×

பல கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி மீனவமக்கள் போராட்டம்

ராமநாதபுரம், ஜூலை 24: மீனவ மக்களிடம் ரூ.300 கோடி வரை மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் டிஐஜி அலுவலகம் அருகே மீனவ பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள், காதில் பூக்களை வைத்துக்கொண்டு பணம் மோசடி செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி கூறும்போது, ராமநாதபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஒரு தனியார் நிதி நிறுவனம் திருப்பாலைக்குடி, தொண்டி, மோர்பண்ணை, தேவிப்பட்டிணம் உள்ளிட்ட சுற்றுவட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த 96 ஆயிரம் மீனவ மக்களிடம் நகைகளை அடகு பெற்றுக் கொண்டு, அதனை அதிக தொகைக்கு வங்கிகளில் அடமானம் வைத்துள்ளது. இந்நிலையில் அடமானம் நகைகளுக்கு பணம் முழுமையாக வட்டியுடன் கட்டியவர்களுக்கு நகையை திருப்பிக் கொடுக்காமல் ரூ.300 கோடி வரை மோசடி செய்துள்ளனர்.

இந்த பிரச்னை 13 ஆண்டுகளாக உள்ளது. இந்த பிரச்னை குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. உயர்நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையம் ஏற்படுத்தி அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவையும் முறையாக பின்பற்றாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

The post பல கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி மீனவமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Fishermen ,Ramanathapuram ,DIG ,
× RELATED நாகை மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!!