×

வங்கதேசத்தில் தீவிரமடைந்துவரும் போராட்டம் 778 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: வங்கதேசத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் 778 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாக ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் அரசின் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றது. கடந்த ஒரு வாரத்துக்கும் முன் தொடங்கிய இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. கலவரங்களில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொடர் வன்முறை மற்றும் கலவரங்களால் அங்கிருக்கும் வெளிநாட்டை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேறத்தொடங்கி உள்ளனர்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று முன்தினம் கூறுகையில், ‘‘வங்கதேசத்தில் சுமார் 15000 இந்தியர்கள் இருக்கின்றனர், டாக்கா உட்பட பல்வேறு இடங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் இந்திய மக்கள் வெளியேறுவதற்கு உதவி வருகின்றன” என்றார். இந்நிலையில் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அண்டை நாட்டில் நிகழும் மோசமான கலவரத்தின் காரணமாக சுமார் 778 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் சர்வதேச எல்லைகள், சாலைகள், ரயில்வே மூலமாக திரும்பியுள்ளனர். 200 மாணவர்கள் வழக்கமான விமான சேவைகள் மூலமாக இந்தியா திரும்பியுள்ளனர். இந்திய மாணவர்கள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்திய தூதரகங்கள் வங்கதேச அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post வங்கதேசத்தில் தீவிரமடைந்துவரும் போராட்டம் 778 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,New Delhi ,Union Ministry of External Affairs ,Dinakaran ,
× RELATED அரசியல் கருத்துகளை சொல்வது நட்புறவை...