பூந்தமல்லி, ஜூலை 21: பூந்தமல்லியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்து சேதமானது. பெரும்புதூரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது நண்பர் பிரபு. இந்நிலையில், தேவராஜ், பிரபு ஆகியோர் நேற்று காரில் காசிமேடு சென்று விட்டு மீண்டும் பெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பூந்தமல்லி, டிரங்க் சாலை பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே வந்தபோது காரில் இருந்து திடீரென்று புகை வெளியேறியது. இதையடுத்து, தேவராஜ் காரை உடனடியாக நிறுத்திவிட்டு பிரபுவுடன் வெளியேறினார்.
சிறிது நேரத்தில் கார் முழுவதுமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் அருகே உள்ள கடைகளில் இருந்து தீயணைப்பான்களை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முடியாத நிலையில் பூந்தமல்லி தீயணப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் சாலையில் நடுவே எரிந்து கிடந்த காரை மீட்பு வாகனம் மூலம் அகற்றினர். மேலும், கார் தீப்பிடித்து எரிந்தது குறித்து விசாரித்து வருகின்றனர். சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்த எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post பூந்தமல்லியில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து சேதம் appeared first on Dinakaran.