×

கிராம ஊராட்சிகளில் கட்டிட அனுமதி பெற கட்டணம் நிர்ணயம் தமிழக அரசு உத்தரவு ஒற்றை சாளர முறையில்

வேலூர், ஜூலை 25: கிராம ஊராட்சிகளில் ஒற்றை சாளர முறையில் கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணம் நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் கட்டிட அனுமதி என்பது இதுவரை வரையறை ஏதுமின்றி அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களால் வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் இடைத்தரகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் தலையீடு அல்லது கட்டிட அனுமதியின்றி வீடுகள், கட்டிடங்கள் கட்டுவது என்று எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாத நிலை இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒற்றை சாளர முறையில் கட்டிட அனுமதி சான்று வழங்குவதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது.

தொடர்ந்து கிராம ஊராட்சிகளில் ஒற்றை சாளர முறையில் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கட்டிட அனுமதி பெறும் வகையில் வழிகாட்டுதல்களையும் அரசு வழங்கியுள்ளது. அதில், அரசின் பதிவு பெற்ற பொறியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டிட மதிப்புடன் கூடிய கட்டிட வரைபடம் நகல், விற்பனை பத்திர நகல், பட்டா, லேஅவுட் அனுமதி சான்றின் நகல், சம்பந்தப்பட்ட மனையின் புகைப்படம் ஆகியவை அடங்கிய சுயசான்றுடன், விண்ணப்பத்தை இணைத்து அதற்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தி கட்டிட அனுமதி பெறலாம் என்று அரசு அந்த உத்தரவில் தெரவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள நகரிய கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு கட்டிட அனுமதிக்கு ₹27ம், வளர்ச்சிக்கட்டணம், சாலை சேத சீரமைப்பு கட்டணம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலநிதி என இவற்றுக்கு ₹290ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளை ஒட்டியுள்ள இதர நகரிய கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு கட்டிட அனுமதிக்கு ₹25ம், வளர்ச்சிக்கட்டணம், சாலை சேத சீரமைப்பு கட்டணம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலநிதி என இவற்றுக்கு ₹269ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள இதர கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு கட்டிட அனுமதிக்கு ₹22ம், வளர்ச்சிக்கட்டணம், சாலை சேத சீரமைப்பு கட்டணம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலநிதி என இவற்றுக்கு ₹237ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவிர்த்து 11,791 கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு கட்டிட அனுமதிக்கு ₹15ம், வளர்ச்சிக்கட்டணம், சாலை சேத சீரமைப்பு கட்டணம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலநிதி என இவற்றுக்கு ₹162ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் அனைத்தும் சுயசான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

The post கிராம ஊராட்சிகளில் கட்டிட அனுமதி பெற கட்டணம் நிர்ணயம் தமிழக அரசு உத்தரவு ஒற்றை சாளர முறையில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Vellore ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...