×

பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் போர்க்கொடி

புதுச்சேரி, ஜூலை 24: புதுச்சேரி தேஜ கூட்டணி ஆட்சியில் மாற்றம் வேண்டும் என அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். டெல்லியில் முகாமிட்டுள்ள அவர்கள் ஒன்றிய அமைச்சரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். அமித்ஷாவையும் சந்திக்கவும் முயன்று வருகின்றனர். புதுச்சேரியில் பாஜ- என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர் ரங்கசாமியின் செயல்பாடுகளே காரணம் என குற்றம் சாட்டி, கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டுமென பாஜக மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ தலைமையில் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து வலியுறுத்தினர்.

இந்நிலையில் புதுச்சேரியில் நிலவி வரும் அரசியல் குழப்பத்தை சரி செய்ய பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து நடந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய அதிருப்பதி பாஜ எம்எல்ஏ ஜான்குமார், கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் எனக்கூறியதால், பாஜக எம்எல்ஏக்கள் சமரசம் அடைந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இவ்விவகாரத்தில் சமாதானமாகாத அதிருப்தி எம்எல்ஏக்கள், பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம் தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூடி விவாதித்தனர்.

தேர்தலுக்கு பிறகு ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை. ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் பாஜ எம்எல்ஏக்களுக்கு எதுவும் செய்யவில்லை. திட்டமிட்டு முதல்வர் பழிவாங்குகிறார். 20 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது, எனவே எங்களுக்கும் கூடுதல் அதிகாரம் வேண்டும். அமைச்சர்கள், வாரிய தலைவர் பதவிகளை பகிர்ந்து அளியுங்கள் என்று கேட்கிறோம். எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தனர். அதன்படி நேற்று மாலை கல்யாணசுந்தரம் தலைமையில் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், பாஜ ஆதரவு எம்எல்ஏக்கள் சிவசங்கர், அங்காளன் ஆகியோர் டெல்லி சென்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வாலை மீண்டும் சந்தித்தனர்.

தேஜ கூட்டணி ஆட்சி நிர்வாகத்தில் ஏதாவது மாற்றம் வர வேண்டும். இல்லாவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜ தோல்வியடையும். இது போன்ற சூழலில் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பது என்ற நிலைப்பாடே சரியானது. பாஜ அமைச்சர்களை மாற்றி சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

The post பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் போர்க்கொடி appeared first on Dinakaran.

Tags : BJP MLAs ,Puducherry ,Puducherry Teja ,government ,Delhi ,Union Minister ,Amit Shah ,BJP ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர்..!!