×
Saravana Stores

தீவிர தூய்மை பணி திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 201.101 மெட்ரிக் டன் குப்பை, கட்டிட கழிவு அகற்றம்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் 3 மண்டலங்களில் நடைபெற்ற தீவிர தூய்மை பணி திட்டத்தின் கீழ், ஒரே நாளில் 201.01 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது, என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 4,18,569 மீட்டர் நீளம் கொண்ட 488 பேருந்து சாலைகளில், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சீராக செல்வதற்கும், நடைபாதைகளில் மக்கள் சிரமமின்றி சீராக செல்வதற்கும் ஏற்றவகையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் தீவிர தூய்மை பணி தொடங்கப்பட்டது. இதனை, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், வட்டார துணை ஆணையர்கள் பிரவீன்குமார் (மத்தியம்), கட்டா ரவி தேஜா, (வடக்கு) ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி, தண்டையார்பேட்டை மண்டலம், 36, 37, 45 மற்றும் 46வது வார்டுக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதிகள், 35வது வார்டுக்கு உட்பட்ட ஜி.என்.டி. சாலை, 34வது வார்டுக்கு உட்பட்ட கொடுங்கையூர், காமராஜ் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து சாலைகளில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், 38வது மற்றும் 41வது வார்டுக்கு உட்பட்ட எண்ணூர் நெடுஞ்சாலை, 37வது வார்டுக்கு உட்பட்ட டி.வி.கே. லிங்க் சாலை, 34, 35 மற்றும் 37வது வார்டுக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து சாலைகளில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அண்ணாநகர் மண்டலம், 102, 103, 104வது வார்டுக்குட்பட்ட 2வது, 3வது மற்றும் 6வது அவென்யூ பகுதிகள், அண்ணாநகர் 4வது பிரதான சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து சாலைகளில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

95, 100, 101 மற்றும் 102வது வார்டுக்கு உட்பட்ட புதிய ஆவடி சாலை, 96 மற்றும் 98வது வார்டுக்கு உட்பட்ட கொன்னூர் நெடுஞ்சாலை, 100வது வார்டுக்கு உட்பட்ட மில்லர்ஸ் சாலை, பிளவர்ஸ் சாலை மற்றும் பர்னபி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து சாலைகளில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அடையாறு மண்டலம், 171வது வார்டுக்கு உட்பட்ட டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை, 174வது வார்டுக்கு உட்பட்ட பெசன்ட் அவென்யூ சாலை, எம்.ஜி.சாலை, பெசன்ட் நகர் 2 மற்றும் 3வது அவென்யூ, துர்காபாய் தேஷ்முக் சாலை, 179வது வார்டுக்கு உட்பட்ட பெசன்ட் நகர் 7வது அவென்யூ, 180வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு அவென்யூ மற்றும் காமராஜ் நகர் 22வது கிழக்குத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து சாலைகளில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அடையாறு மண்டலத்திற்குட்பட்ட ராஜிவ்காந்தி சாலை, எம்.ஆர்.டி.எஸ் ரயில்வே பார்டர் சாலை மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து சாலைகளிலும் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட 3 மண்டலங்களில் உள்ள பேருந்து சாலைகளில் நடைபெற்ற தீவிர தூய்மை பணியில் 62.36 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள், 138.65 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் என மொத்தம் 201.01 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து இந்த தூய்மை பணிகள் வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் உள்ள பேருந்து சாலைகளில் நாள்தோறும் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் கண்காணிப்பு
இந்த பணிகளில் சாலை மற்றும் சாலையோரங்களில் உள்ள மண் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்யும் வகையில் மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள், கனரக, இலகுரக வாகனங்கள், பாப்காட் இயந்திரங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றிட பொக்லைன் மற்றும் டிப்பர் லாரிகள், மரக்கிளைகளை அகற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த தீவிர தூய்மை பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணிகள் சம்பந்தப்பட்ட மண்டலங்களில் சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை வட்டார துணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள், தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை, உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

சீரமைப்பு பணிகள்
இந்த திட்டத்தின் கீழ், பேருந்து சாலைகளில் மேடு, பள்ளங்களை சீர்செய்தல், சென்டர் மீடியன்களை சீரமைத்தல், பேருந்து சாலைகள் மற்றும் சாலையை ஒட்டிய நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குப்பை கழிவுகள், கட்டிட கழிவுகள், கட்டுமான பொருட்கள், இதர பொருட்கள், இடையூறாக உள்ள தொங்கும் வயர்கள், போக்குவரத்திற்கு இடையூறான மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இப்பகுதிகளில் உள்ள எரியாத மின்விளக்குகள் புதிதாக பொருத்தப்பட்டது.

The post தீவிர தூய்மை பணி திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 201.101 மெட்ரிக் டன் குப்பை, கட்டிட கழிவு அகற்றம்: சென்னை மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Municipality Information ,Chennai ,Chennai Municipal Corporation ,Chennai Municipality ,
× RELATED சென்னையில் 329 இடங்களில் நிவாரண...