பல்லடம், ஜூலை 24: பல்லடம் அருகே பருவாய் குட்டையில் நீர்க்கசிவு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருந்த நிலையில் அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பல்லடம் ஒன்றியம், பருவாய் கிராமத்தில் பெரிய குட்டை உள்ளது. பருவமழையின் போது இக்குட்டை முழுவதுமாக நிரம்பி, சுற்றுவட்டார கிராமங்களுக்கு பாசன வசதியை அளிக்கிறது. பி.ஏ.பி பாசன வசதி இப்பகுதியில் கிடையாது என்பதால் நிலத்தடி நீரை நம்பியே இப்பகுதியில் விவசாயம் நடந்து வருகிறது.
இச்சூழலில், பெரிய குட்டையின் தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் நீண்ட காலமாக தண்ணீர் வெளியேறி வருவது விவசாயிகளை கவலை அடையச் செய்து வருகிறது. ஏறத்தாழ, 6 ஆண்டுக்கு மேலாக நீர்க்கசிவு ஏற்பட்டு வருவது குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் யாருமே எட்டிக் கூட பார்க்கவில்லை.
சமீபத்தில், இப்பகுதி விவசாயிகள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் இணைந்து முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினர். இதனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் குட்டையில் ஆய்வு மேற்கொண்டனர். பருவ மழை துவங்கி உள்ள நிலையில் மழைநீரை சேகரித்து வைக்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இம்முறையாவது புகார் மனுவை கிடப்பில் போடாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
The post பருவாய் குட்டையில் பொதுப்பணித்துறை ஆய்வு appeared first on Dinakaran.