×

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை வழங்க கோரிக்கை

 

ஈரோடு, ஜூலை 22: மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க கோரி ஈரோட்டில் நடந்த ஓய்வூதியர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு பெரியார் மன்றத்தில் அகில இந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தின் 6வது கோட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு கோட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கோட்ட சங்க புரவலர் நல்லதம்பி முன்னிலை வகித்தார்.

கோட்ட செயலாளர் ராமசாமி ஆண்டறிக்கையை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய அஞ்சல் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ராகவேந்திரன் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார். இந்த மாநாட்டில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8வது ஊதிய குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். மாதாந்திர மருத்துவ படியை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். முடக்கப்பட்ட 18 மாத அகவிலை படியை உடன் வழங்க வேண்டும். பணமில்லா உள் நோயாளி சிகிச்சை பெற மாவட்டத்துக்கு ஒரு மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 105 மாதங்களாக வழங்கப்படாத பஞ்சபடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், சேலம் மாவட்ட தலைவர் கணேசன், ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் மணிபாரதி மற்றும் சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Erode ,All India Post ,Erode Periyar Forum ,R.M.S. 6th Zonal Conference of Pensioners' Association ,Dinakaran ,
× RELATED ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள தனியார்...