×
Saravana Stores

சிறுசேரி சிப்காட் வாயிலில் ஆக்கிரமிப்பு அகற்றம்: வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை

திருப்போரூர்: நாவலூர் அருகே சிறுசேரி சிப்காட் வாயிலில் ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கையால் இடித்து அகற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாவலூர் அருகே சிறுசேரியில் சிப்காட் மென்பொருள் பூங்கா உள்ளது. இதன் நுழைவு வாயிலையொட்டி தனியாருக்கு சொந்தமான மனைகள், கட்டிடங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சில பகுதிகள் சிறுசேரி சிப்காட் வளாக எல்லைக்குள் வருவதாக கூறி சிப்காட் நிர்வாகம் அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை, எதிர்த்து கட்டிடம் மற்றும் மனை உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த கட்டிடங்கள் பொது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி, தனிநபர் ஒருவர் சிப்காட் நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி சிப்காட் மென்பொருள் பூங்கா நுழைவு வாயில் அருகே ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த கடைகள், கட்டிடங்களை இடிக்க முடிவு செய்து சிப்காட் திட்ட அலுவலர் சாந்தினி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். இந்த நடவடிக்கைக்கு கட்டிட உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அனுமதி கோரப்பட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று சிப்காட் நிர்வாகம் சார்பில் ஏகாட்டூர் ஓஎம்ஆர் சாலையில் கட்டப்பட்டிருந்த 3 மாடி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கட்டிடத்தை இடித்து விட்டு இடிபாடுகளை சிப்காட் நிர்வாகம் லாரி மூலம் எடுத்துச்சென்றது.

இதற்கு கட்டிட உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இடிபாடுகளை எடுத்து செல்லவும் சிப்காட் நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது என்று கூறியதையடுத்து கட்டிடம் இடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 4.5 கோடி ரூபாய் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
சிறுசேரி சிப்காட் வாயிலில் ஆக்கிரமிப்பு அகற்றம்: வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை

 

The post சிறுசேரி சிப்காட் வாயிலில் ஆக்கிரமிப்பு அகற்றம்: வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Sipkot gate ,Sirusheri ,Tirupporur ,Sirucherry Chipgat gate ,Nawalur ,ChipCot Software Park ,Sirusery ,Navalur ,Sirucheri Chipkot gate ,Revenue ,Dinakaran ,
× RELATED சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர்ப்புற...