*போலீசார் அதிரடி நடவடிக்கை
புளியங்குடி : புளியங்குடியில் கத்தியை கையில் வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் பொது அமைதியை சீர் குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் அல்லது வீடியோ பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்பி சுரேஷ் குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
அதன்படி புளியங்குடியை சேர்ந்த முகைதீன் அப்துல் காதர் மகன் செய்யது அலி பாதுஷா (24), அதே ஊரை சேர்ந்த சேக் ஒலி மகன் முஹம்மது அன்சாரி (21) மற்றும் ரஹ்மத்துல்லாஹ் மகன் செய்யது இப்ராஹிம் பாதுஷா (23) ஆகியோர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கத்தியை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வசனங்களை பேசிய படி ரீல்ஸ் செய்து பதிவிட்டு இருப்பது போலீசார் கவனத்துக்கு வந்தது.
இதுகுறித்து எஸ்ஐ மாடசாமி தலைமையிலான போலீசார் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்ட 3 வாலிபர்களை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் கூறுகையில், ‘இது போன்ற அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடும் நபர்கள் அரிவாள், கத்தி, போன்ற ஆயுதங்களை கொண்டு பிறந்தநாள் விழா மற்றும் பிற விழாக்களில் கேக் வெட்டும் நபர்கள், வில்லன் போன்ற தொனியில் பின் இசைகள் கொண்ட பாடல் வீடியோக்கள் பதிவிடும் நபர்கள் விவரங்களை உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். காவல்த்துறையினர் சமூக வலை
தளங்கள் கண்காணிப்பு குழு எப்போதும் இதனை கண்காணிப்பார்கள். இத்தகைய நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.
The post ‘இன்ஸ்டாவில்’ பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மூன்று வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.