×

ஏடிஎம் மையத்தின் முன்பு கழிவுநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

 

திருவாடானை, ஜூலை 24: திருவாடானையில் ஏடிஎம் முன்பு செல்லும் சாக்கடை கால்வாயில் தேங்கிய கழிவுநீரால் பணம் எடுக்க வரும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். திருவாடானையில் உள்ள வடக்குத் தெருவில் தேசிய வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாடானை மற்றும் சுற்றியுள்ள 250க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைக்காகவும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்காகவும் பணம் எடுப்பதற்கு இந்த ஏடிஎம் மையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் ஏடிஎம் மையத்தின் முன் பகுதி வழியாக சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த சாக்கடை கால்வாயில் கடந்த ஒரு மாதமாக அடைப்பு ஏற்பட்டதால் அதில் கழிவுநீர் ஓட வழியின்றி அப்பகுதியில் தேங்கி குளம் போல் கிடக்கிறது. மேலும் இந்த சாக்கடை கால்வாயின் மேல் பகுதியில் போடப்பட்ட சிலாப் கற்கள் உடைந்து விட்டதால், கழிவுநீர் நிரம்பி திறந்த வெளியில் தேங்கி நிற்கிறது.

இதனால் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வரும் பெண்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இந்த கழிவுநீர் செல்லும் கால்வாயை கடந்து செல்ல முடியாமல் அதில் விழுந்து சிறு காயங்களுடன் எழுந்து செல்லும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். உடனே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி விட்டு, கழிவுநீர் செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஏடிஎம் மையத்தின் முன்பு கழிவுநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,National Bank ,North Street, Thiruvadanai ,Dinakaran ,
× RELATED திருவாடானை அருகே புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணி ஸ்பீடு