×

வேலைவாய்ப்பை அதிகரிக்க 5 சிறப்பு திட்டம் முதல்முறை ஊழியர்களுக்கு கூடுதலாக ஒருமாத சம்பளம்

வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இதற்காக 3 அம்சத் திட்டம் உட்பட 5 திட்டங்கள் பிரதமரின் லட்சியத் திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ, பி, சி என 3 அம்ச திட்டங்களும், இன்டர்ன்ஷிப், ஐடிஐ தரம் உயர்த்துதல் என 2 திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 5 ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி நிதியில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என ஒன்றிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதில் திட்டம் ஏ-ன்படி, அனைத்து துறையிலும் முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம் மானியமாக (அதிகபட்சம் ரூ.15,000) வழங்கப்படும். பிஎப்பில் புதிதாக சேர்க்கப்படும் இந்த ஊழியர்களின் மாத சம்பளம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த மானியம் 3 தவணையாக வழங்கப்படும். இது 2 ஆண்டு திட்டமாகும். இதன் மூலம் 2.10 கோடி இளைஞர்கள் பயன் அடைவர். திட்டம் பி-ன்படி, 50 அல்லது மொத்த ஊழியர்களில் 25 சதவீதம் அளவுக்கு ஒரே நேரத்தில் அதிகப்படியான முதல் முறை ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில், அந்நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட சதவீதத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன் அடைவர். திட்டம் சி, முதலாளிகளை மையமாகக் கொண்டது.

இதில் ஒவ்வொரு கூடுதல் பணியாளருக்கும் அவர்களின் பிஎப்பங்களிப்புக்காக அரசு 2 ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.3,000 வரை முதலாளிகளுக்கு திருப்பி செலுத்தும். இந்த திட்டம் 50 லட்சம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பை அளிக்கும். 4வது திட்டமான இன்டர்ன்ஷிப் திட்டம் மூலம் 1 கோடி இளைஞர்களுக்கு இன்டரன்ஷிப் பயிற்சி வழங்கப்படும். 5வது திட்டம் மூலம் நாடு முழுவதும் 1000 ஐடிஐக்கள் தொழில்துறையின் மையமாக தரம் உயர்த்தப்படும். அவற்றின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, தொழில் துறையின் தேவைக்கு ஏற்ப பாடதிட்டங்கள் மாற்றப்பட்டு, புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படும்.

* ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடியின் லட்சிய திட்டங்கள் என 5 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 4வது திட்டத்தின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு 500 முன்னணி நிறுவனங்களில் பணி அனுபவம் பெறும் வகையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், இன்டர்ஷிப் காலத்தில் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 உதவித் தொகை வழங்கப்படும். இதில் ரூ.6,000 தொகையை நிறுவனங்கள் தங்களின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியிலிருந்து ஒதுக்க வேண்டும். ஒன்றிய அரசு ரூ.54,000 நிதியை வழங்கும். ஓராண்டு இன்டர்ன்ஷிப் மூலம் இளைஞர்கள் பணிச்சூழல், பல்வேறு தொழில், வேலைவாய்ப்புகளை அறிய முடியும். 21 முதல் 24 வயதுக்கு உட்பட்ட படிப்பை முழுமையாக முடிக்காத மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.

* உயர் கல்வி பயில ரூ.10 லட்சம் கடன்
உள் நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதன்படி ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கடன் வழங்கப்படும்.2024-25 பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகிவற்றுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

* விண்வெளிதுறைக்கு ரூ.1000 கோடி
விண்வெளி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.1000 கோடி மூலதன நிதி ஒதுக்கப்படும். இந்த நிதியானது விண்வெளி தொழில்நுட்பத்தில் தனியார் துறை சார்ந்த ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் வணிக மேம்பாட்டை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

* முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு
முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முத்ரா கடன் உதவி திட்டம் ரூ 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமரின் முத்ரா யோஜனா திட்டமானது கடந்த 2015 ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத வேளாண் தொழில் சேராத நிறுவனங்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் தொகை வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

* எனக்கு மிகவும் மகிழ்ச்சி; நிதிஷ்குமார்
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிறப்பு உதவி பீகாரின் கவலைகளை நிவர்த்தி செய்தது என்று முதல்வர் நிதிஷ் குமார் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,’ தொழில்நுட்ப காரணங்களுக்காக சிறப்பு அந்தஸ்து சாத்தியமில்லை என்றால், பீகாரில் நாங்கள் முன்மொழிந்த சிறப்பு உதவி வேறு வழியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் அறிவிப்பால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் சிறப்பு அந்தஸ்து இல்லை என்று கூறும் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ​​மாநிலத்திற்கு உரிய தகுதியை பெறவே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநில அரசின் முயற்சியின் பலனாக செய்த முன்னேற்றம் காணமுடியும்’ என்றார்.

* இது என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கான பட்ஜெட்- சரத்பவார் அணி கடும் தாக்கு
தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் அணி செய்தி தொடர்பாளர் கிளைட் க்ராஸ்டோ தன் டிவிட்டர் பதிவில், “நேற்று தாக்கல் செய்யப்பட்டது இந்தியாவுக்கான நிதிநிலை அறிக்கை இல்லை. அது பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கான நிதிநிலை அறிக்கை. மகாராஷ்டிராவை புறக்கணித்த பாஜவுக்கு வரவுள்ள பேரவை தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

* நாட்டின் வளர்ச்சி வேகத்தை தூண்டுகிறது- அமித்ஷா பெருமிதம்
2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் டிவிட்டர் பதிவில், “பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்கீழ் நாட்டின் புதிய நோக்கம், நம்பிக்கை ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதோடு, அவற்றை பலப்படுத்துகிறது. இந்திய இளைஞர்கள் பெண் சக்தி, விவசாயிகளின் சக்தியை பயன்படுத்தி தொழில், வேலை வாய்ப்புகளின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை அதிகப்படுத்துகிறது. மக்களுக்கான, வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையுடன் நிதிநிலை அறிக்கை தயாரித்த பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

* விவசாயிகள், இளைஞர்கள் நலன்கள் புறக்கணிப்பு- அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
ஒன்றிய நிதிநிலை அறிக்கை தொடர்பாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது, “அரசியல் நிர்ப்பந்தத்தால் ஆட்சியை காப்பாற்றி கொள்ள ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு லளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாட்டின் பிரதமரை முடிவு செய்யும் உத்தரபிரதேச மாநிலத்துக்கு பாஜ நிதிநிலை அறிக்கையில் எதுவும் இல்லை. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என அரசு முன்பு கூறியது. ஆனால் விவசாயிகளுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சி திட்டங்களால் எந்த பயனும் இல்லை. அவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்” என இவ்வாறு தெரிவித்தார்.

* ஒன்றிய பட்ஜெட் ஏழைகளுக்கு எதிரானது- மம்தா
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது, “2024-25 நிதிநிலை அறிக்கையில் மேற்குவங்கம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களின் நலனை ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை ஏழைகளுக்கு எதிரான, தொலைநோக்கு பார்வையற்ற, திசையற்ற, அரசியல் சார்புடைய அறிக்கை” என்று குற்றம்சாட்டினார்.

The post வேலைவாய்ப்பை அதிகரிக்க 5 சிறப்பு திட்டம் முதல்முறை ஊழியர்களுக்கு கூடுதலாக ஒருமாத சம்பளம் appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு