*2 மையங்களில் 802 பேர் எழுதினர்; கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நேற்று நடந்தது. அதில், 802 பேர் தேர்வு எழுதினர்.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த மாதம் 23ம் தேதி நடப்பதாக இருந்த தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், இந்த போட்டித்தேர்வு திட்டமிட்டபடி நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து, ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இந்த போட்டித்தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தர வரிசை பட்டியல் இடஒதுக்கீடு சுழற்சி முறையில் வெளியிடப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.மேலும், இப்போட்டித்தேர்வு மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்போட்டித்தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 26,510 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 மையங்களில் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில், போட்டித்தேர்வுக்கு 826 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 802 பேர் தேர்வு எழுதினர். 24 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
அதன்படி, திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 390 ேபர், விடிஎஸ் ஜெயின் அரசு நிதி உதவி மேல்நிலை பள்ளியில் 412 பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், தேர்வு மையங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இடைநிலை ஆசிரியர் பணக்கான போட்டித்தேர்வு நடந்த மையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க பறக்கும் படைகள் உள்ளிட்ட கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வு appeared first on Dinakaran.