×

மைக்ரோசாப்ட் மென்பொருள் முடங்கியதால் உலகம் முழுவதும் விமான சேவை பாதிப்பு: இந்தியாவில் 200 விமானங்கள் ரத்து, லட்சக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு

* ஐ.டி., வங்கிகள், பங்கு சந்தைகள் பாதிக்கப்பட்டன

புதுடெல்லி: மைக்ரோசாப்ட் மென்பொருள் திடீரென முடங்கியதால் உலகம் முழுவதும் வங்கிகள், விமான சேவை, பங்கு சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் 1400 விமானங்களும்,இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், லட்சக்கணக்கான விமானப்பயணிகள் அவதிக்குள்ளாகினர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் 365 மென்பொருளை விமான நிறுவனங்கள், வங்கிகள்,தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்டவற்றில் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 365 மென்பொருள் நேற்று திடீரென முடங்கியது.

விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கம்ப்யூட்டரில் ஆட்டோ அப்டேட் வைத்திருந்தவர்களுக்கு தான் இந்த பாதிப்பு ஏற்பட்டது. மைக்ரோசாப்ட் 365, எக்ஸ் பாக்ஸ், அவுட்லுக் ஆகியவை செயலிழந்துள்ளது. மென்பொருள் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் பெரும்பான்மையான மைக்ரோசாப்ட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் பயனாளர்களின் பலரது கம்ப்யூட்டர் ஸ்கீரின் நீல நிறத்தில் மாறிவிட்டது. இது புளூ ஸ்கீரின் ஆப் டெத் எரர் என்று கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விண்டோஸ் மென்பொருளில் ஏற்பட்ட பிரச்னை விரைவில் சரி செய்யப்படும்.மத்திய அமெரிக்காவில், இயல்பு நிலை திரும்பியுள்ளது என நிறுவனம் கூறியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மென்பொருள் முடங்கியதால் பல நாடுகளில் மைக்ரோசாப்ட் பயனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொழில்நுட்பம், வங்கி சேவை, மருத்துவ சேவை, விமான சேவை, அமேசான் சேவைகள், மீடியா மற்றும் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விமான நிலையங்களின் செயல்பாடு, விமான சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா போன்ற விமான நிறுவனங்களின் சேவையில் காலை 11 மணி முதலே பாதிப்பு ஏற்பட்டது. இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,எங்கள் சிஸ்டம் தற்போது மைக்ரோசாப்ட் மென்பொருள் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் முன்பதிவு, செக்-இன், உங்களின் போர்டிங் பாஸை பெறுதல் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

இதனால் விமான நிலையங்களில் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர். இந்தியாவில் இண்டிகோ உள்பட பல நிறுவனங்கள் 200க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளன. பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். விமான புக்கிங்கை வேறு நாளுக்கு மாற்றி தர விமான நிறுவனங்கள் முன்வந்தது. பணத்தை திருப்பி கேட்டவர்களுக்கு முழு பணமும் தரப்படும் என்று விமான நிறுவன அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். மாற்று விமானத்தில் செல்ல முன்வந்த பயணிகள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அமெரிக்க விமான நிறுவனங்கள் பல சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளன. ஆனால், யுனைடட், அமெரிக்கன் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானங்கள் மட்டும் இயங்கின. அலாஸ்காவில் அவசரசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானவர்கள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டனர். லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து பல விமானங்கள் இயக்கப்பட்டன என்றாலும் அவை தாமதமாக புறப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 1400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 56 விமானங்கள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் இருந்து புறப்படக்கூடியவை என சர்வதேச விமான போக்குவரத்து தொடர்பான ஆய்வு அமைப்பான ‘சிரியம்’ தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் விமானசேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வணிக வளாகங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர்கள் செயல் இழந்துள்ளதால் ஊடகங்கள்,தொலை தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் பல வங்கிகளில் ஆன்லைன் வர்த்தக சேவைகள் நடைபெறவில்லை. இங்கிலாந்து, ஜெர்மனியில் மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. நெட்வொர்க் பிரச்னை காரணமாக நோயாளிகள் ஆன்லைனில் புக் செய்து மருத்துவரை பார்க்க முடியவில்லை. ஜெர்மனியில் பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

லண்டன் பங்குசந்தை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ரயில்,விமானங்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதோடு தொலைக்காட்சி நிலையங்களிலும் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளன. தென்னாப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதில் பிரச்னைகள் ஏற்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.

* பெயர், சீட் நம்பர் கையால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ்
விமானங்களில் பயணிப்பவர்களுக்கு சீட் எண் ஒதுக்கப்பட்டு அவர்கள் விமானத்தில் ஏற அங்கீகாரம் அளித்து வழங்கப்படுவது போர்டிங் பாஸ். இது கணினி உதவியுடன் அச்சிட்டு வழங்கப்படும். ஆனால், நேற்று மைக்ரோசாப்ட் மென்பொருள் முடக்கத்தால் கணினிகள் செயல் இழந்ததால், விமான நிறுவன ஊழியர்கள் கையால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ்களை பயணிகளுக்கு வழங்கினர்.

இது குறித்து ஆகாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்கள் சேவை வழங்குனருடன் உள்ள உள்கட்டமைப்பு சிக்கல்கள் காரணமாக, முன்பதிவு, செக்-இன் மற்றும் முன்பதிவு சேவைகளை நிர்வகித்தல் உள்ளிட்ட எங்களின் சில ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக கிடைக்காது. தற்போது விமான நிலையங்களில் செக்-இன் மற்றும் போர்டிங் பாஸ் ஆகியவை கையினால் எழுதி கொடுக்கும் (மேனுவல்) முறையை பின்பற்றுகிறோம் என தெரிவித்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் வெளியிட்ட அறிக்கையில், தொழில்நுட்ப சவால்கள் காரணமாக, முன்பதிவு, செக்-இன் மற்றும் முன்பதிவு உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, விமான நிலையங்களில் செக்-இன் மற்றும் போர்டிங் பாஸ் வழங்குவதில் மேனுவல் முறையை செயல்படுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளது.

* முடக்கத்துக்கு காரணமான கிரவுட்ஸ்டிரைக்
மைக்ரோசாப்ட் 365 மென்பொருளுக்காக கிரவுட் ஸ்டிரைக் ஆன்டி வைரஸ் பாதுகாப்பு செயலியில்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆன்டிவைரசை மேம்படுத்துவதற்கான அப்டேட் வெளியிட்டுள்ளது. அதில்தான் கோளாறு இருந்துள்ளது. அந்த அப்டேட்டை பயன்படுத்திய கணினிகள் மட்டும்தான் பாதிப்புக்கு ஆளாகின.

நாசகார செயல் அல்ல: மைக்ரோசாப்ட் மண்டல இயக்குனர் வெங்கட்ரங்கன் கூறுகையில்,‘‘ இது நாசகரமான அல்லது தீவிரவாத செயலோ இல்லை. கணினிகளுக்கு நிரந்தர பாதிப்பும் எதுவும் இல்லை. இந்த பாதிப்பினால் எந்த விதமான தரவுகளும் போகவில்லை. இந்த பிரச்னையால் பெருநிறுவனங்களுக்குதான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், தனி நபர்கள், சிறு நிறுவனங்களுக்கு பாதிப்பு இல்லை. இதை கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் விரைவில் சரி செய்யும். இன்றுக்குள் பிரச்னை சரி செய்யப்பட்டு விடும். யாரும் அச்சப்பட தேவையில்லை’’ என்றார்.

* மைக்ரோசாப்ட் விளக்கம்
இதனிடையே மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பிரச்னையை தீர்க்க அதிக முக்கியத்துவம் தருகிறோம். மைக்ரோசாப்ட் 365ஐ சரி செய்யத் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்கள் சேவைகள் படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது” என்று கூறப்பட்டு இருந்தது.

சைபர் தாக்குதல் அல்ல: கிரவுட் ஸ்டிரைக் தகவல்
சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக் நிறுவனத்தின் சிஇஓ ஜார்ஜ் குர்ட்ஸ் டிவிட்டரில் பதிவிடுகையில், இந்த பிரச்னையைச் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கான தனி அப்டேட் விட்டுள்ளோம். இது விண்டோஸ் அடிப்படையிலான கம்ப்யூட்டர்களை மட்டுமே பாதித்துள்ளது. மேக் அல்லது லினக்ஸ் அடிப்படையிலான கம்ப்யூட்டர்களை பாதிக்கவில்லை.

இது பாதுகாப்பு செயலிழப்பு அல்லது சைபர் தாக்குதல் இல்லை. சிக்கலை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். அதை தனிமைப்படுத்தி அதைச் சரி செய்யும் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளோம். எங்கள் போர்ட்டலுக்கு சென்று இந்த அப்டேட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாங்கள் எங்கள் இணையதளத்தில் தொடர்ந்து தேவையான அப்டேட்களை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

* சென்னை விமான நிலையத்தில் ஒரேநாளில் 28 விமானங்கள் ரத்து
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்னையால் சென்னை விமான நிலையத்தில் இணையதளம் சேவை பாதிக்கப்பட்டது. நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரையில் புறப்பட வேண்டிய டெல்லி, பெங்களூரு, மும்பை, புனே, இந்தூர், ஐதராபாத், கொல்கத்தா, விசாகப்பட்டினம், கோவா உள்ளிட்ட 14 புறப்பாடு விமானங்களும், இந்த பெருநகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 14 வருகை விமானங்களுமாக மொத்தம் 28 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், நேற்று ஒரேநாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுபோல, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் 3 மணி நேரத்துக்கு மேலாக தாமதமானது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தனர். இது, சர்வதேச அளவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு. சென்னை விமான நிலையத்தில் மட்டும் நடக்கவில்லை. எனவே சர்வதேச அளவில் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நள்ளிரவுக்குள் நிலைமை சீரடையும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

* மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒன்றிய அரசு பேச்சு
ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டிவிட்டரில் பதிவிடுகையில், இது சம்மந்தமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்ந்து பேசி வருகிறது. தேசிய தகவல் மையத்தில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. தொலைதொடர்பு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை. ரயில் சேவைகளிலும் பாதிப்பும் இல்லை. கோளாறுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை தீர்ப்பதற்கான அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

The post மைக்ரோசாப்ட் மென்பொருள் முடங்கியதால் உலகம் முழுவதும் விமான சேவை பாதிப்பு: இந்தியாவில் 200 விமானங்கள் ரத்து, லட்சக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு appeared first on Dinakaran.

Tags : Microsoft ,India ,New Delhi ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு...