×
Saravana Stores

மதுரை மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்ட வழக்கில் தேடப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் மாஜி மனைவி குஜராத் லாட்ஜில் திடீர் தற்கொலை: தலைமறைவான ரவுடி காதலனை தேடும் போலீஸ்

மதுரை: மதுரையில் பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி குஜராத்தில் உள்ள லாட்ஜில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த ராஜ்குமார் மனைவி மைதிலி ராஜலட்சுமி (40). இவர்களது மகன், மதுரை தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஆட்டோவில் பள்ளி சென்றபோது மாணவரை, ஆட்டோ டிரைவர் பால்பாண்டியுடன் கடந்த 11ம் தேதி, துப்பாக்கி, கத்தி ஆயுதங்களைக் காட்டி மிரட்டி கும்பல் கடத்தியது.

பின்னர், மைதிலி ராஜலட்சுமிக்கு போன் செய்து மாணவரை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியது. இதுகுறித்த மிரட்டல் ஆடியோவும் வெளியானது. மைதிலி ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிந்து, இன்ஸ்பெக்டர் காசி தலைமையிலான தனிப்படையினர் 3 மணிநேரத்தில் சிறுவன், ஆட்டோ டிரைவரை செக்கானூரணி அருகே மீட்டனர்.

தனிப்படையினர் தப்பியோடிய கும்பலை தேடிய நிலையில், கடத்தலில் ஈடுபட்ட, பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரரான தேனி செந்தில் குமார் (45), கூட்டாளிகள் தென்காசி வீரமணி (30), காளிராஜ் (36), நெல்லை அப்துல் காதர் (38) ஆகிய 4 பேர் அடுத்தடுத்து கைதாகினர். இவர்களது வாக்குமூலத்தின் பேரில் பணம் மற்றும் சொத்து பிரச்னையில் மதுரை எஸ்எஸ்.காலனியை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா, அவரது காதலனும், ரவுடியுமான தூத்துக்குடி மகாராஜன் ஆகியோர் கடத்தியது தெரியவந்தது. இவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் குஜராத் அகமதாபாத் கலெக்டர் ரஞ்சித்குமார் பங்களாவில் இருந்து ஒருவர் போன் செய்து ‘உங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டார்’ என சூர்யாவின் தாயார் உமாவுக்கு நேற்று தெரிவித்தனர். சூர்யா குஜராத்திலுள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தபோது, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசில் சூர்யாவின் தாயார் உமா நேற்றுமாலை அளித்த புகார் மனுவில், ‘‘குஜராத் போலீசில் இருந்து என் மகள் தற்கொலை செய்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். என் மகள் சூர்யா மன உளைச்சல் காரணமாகவே தற்கொலை செய்துள்ளார். இதற்கு மைதிலி ராஜலட்சுமி, கிஷோர் ஆகியோரே காரணம். அவர்கள், என் மகளின் உடமைகளையும், பணம், சொத்துக்களையும் மோசடி செய்தது மட்டுமின்றி, பொய் புகாரும் அளித்து மகளை அசிங்கப்படுத்தி விட்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு மைதிலி ராஜலட்சுமி, கிஷோரின் சதியே காரணம். பொய் புகார் அளித்த அவர்கள் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘‘சூர்யாவின் முன்னாள் கணவர் குஜராத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிகிறார். இரு குழந்தைகள் பிறந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் தம்பதி பிரிந்துள்ளனர். மதுரையில் 6 மாதம் முன்பு எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் பெற்றோர் மீதும் புகார் தெரிவித்து, பெற்றோரையும் பிரிந்தார். பெற்றோருடன், கணவரையும் பிரிந்து வாழ்ந்து வந்த இவர், சென்னையில் வசித்தபோது தனக்கு அறிமுகமான மகாராஜனுடன் சேர்ந்து, கூலிப்படை உதவியில் கடத்தலை அரங்கேற்றியுள்ளார்.

தேடப்பட்டவர்களில் 4 பேர் ஏற்கனவே கைதான நிலையில், சூர்யா குஜராத் லாட்ஜில் தற்கொலை செய்துள்ளார். சூர்யா குஜராத்தில் அவர் தங்கிய விடுதியில் தற்கொலை செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவரது தாயாரும் காவல்நிலையம் வந்து, மகளின் தற்கொலை பற்றி உறுதி செய்து சென்றுள்ளார். கணவரை பிரிந்த நிலையில், பெற்றோருக்கும் எதிராக சூர்யா இருந்ததுடன், கடத்தல் வழக்கில் சிக்கிய நிலையில் விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம். எனினும் தொடர் விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வழக்கில் தலைமறைவான ரவுடி மகாராஜன் சிக்கும்போதே முழு விபரமும் தெரிய வரும்’’ என்றனர்.

The post மதுரை மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்ட வழக்கில் தேடப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் மாஜி மனைவி குஜராத் லாட்ஜில் திடீர் தற்கொலை: தலைமறைவான ரவுடி காதலனை தேடும் போலீஸ் appeared first on Dinakaran.

Tags : IAS ,Madurai ,Gujarat Lodge ,Gujarat ,Maithili Rajalakshmi ,Rajkumar ,S.S. Colony, Madurai ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!