×

பீகார், ஆந்திராவுக்கான சிறப்பு நிதி அறிவிப்பின்போது எதிர்ப்பு கோஷம்: பட்ஜெட் அறிவிப்பில் பரபரப்பு சம்பவங்கள்

* கடந்த 2019ல் ஒன்றிய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக தனது 7வது பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக அதிக பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் (6) சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார்.
* மோடி தலைமையிலான பாஜ அரசு தாக்கல் செய்யும் 13வது பட்ஜெட் இது. இதில் 11 முழு பட்ஜெட் மற்றும் 2 இடைக்கால பட்ஜெட்கள் அடங்கும்.
* வழக்கம் போல் சிவப்பு நிற பையில் வைக்கப்பட்ட டேப்லெட் கொண்டு பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் வாசித்தார்.
* ஊதா மற்றும் தங்க ஜரிகையுடன் கூடிய வெள்ளை நிற மைசூர் பட்டுப் புடவையை உடுத்தி வந்திருந்த நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை 83 நிமிடங்கள் நீடித்தது.
* 83 நிமிட பட்ஜெட் உரையில், ஆளும் தரப்பு எம்பிக்கள் 71 முறை தங்கள் மேசைகளைத் தட்டி பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்றனர்.
* பீகார், ஆந்திராவுக்கான சிறப்பு நிதி அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் அறிவித்த போது அவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையாக கோஷமிட்டனர். ‘அரசை காப்பாற்றிக் கொள்ளும் அறிவிப்பு’, ‘நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளும் சலுகை’ என கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
* தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி கோரி திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் கோரிக்கைகளை எழுப்பினர். ஆனால் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மழை நிவாரண அறிவிப்புகளை நிதி அமைச்சர் வெளியிட்டதால் தமிழ்நாடு எம்பிக்கள் கோபமடைந்தனர்.
* செப்டம்பர்-அக்டோபரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கு சிறப்பாக எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
* எந்த பட்ஜெட்டிலும் இல்லாத வகையில் இம்முறை பட்ஜெட்டில் ரயில்வே என்கிற வார்த்தையே இடம் பெறவில்லை. ரயில்வே முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயை ஒன்றிய அரசு மறந்து விட்டதா எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. இதே போல கடும் எதிர்ப்புக்கு உள்ளான அக்னிபாதை திட்டம் தொடர்பாக எந்த அறிவிப்புகள் இடம் பெறவில்லை.
* பட்ஜெட் தாக்கலையொட்டி, மக்களவைக்கு பிரதமர் மோடி வந்த போது, ‘பாரத் மாதா கி ஜெய்’ என பாஜ எம்பிக்கள் கோஷமிட்டனர்.
* பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை மீண்டும் ஆட்சிக்கு தேர்ந்தெடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கிய போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் ‘400 இலக்கு’ என்ற முழக்கத்துடன் கேலி செய்தனர்.
* பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் பிரதமர் மோடி இருக்கையில் இருந்து எழுந்து சென்று நிதி அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தார். ஒன்றிய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்), சிராக் பாஸ்வான் (எல்ஜேபி-ஆர்வி) ஆகியோர் முறையே ஆந்திரா மற்றும் பீகாருக்கான சிறப்பு அறிவிப்புகளுக்காக நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்தனர்.
* மாநிலங்களவை எம்பிக்கள் பலரும் மக்களவையில் உள்ள பார்வையாளர்கள் அரங்கில் கூடி பட்ஜெட் உரையை கேட்டனர். பார்வையாளர்கள் அரங்கில் நிர்மலா சீதாராமனின் மகள் வங்கமாயி பரகலா மற்றும் உறவினர்கள் இருந்தனர்.

3 கோடி வீடுகள் கூடுதலாக கட்டப்படும்
* பல்வேறு மாநிலங்களில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நீர்பாசன திட்டங்களை மேம்படுத்துவதற்காக ரூ.11,500கோடிக்கான நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படும். இதில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 20 பிற திட்டங்கள், தடுப்பணைகள், நதி மாசு குறைப்பு உள்ளிட்டவையும் அடங்கும்.
* ஊரக வளர்ச்சி, கிராமப்புற உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் 3 கோடி வீடுகள் கூடுதலாக கட்டப்படும். 25000 கிராமப்புற குடியிருப்புக்களுக்கு சாலை இணைப்புக்களை வழங்குவதற்காக பிரதமர் கிராம் சதக் யோஜனா திட்டம் 4வது கட்டமாக தொடங்கப்படும்.
* குடிநீர் மற்றும் சுகாதார துறைக்கு ரூ.77,390 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் வெறும் 0.5சதவீதம் மட்டுமே நிதி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.77,032 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
* ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள், வளர்ச்சி வங்கிகளுடன் இணைந்து 100 பெரிய நகரங்களில் நீர் விநியோகம், கழிவு நிர் சுத்திகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்த ஊக்குவிக்கப்படும்.

* சமூக நீதித்துறைக்கு ரூ.13,539 கோடி
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.13,539 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் இதற்கான ஒதுக்கீடு 9,853 கோடியாகும். தற்போது இதற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது.

* விவசாயத்துக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு
ஒன்றிய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ள 1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். வேளாண் உற்பத்தியை அதிகரிக்க பெரிய அளவிலான காய்கறி உற்பத்தி தொகுப்பு உருவாக்கப்படும். கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க, மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல் முறையில் வேளாண் பொருள்கள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

* நகர்ப்புற மக்களுக்கு வீடு வழங்க ரூ.10லட்சம் கோடி
பிரதமரின் ஆவாஸ் யோஜனா நகர்ப்புற திட்டம் 2.O இன் கீழ் 1 கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர பிரிவை சேர்ந்த குடும்பங்களுக்கு ரூ.10லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி வீடுகள் கட்டி தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2.2லட்சம் கோடி நிதி உதவியும் அடங்கும். குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கவும் , வட்டி மானியம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

* 9 துறைகளுக்கு முன்னுரிமை
விவசாய துறையில் இடர்பாடுகளை போக்கி உற்பத்தி மற்றும் சாகுபடியை அதிகரித்தல், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நீதி, உற்பத்தி மற்றும் சேவைகள், நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள் ஆகிய 9 துறைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

* 5 கோடி பழங்குடியினருக்கு ரூ.13 ஆயிரம் கோடி நிதி
நாட்டில் உள்ள பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்காக பட்ஜெட் ஒதுக்கீட்டை கிட்டத்தட்ட 70 சதவீதம் ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள 63,000 பழங்குடியின கிராமங்களை சேர்ந்த ஐந்து கோடி பழங்குடியினர் பயனடைவார்கள். பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்துக்கு கடந்த நிதியாண்டில் ரூ.7,605 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ரூ.13,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. தொலைதூர பகுதிகளில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க ஏகலைவா மாதிரி குடியிருப்பு பள்ளிகளை நிறுவ ரூ.6,399 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான நிதி ரூ.230 கோடியிலிருந்து ரூ.165 கோடியாக குறைந்துள்ளது. பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்கான ஒதுக்கீடு ரூ.2,959.43 கோடியிலிருந்து ரூ.6,611.69 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமரின் ஆதி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்திற்கான நிதியுதவி ரூ.300 கோடியிலிருந்து ரூ.1,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* உள்துறைக்கு ரூ.2.19 லட்சம் கோடி
2024-25ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒன்றிய உள்துறைக்கு ரூ.2.19 லட்சம் கோடி அரசு ஒதுக்கியுள்ளது.இதில் பெரும்பகுதி தொகையான ரூ.1,43,275 கோடி ஒன்றிய ரிசர்வ் போலீஸ்(சிஆர்பிஎப்), எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) மற்றும் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்) ஆகியவற்றுக்கு கொடுக்கப்படும்.

* விமான போக்குவரத்துக்கு நிதி குறைப்பு
ஒன்றிய விமான போக்குவரத்து துறைக்கு கடந்த ஆண்டு ரூ.2,922.12 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. வரும் மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டுக்கு ரூ.2,357 கோடி மட்டுமே நிதியமைச்சகம் ஒதுக்கியுள்ளது.

The post பீகார், ஆந்திராவுக்கான சிறப்பு நிதி அறிவிப்பின்போது எதிர்ப்பு கோஷம்: பட்ஜெட் அறிவிப்பில் பரபரப்பு சம்பவங்கள் appeared first on Dinakaran.

Tags : Bihar, Andhra Pradesh ,Nirmala Sitharaman ,Union Finance Minister ,Morarji Desai ,
× RELATED சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு