சேந்தமங்கலம், ஜூலை 22: சேந்தமங்கலம், எருமப்பட்டி ஒன்றியத்தில் 428 பயனாளிகளுக்கு ரூ.3.83 கோடியில் நலத்திட்ட உதவிகளை ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார். சேந்தமங்கலம் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, அட்மா குழு தலைவர்கள் அசோக்குமார், பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் வரவேற்று பேசினார்.
விழாவில் ராஜேஸ்குமார் எம்பி கலந்துகொண்டு 428 பயனாளிகளுக்கு ரூ.3.83 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை தொடர்ந்து அவர் பேசுகையில், ‘சேந்தமங்கலம் மற்றும் எருமப்பட்டி பகுதிகளில் மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கிடும் வகையில் ரூ.364 கோடியில் புதிய குடிநீர் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகள் மற்றும் சேந்தமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் வீடுகள் தோறும் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது. இதுவரை மாவட்டத்தில் சுமார் 16,500 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சுமார் 420 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படவுள்ளது. பட்டாக்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்ட ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது,’ என்றார். நாமக்கல் ஆர்டிஓ பார்த்திபன், நகர திமுக செயலாளர் தனபாலன், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலாளர் முருகேசன், ஒன்றிய குழு தலைவர் மணிமாலா, துணைத்தலைவர் கீதா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் விமலா சிவக்குமார், தாசில்தார் சக்திவேல், பிடிஏ தலைவர் கிருஷ்ணகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post 428 பயனாளிகளுக்கு ரூ.3.83 கோடியில் நல உதவிகள் appeared first on Dinakaran.