×

சார்தாம் யாத்திரையில் சோகம் கேதார்நாத்தில் நிலசரிவு 3 பக்தர்கள் பரிதாப பலி: 8 பேர் காயம்

ருத்ரபிரயாக்: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நேற்று ஏற்பட்ட நிலசரிவில் 3 பக்தர்கள் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய 4 புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான சார்தாம் யாத்திரை கடந்த மே மாதம் 10ம் தேதி தொடங்கிய நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சார்தாம் புனித யாத்திரை சென்று வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் முழுவதும் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதால் பல பகுதிகளில் நிலசரிவுகள் நீடிக்கிறது. கவுரிகுந்த் – கேதார்நாத் மலையேற்ற பாதையில் சிர்பசா பகுதி அருகே நேற்று காலை 7.30 மணிக்கு நிலசரிவு ஏற்பட்டது. இதில் யாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் 3 பேர் பலியாகினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மாநில பேரிடர் மீட்பு குழுவினர் நிலசரிவில் காயமடைந்த 8 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். உயிரிழந்த 3 பேரில் மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த கிஷோர் அருண் பரேட்(31), ஜல்னா மாவட்டத்தை சேர்ந்த சுனில் மகாதேவ் காலே(24) மற்றும் ருத்தரபிரயாக்கை சேர்ந்த அனுராக் பிஷ்டே என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி தன் எக்ஸ் தள பதிவில், “விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

The post சார்தாம் யாத்திரையில் சோகம் கேதார்நாத்தில் நிலசரிவு 3 பக்தர்கள் பரிதாப பலி: 8 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Chardham Yatra ,Kedarnath ,Rudraprayag ,Kedarnath, Uttarakhand ,Uttarakhand ,Gangotri ,Yamunotri ,Badrinath ,Chardham Yatra Tragedy Landslide ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு