×

சைக்கிள் ஓட்டினோம்… படிச்சோம்… சம்பாதிக்கிறோம்!

நன்றி குங்குமம் தோழி

சைக்கிள்… இரண்டு சக்கர வாகனத்தில் மிகவும் அடிப்படையானது என்றாலும், இந்த சைக்கிளை ஓட்டத் தெரிந்தாலே ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கை ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனாலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் 1991ம் ஆண்டு அன்றைய மாவட்ட ஆட்சியரான ஷீலா ராணி துவங்கியதுதான் இந்த சைக்கிள் ஓட்டுதல் இயக்கம். இதன் மூலம் பெண்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டது மட்டுமில்லாமல் மாலை நேரங்களில் நடத்தப்படும் அறிவொளி இயக்கம் மூலம் எழுதப் படிக்கவும் கற்றுக் ெகாண்டனர். மேலும் தங்களின் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வேலைகளையும் இதன் மூலம் எளிதாக்கிக் கொண்டுள்ளனர். இது குறித்து புதுக்கோட்டை முன்னாள் கலெக்டரான ஷீலா ராணி பேசும் போது…

‘‘1991ல், இந்தியாவில் கல்வியறிவின்மை விகிதம் மிகவும் குறைவு. அதிலும் நான் மாவட்ட ஆட்சியராக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. குறிப்பாக இங்கு பெண்களுக்கு கல்வி என்பது கேள்விக்குறியாக இருந்தது. இங்குள்ள கிராமத்துப் பெண்கள் படிப்பைவிட தங்களின் அன்றாட வீட்டு வேலைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளித்து வந்தார்கள். பெண்களை படிப்பை நோக்கி நகர்த்த வேண்டும்… அவர்களை தன்னம்பிக்கை மிக்க பெண்களாக மாற்ற வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது.

இந்த காலக்கட்டத்தில்தான் இந்திய அரசாங்கத்தால் தேசிய எழுத்தறிவு மிஷன் அமைக்கப்பட்டது. அதோடு தமிழ்நாட்டிலும் அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த திட்டத்தினை அறிமுகம் செய்ய திட்டமிட்டேன். காரணம், இங்குள்ள ஊர் மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். மேலும் தங்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றக்கூட முடியாத சூழ்நிலையில் வாழ்பவர்கள்.

அதனால் நான் கிராமத்து பெண்களை ஒரு இயக்கமாக அமைக்க முடிவு செய்தேன். அதன் மூலம் அவர்கள் ஒரு செயலை சேர்ந்து செய்ய முடியும். இது அவர்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். அதன் அடிப்படையில் துவங்கப்பட்டதுதான் சைக்கிள் ஓட்டுதல் இயக்கம். நான் பார்த்தவரையில் அந்த காலங்களில் சைக்கிளை ஆண்கள்தான் அதிகமாக ஓட்டுவார்கள். ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு சென்று வர பேருந்தை அடுத்து சைக்கிள் மட்டும்தான் போக்குவரத்து சாதனமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பெண்களும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டால் அவர்களாலும் பல ஊர்களுக்கு சென்று வர முடியும். குறிப்பாக தங்களின் அன்றாடத் தேவையான தண்ணீர் குடங்களை தூக்கி வர பிரச்னை இருக்காது. அந்த நோக்கத்தில்தான் இந்த இயக்கத்தினை தன்னார்வலர்களுடன் இணைந்து தொடங்கினேன்.

இயக்கம் துவங்கியாச்சு… அடுத்து சைக்கிள் வேண்டும். இங்குள்ள தனியார் வங்கி மேலாளரின் உதவியுடன் சைக்கிள் நிறுவனத்திடம் பேசி மாதம் ரூ.100 என தவணை முறையில் பெண்களுக்கு சைக்கிள்களை பெற்றுக் கொடுத்தேன். சைக்கிளை தவணை முறையில் பெற்றுக் கொள்ள விரும்பிய பெண்களுக்கு சைக்கிளை கொடுத்தோம். அதன் பிறகு சிறு பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் தெருக்களில் சைக்கிளை மிகவும் ஆர்வமாக ஓட்ட கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

அந்த சமயத்தில் எங்களுக்கு தரப்பட்ட சைக்கிள்கள் அனைத்தும் ஆண்கள் பயன்படுத்தும் இடையே கம்பி அமைப்பு கொண்டிருந்தது. இதனால் பெண்கள் புடவை மற்றும் பாவாடையில் அதில் பயணிப்பது கடினம். இருப்பினும் அந்தக் கம்பி, அவர்களைத் தடுக்கவில்லை. பெண்கள் சைக்கிளை வாங்கி கற்றுக் கொள்ளவும் தொடங்கினர். இதற்கு ஆண்களே உதவியாகவும் இருந்தனர். எங்களின் நோக்கம் என்ன என்று கிராம மக்கள் புரிந்து கொண்டு அதற்கு ஆதரவு அளிக்க முன்வந்தார்கள்.

பலர் முன்னிலையில் பகல் நேரத்தில் சைக்கிள் பழக கூச்சப்பட்ட பெண்கள் இரவு நேரங்களில் கற்றுக்கொள்ள தொடங்கினார்கள். அதனால் அவர்களுக்காகவே பல இடங்களில் மின்விளக்குகளை அமைத்து கொடுத்தோம். பெண்களுக்கும் எல்லா வேலைகளும் தங்களாலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உருவானது. ஒரு ஊர் மட்டுமில்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஊர்களிலும் பெண்கள் சைக்கிள் ஓட்டத் தொடங்கினார்கள். அவர்களை மேலும் உற்சாகப்படுத்த சைக்கிள் பந்தயம் நடத்தினோம்’’ என்றவர், இந்த இயக்கத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதற்கு இயக்கத்திற்கான பாடல் ஒன்றை அமைத்துள்ளார்.

‘‘ஒரு இயக்கம் மென்மேலும் இயங்க அதற்கான முழக்கம் அவசியம். அந்த அடிப்படையில் முத்து பாஸ்கர் என்பவர் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் தன்னம்பிக்கை குறித்து பாடல் ஒன்றை எழுதினார். ‘சைக்கிள் ஓட்ட கத்துக் கிட்டோம் அண்ணாச்சி…

வாழ்க்கை சக்கரத்தை சுத்திவிட்டோம் அண்ணாச்சி…’ என்ற வரிகளுடன் அந்த பாடல் துவங்கும். பெண்களும் அந்த பாடலைப் பாடிக் கொண்டே சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தார்கள். அடுத்து இயக்கத்தால் ஒன்றிணைந்த பெண்களுக்கு அறிவொளி இயக்கம் தன்னார்வலர்கள் உதவியுடன் எழுதப் படிக்க சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தோம். பெண்களும் ஆர்வமாக படிக்க துவங்கினார்கள். அவர்கள் கற்ற கல்வி தங்களின் குழந்தைகளுக்கும் படிக்க சொல்லிக் கொடுக்க உதவியது. இதனால் அந்த மாவட்டத்தின் கற்றல் விகிதம் அதிகமானது. இது பெண்கள் சம்பாதிக்கவும் குடும்பத்தை வழிநடத்தவும் உதவியது’’ என்கிறார் ஷீலா ராணி.

முத்துலட்சுமி: ‘‘சைக்கிள் ஓட்டுதல் மற்றும் அறிவொளி இயக்கத்தில் சேர்ந்து எழுதப் படிக்க கற்றுக்கொண்டு தற்போது பால் விற்பனை செய்கிறேன். சொந்த ஊரு புதுக்கோட்டை, தோப்புபட்டி. படிப்பு வரல, அதனால பாதியிலேயே விட்டுட்டேன். கல்யாணம், குழந்தை எல்லாம் பிறந்த பிறகுதான் எங்க ஊர்ல அறிவொளி இயக்கம் வந்தது. அங்குதான் நான் எழுதப் படிக்க கத்துக்கிட்டேன். படிப்பே வராதுன்னு இருந்த நான் வகுப்பில் மூணாவது ரேங்க் எடுத்தேன்.

எனக்கு ஆரம்பத்தில் ஒரு பஸ் எந்த ஊருக்கு போகுதுன்னு பார்த்து படிக்கக்கூட தெரியாது. இப்ப நானே பஸ்ல என்ன எழுதி இருக்குன்னு படிக்கிறேன். அதிகாரிகளை சந்தித்துப் பேசி மனு எழுதி தருகிறேன். பால் விற்பனை கணக்கும் எழுதுறேன். உழவர் மன்ற அமைப்பாளரா இருக்கேன். இப்போது நிதிப் பற்றாக்குறையால் இயக்கம் இயங்கல என்றாலும், அதன் தாக்கம் குறையல. புதுக்கோட்டை பகுதி முழுதும் பெண்கள் சைக்கிள் மற்றும் மொபெட்களில் சவாரி செய்வதை இன்றும் பார்க்க முடியுது.’’

கண்ணம்மா: அறிவொளி இயக்க மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளர் ‘‘புதுக்கோட்டைக்கு ஷீலா மேடம் மாவட்ட ஆட்சியரா வந்த பிறகுதான் பெண்கள் நாங்க வெளியே வர ஆரம்பிச்சோம். படிப்பறிவு இல்லாததால், எதற்கும் ஆண்களை சார்ந்தே வாழ பழகிவிட்டோம். பெண்கள் தன்னம்பிக்கையோடு வெளியே வர வேண்டும் என்பதற்காகவே சைக்கிள் ஓட்டுதல் இயக்கத்தை அரசு உதவியுடன் தொடங்கினாங்க. அதைத் தொடர்ந்து அறிவொளி மூலம் அவர்களுக்கு கல்வியறிவும் கொடுக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் நாங்க முதலில் கணக்கெடுத்த போது 2,60,000 பேர் படிப்பறிவு இல்லாமல் இருந்தனர். ஆனால் அறிவொளி துவங்கிய பிறகு ஒரு வருடத்தில் 2 லட்சம் பேர் அதில் சேர்ந்து படிக்க தொடங்கினர். 1991ல் பெண்களின் கற்றல் சதவீதம் 45. இயக்கம் ஆரம்பித்த ஆண்டில் 78% உயர்ந்தது. படிப்பு மட்டுமில்லாமல், பெண்களுக்கு சுய உதவிக்குழு அமைத்து அதன் மூலம் சுய தொழிலுக்கான திட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தார். குவாரியில் வேலை செய்யும் பெண்களுக்கு அதனை அவர்களுக்கு சொந்தமாக குத்தகைக்கு கொடுத்தார்.

அரசு வேலையில் இருக்கும் செவிலியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் பல கிலோ மீட்டர் தூரம் வேலைக்கு நடந்து செல்ல வேண்டும் என்பதால், வங்கி மூலமாக மொபைட்களை வாங்கிக் கொடுத்தார். சைக்கிள் ஓட்டுதல் இயக்கம் மூலமாக பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து படிக்க வைத்து வேலையும் உருவாக்கிக் கொடுத்தார். பெண்கள் ஒரு இயக்கமாக மாற வேண்டும்… அதிகாரம் மிக்க பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவர் சென்ற பிறகும் அதனை இங்குள்ள பெண்கள் பின்பற்றி வருகிறார்கள். இன்று பல பெண்கள் படித்து வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள்.’’

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post சைக்கிள் ஓட்டினோம்… படிச்சோம்… சம்பாதிக்கிறோம்! appeared first on Dinakaran.

Tags : Pudukkottai District ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு தரமான உரங்கள் கிடைக்க நடவடிக்கை