×

விடுதி உணவு சாப்பிட்டதால் நூற்றுக்கணக்கானோர் மயக்கம் செல்போன் கம்பெனி பெண் ஊழியர்கள் 14 மணி நேரம் மறியல் போராட்டம்: ஸ்ரீபெரும்புதூர் உள்பட 4 இடங்களில் நடந்ததால் பரபரப்பு

சென்னை: விடுதியில் தரமற்ற உணவு சாப்பிட்டதால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மயங்கி விழுந்ததாக கூறி, சுங்குவார்சத்திரம் செல்போன் தொழிற்சாலையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் ஸ்ரீபெரும்புதூர் உள்பட 4 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 14 மணி நேரம் நடந்த போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் தனியார் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் வேலை செய்கின்றனர். இந்த ஊழியர்கள் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வாலாஜாபாத், வடக்குப்பட்டு ஆகிய பகுதிகளில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் அருகே ஜமீன்கொரட்டூரில் தனியார் விடுதியில் வழங்கிய தரமற்ற உணவை சாப்பிட்ட 100 பெண்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தொழிற்சாலை மற்றும் தனியார் விடுதியில் தரமற்ற உணவு வழங்கும் கேன்டீன் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதை கண்டித்து, நேற்று முன்தினம் காலை பணிக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நள்ளிரவு முதல் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். தொழிற்சாலை முன்பும் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தொழிற்சாலை நிர்வாகம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் நேற்று காலை வரை மறியல் தொடர்ந்தது. கேன்டீன் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மறியலை கைவிட மாட்டோம் என தொழிலாளர்கள் தெரிவித்தனர். எனவே, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டது. தகவலறிந்து, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள், வீடியோ காலில் பேசினர். பின்னர் கலெக்டர், `பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் உள்ளனர். 2 பெண்கள் இறந்துவிட்டதாக கூறுவது வதந்தி. எனவே, யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும்’ என்றார். இதனிடையே, நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 5க்கும் மேற்பட்ட பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு சுங்குவார்சத்திரத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் வந்து ஊழியர்களிடம் பேசினர். அப்போது, தொழிற்சாலை நிர்வாகம், கேன்டீன் உரிமையாளர் விடுதி வார்டன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்ததால் மறியலை கைவிட்டு பிற்பகல் 3 மணி அளவில் கலைந்து சென்றனர்.இதேபோல், சுங்குவார்சத்திரத்தில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களும், சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்  தொழிலாளர்களுக்கு ஆதரவாக காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம்  வருவாய் கோட்ட அலுவலர் ராஜலஷ்மி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு 5 மணி நேரமாக மறியல் கைவிடப்பட்டது. திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள  விடுதியில் தங்கியுள்ள 500க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் நேற்று அதிகாலை  சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். திருவள்ளூர் கோட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர்  செந்தில்குமார், போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன், தாலுகா இன்ஸ்பெக்டர்  நாகலிங்கம் ஆகியோர் போலீசாருடன் சென்று பேச்சு நடத்தினர். பின்னர், போராட்டத்தை கைவிட்டனர். விடுதிக்கு சென்ற விஏஓவுக்கு மிரட்டல்செல்போன் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்ட விடுதியில் ஜமீன் கொரட்டூர் கிராம நிர்வாக அலுவலர் மோகன் ஆய்வு நடத்த சென்றார். அப்போது அங்கிருந்த தனியார் மெரைன் இன்ஜினியரிங் கல்லூரி நிர்வாகிகளான தியாகராய நகரை சேர்ந்த செந்தில்குமார் (50), அவரது மனைவி ஹேமலதா (45) மற்றும் சமையலர் முனுசாமி ஆகிய 3 பேரும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். மேலும் அங்கு விடுதி சமையலறையில் கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தது தெரிந்தது. உணவை பரிசோதனை செய்ய முயன்றபோது அவரை தடுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மோகன் வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்….

The post விடுதி உணவு சாப்பிட்டதால் நூற்றுக்கணக்கானோர் மயக்கம் செல்போன் கம்பெனி பெண் ஊழியர்கள் 14 மணி நேரம் மறியல் போராட்டம்: ஸ்ரீபெரும்புதூர் உள்பட 4 இடங்களில் நடந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Chennai ,Sunguarschatram ,
× RELATED ராஜிவ் காந்தியுடன் உயிர்நீத்த...