது பஸ் ஏற்றிக்கொன்று சடலத்தை 1 கி.மீ. தூரம் இழுத்து சென்ற கொடூரம்: ஆந்திராவில் பரபரப்பு சம்பவம்

திருமலை: பெங்களூருவில் இருந்து போட்டி போட்டு ஓடியதில் 2 பஸ்கள் உரசியதால் ஆத்திரமடைந்து, ஆந்திராவில் டிரைவரை பஸ் ஏற்றி கொன்று சடலத்தை 1 கி.மீ. தூரம் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் விஜயவாடா அய்யப்பா நகர் என்மலக்கு வீதியை சேர்ந்த சீனிவாசராவ், தனியார் டிராவல்ஸ் பஸ் டிரைவர். குண்டூர் மாவட்டம் செப்ரோலு மண்டலம் பழைய ரெட்டிபாலம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் ராஜு.

இவர் மற்றொரு தனியார் டிராவல்ஸ் பஸ் டிரைவராக பணி புரிந்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பொன்னூரில் குடிபெயர்ந்து அங்குள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் சீனிவாசராவ், சுதாகர் ராஜு ஆகியோர் பஸ்களை ஓட்டிக்கொண்டு நேற்றுமுன்தினம் இரவு பெங்களூரில் இருந்து விஜயவாடா நோக்கி புறப்பட்டனர். ஆரம்பத்தில் இருந்து போட்டி போட்டு கொண்டு ஓட்டி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காருபாலம் அருகே இரண்டு பஸ்களின் சைடு கண்ணாடி உரசியது.

இதனால் 2 டிரைவர்களும் பஸ்சை ஓட்டிக்கொண்டே வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதே நேரத்தில் மகாசமுத்திரம் டோல்கேட் அருகே இரண்டு பஸ்களும் வெவ்வேறு லைனில் வந்தபோது டிரைவர் சுகாதகர் ராஜு கீழே இறங்கி மற்றொரு பஸ் முன்பு நின்று வாக்குவாதம் செய்தார். இதனால் கோபமடைந்த டிரைவர் சீனிவாசராவ், பஸ்சை சுதாகர ராஜூ மீது அதிவேகமாக மோதி ஓட்டிச்சென்றார். இதில் பஸ்சின் அடியில் சிக்கி கொண்டு சுதாகர் ராஜுசம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் சடலம் பஸ்சில் சிக்கிய நிலையில், சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சடலத்தை இழுத்து சென்றுள்ளார்.இதுகுறித்து டோல்கேட் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் போலீசார் பஸ்சை நிறுத்தி டிரைவர் சீனிவாசராவை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் சிசிடிவி கேமிரா காட்சிகளின் ஆதாரங்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post போட்டி போட்டு ஓட்டி 2 பஸ்கள் உரசியதால் ஆத்திரம் டிரைவர் மீது பஸ் ஏற்றிக்கொன்று சடலத்தை 1 கி.மீ. தூரம் இழுத்து சென்ற கொடூரம்: ஆந்திராவில் பரபரப்பு சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Rage ,Andhra ,Thirumalai ,Bengaluru ,Andhra Pradesh ,AP State NDR District ,Vijayawada ,
× RELATED ஆந்திராவில் தொடர் கனமழையால் ஏற்பட்ட...