×

திருப்பதி அருகே வேண்டுதலை நிறைவேற்ற இந்து கோயில் கட்டிவரும் இஸ்லாமிய சகோதரர்கள்

திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கே.கொத்தபேட்டா கிராமத்தை சேர்ந்தவர் ஆசிஷ்பாஷா. இவர்களது மகன்கள் பைரோஸ், சந்த்பாஷா. சகோதரர்களான இருவரும் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆஞ்சநேயர் கோயிலை கட்டி வருகின்றனர். மேலும் இக்கோயிலில் 7 சுவாமி சன்னதிகள் கட்டப்பட்டு வருகிறது. இது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பைரோஸ், சந்த்பாஷா இருவரும் கூறுகையில், ‘எங்களுடைய தாத்தா கூடுசாகப்பிற்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அப்போது ஒரு சாமியார், ஆஞ்சநேயரை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனால் எங்களுடைய தாத்தா ஆஞ்சநேயரை வழிபட தொடங்கினார். அதன்பிறகுதான் அவருக்கு குழந்தை பிறந்தது. அதனால் எனது அப்பாவுக்கும் ஆஞ்சநேயர் சுவாமியை மிகவும் பிடிக்கும். சின்ன வயது முதலே அல்லாவை வழிபடுவதோடு, ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வார்.

மேலும் அவர் ஆஞ்சநேயருக்கு கோயில் கட்ட வேண்டும் என ஆசைப்பட்டார். இதற்காக திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த 2010ம் ஆண்டு கோயில் கட்ட தொடங்கினர். இந்த கோயில் வளாகத்தில் அஞ்சநேயர் மட்டுமின்றி சிவன், பார்வதி, விநாயகர், முருகர், சாய்பாபா, நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளது. எங்களது தந்தை மறைவுக்கு பிறகு கோயில் கட்டுமான பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். நன்கொடையாளர்கள் உதவி செய்தால் கோயில் கட்டுமான பணி விரைந்து முடிந்துவிடும் ’ என்றனர்.

The post திருப்பதி அருகே வேண்டுதலை நிறைவேற்ற இந்து கோயில் கட்டிவரும் இஸ்லாமிய சகோதரர்கள் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Asish Pasha ,K. Kottabetta ,Chittoor district ,Andhra ,Bairos ,Chandpasha ,Anjaneyar ,Temple ,Tirupati National Highway ,Swami ,
× RELATED லட்டில் குட்கா பாக்கெட் இருந்தது உண்மை இல்லை: திருப்பதி தேவஸ்தானம் தகவல்