×
Saravana Stores

அகிலத்தின் தாயான அகிலாண்டேஸ்வரி

பகுதி 2

அன்று சர்வாலங்கார பூஷிதையாக அகலமான கரை போட்ட பச்சைநிற பட்டுப்புடவையில் ஜொலித்தாள் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி. அம்பிகையைத் தரிசித்த ராஜலட்சுமி அம்மாள், கண்களில் நீர்வீழ்ச்சியாக வழிந்தது! புடவை தலைப்பால், தன் கண்களைத் துடைத்துக் கொண்டவர், “அம்மா அகிலாண்டேஸ்வரி… இந்த உலகத்துக்கு தாயான உன்னோட காலடியில சரணடைந்து இருக்கிறதாலதான் மனநிம்மதியோடு நான் இருக்கேன்! சகல ஜீவராசிகளையும் எப்பவும் காப்பாத்திக்கிட்டு இருக்கணும்” என்று மனம் உருக வேண்டிக்கொண்டார். வெளியே வந்தோம். குளிர்ந்த காற்று வீசியது. அப்போது இரவு மணி 9.30 இருக்கும்!

“நேரம் ஆயிடுச்சே… நீங்க ஒண்ணும் சாப்பிடலையே” என்று கேட்டேன்.“மத்தியானமே ரெண்டு பூவன் வாழைப்பழம் வாங்கி வெச்சுட்டேன். ராத்திரி சாப்பாடு அவ்வளவுதான்! அது சரி… நீ என்ன பண்ணப்போறே?” என்றார் அவர்.

“திருச்சியில போய் சாப்பிடுவேன்!”என்றேன். “அப்படியானால் நீ சீக்கிரம் புறப்படு. நாளைக்கு சாயந்திரம் வந்துடு. ஏன்னா… இனிமேதான் என் வாழ்க்கை சரித்திரத்தில சுவாரஸ்யமெல்லாம் வரப்போகுது!” என்று சிரித்தார் ராஜலட்சுமி அம்மாள். நானும் சிரித்தபடியே புறப்பட்டேன். மறுநாள் மாலை 5 மணிக்கே அன்னை அகிலாண்டேஸ்வரியின் கோபுர வாசலில் நின்றேன். அந்தத் திண்ணையில், பளிச் சென நெற்றியில் திருநீறு துலங்க அமர்ந்திருந்தார் ராஜலட்சுமி அம்மாள். நானும் திண்ணைக்குச் சென்று அவரை வணங்கிவிட்டு, அருகில் அமர்ந்தேன். புன்னகையுடன் என்னை நோக்கிய ராஜலட்சுமி அம்மாள், “நேத்திக்குவிட்ட இடத்துலேர்ந்து மீதியைச் சொல்றேன்… கேளு!” என்றுகூற ஆரம்பித்தார்:

“மகளுக்கு ஒருவழியா கல்யாணம் முடிஞ்சுதுன்னு சொன்னேன் இல்லையா… அடுத்து, மூத்தவன் சங்கர நாராயணனுக்கும் நல்ல வரனா தேட ஆரம்பிச்சோம். கோயபுத்தூர்ல இருந்து ஒரு ஜாதகம் வந்தது. நல்லா பொருந்தி இருந்தது. பேரு ஜானகி. ஆனா, பொண்ணோட படிப்பு என்னவோ எட்டாம் வகுப்புதான். அதனால, நானும் என் கணவரும் கொஞ்சம் யோசிச்சோம். ஆனால், எங்க புள்ளையோ துளிகூட யோசிக்கலே! அந்தப் பெண் பார்க்க லட்சணமா இருந்ததால், ‘இவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னுட்டான். அப்புறமென்ன… ஒரு நல்ல நாள்ல பாக்கு, வெத்தலை மாத்தியாச்சு! முகூர்த்த தேதியையும் நிச்சயப்படுத்திட்டோம். ஒரு தைமாசம் திருமணம் விமரிசையா நடந்து முடிஞ்சுது.

ஆரம்ப நாட்கள் குடும்பம் நன்றாகதான் போயிண்டிருந்தது. ஜானகிக்கு முதல்ல பெண் குழந்தை பிறந்தது. எங்களுக்கெல்லாம் சந்தோஷம். பேத்திக்கு, எங்க மாமியாரோட பேரான மீனாட்சினு
வைக்கணும்னேன். ‘அதெல்லாம் ரொம்ப கர்நாடகப் பேரு! சுஜாதானுதான் வைப்பேன்’னு பிடிவாதம் புடிச்சா ஜானகி! நானும் பேசாம இருந்துட்டேன். இதுக்கு நடுவுல, ரெண்டாவது பிள்ளை சந்திரசேகரன், ஜாம்ஷெட்பூர்ல தன்னோடு வேலை பார்த்த நாகராஜ ஐயர் என்பவரோட பெண் வத்ஸலாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு விவரமா கடிதாசி எழுதி, ‘ஒரு மாசத்துக்குள் முகூர்த்தம் பார்த்தே ஆகணும்’னு பிடிவாதம் பிடிச்சிருந்தான்! அப்புறமென்ன… சம்பந்தி நாகராஜ ஐயரோட சொந்த ஊரான தஞ்சாவூர்ல கல்யாணம் நடந்து முடிஞ்சுது.

எம் புள்ளையும், மருமகளும்… ஹாய்யா ரெண்டே ரெண்டு நாள் மட்டும் ஊருக்கு வந்துட்டு, ஜாம்ஷெட்பூருக்குக் கிளம்பிப் போய்ட்டாங்க. அப்புறம்… வளைகாப்பு, சீமந்தம்னு வந்து போனாங்க! சின்னவனுக்கு மூத்தது பிள்ளையா பொறந்தது. ரெண்டாவது பொண்ணு. பெரியவனுக்கு ரெண்டாவதும், பொண்ணாவே பொறந்தது. சின்னவன் குழந்தைகளை ரெண்டு மூணு சந்தர்ப்பங்கள்லதான் பார்த்திருக்கேன். அவன் அடிக்கடி தென்காசிப் பக்கம் வர்றதில்லை. இப்படி மூணு நாலு வருஷம் கழிஞ்சுது. திடீர்னு வீட்ல நிறைய மாற்றங்களை பண்ண ஆரம்பிச்சா ஜானகி!” என்று நிறுத்தியவர், சற்று நேரம் தன்னை சமாதானம் படுத்திக் கொண்டு, மீண்டும் தொடர்ந்தார்:

“மொதல்ல… பத்துபாத்திரம் தேய்ச்சு, வீடு பெருக்கிண்டிருந்த வேலைக்காரியை நிறுத்தினா! அந்த வேலைகள்லாம் என் தலைல விழுந்தது. வயசான காலத்துல செய்ய முடியாம கஷ்டப்பட்டு செஞ்சேன். அடுத்து, நாள்தோறும் சமையலும் என் தலைல வந்து விழுந்தது. தள்ளாமையோட ரொம்ப பொறுத்துக்கிட்டு சமையல் பண்ணுவேன். ‘நீ ஏம்மா சிரமப்படறே’னு சங்கர நாராயணன் ஒரு நாள்கூட கேட்டதில்லை. என் கணவருக்கு மனசு கேட்காது. வீட்டின் பின் புறத்தில், நான் தனியா பத்துப் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கும் போது… எங்கிட்ட வந்து அன்போடு, உள்ளங்கைகளை தடவிக் கொடுப்பார்.

‘ராஜி… உனக்கு எவ்வளவு சிரமம்? எல்லா வேலையையும் நீயே செய்யும்படி ஆகிவிட்டதேம்மா! எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குனு சொல்லி, கேவிக் கேவி அழுவார். அவரை சமாதானப்படுத்தறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடும். அப்படி ஒரு பரிவு, பாசம் எங்கிட்ட அவருக்கு!எங்க மாமனார் – மாமியாருக்கு அப்புறம், நாங்க ரெண்டு பேரும் கூடத்து ஊஞ்சல்ல உட்கார்ந்து பேசிகிட்டிருப்பது வழக்கம். அப்படி ஒரு நாள், நாங்க ஊஞ்சல்ல உட்கார்ந்து பேசிட்டிருந்தப்ப…

தென்காசிக்குப் போயிருந்த ஜானகி, திடீர்னு திரும்பிவந்துட்டா. அவள் மூஞ்சியில் எள்ளும் கொள்ளும் வெடிச்சுது. அவ்வளவுதான்… மறு நாளே ஊஞ்சலைக் கழட்டி வீட்டின் பரண்ல போட்டுட்டா. அந்த சுதந்திரமும் போச்சு!” என்று ராஜலட்சுமி அம்மாள் நிறுத்தினார். அவரின் கண்கள் பனித்திருந்தன.“அகிலாண்டேஸ்வரி… மனசுல சாந்திய கொடு தாயே!” என்று கை கூப்பி பிரார்த்தித்தார். நான் கடிகாரத்தைப் பார்த்தேன். இரவு நேரம் 9:00 இருவரும் அகிலாண்டேஸ்வரியைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தோம்.

“நாளைக்கும் இதே மாதிரி வந்துடு!” என்று விடை கொடுத்தார், ராஜலட்சுமி அம்மாள். மறுநாள் மாலை, நான்கு மணியளவில் திருவானைக் காவலில் இருந்தேன். அம்பிகையை தரிசித்துவிட்டு திண்ணைக்கு வந்து சேர்ந்தேன். ராஜலட்சுமி அம்மாவுக்கு அன்று உடல்நிலை சரியில்லை. முனங்கியபடியே படுத்திருந்தார்.“அம்மா!” என்று தயக்கத்துடன் குரல் கொடுத்தேன். என் குரலைக் கேட்டதும், ‘விசுக்’கென்று எழுந்து அமர்ந்தார். நான் மிகக் கவலையுடன், “ஏம்மா… உடம்பு சரியா இல்லையா?” என்று விசாரித்தேன்.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லேப்பா. காலேல.. லேசா மழை பெய்ஞ்சது. அதுல நனஞ்சுண்டே போய், காவேரி ஸ்நானம் பண்ணிட்டேன். அது, ஜுரத்துல கொண்டு போய்விட்டுடுச்சு. வேற ஒண்ணுமில்லே!” என்றார். தொடர்ந்து, “கலலைப்படாதே! கொஞ்ச நேரத்துல சரியாயிடும். நீ இப்படி உட்காரு!” என்று சிரித்தபடி கூறினார். நான் உட்கார்ந்தேன். சற்று நேரம் யோசித்தவர், “நேத்திக்குவிட்ட இடத்துலேர்ந்து சொல்றேன். ஆனால், ஒரு விஷயத்தை திரும்பவும் உனக்கு ஞாபகப்படுத்தறேன்… நான் உயிரோட இருக்கற வரைக்கும் இதெல்லாம் உன் மனசோட இருக்கணும். புரிஞ்சுதா?” என்றார். நானும் பலமாகத் தலையாட்டினேன். அவர் தொடர்ந்தார்:

“நாள் தோறும் என் கணவருக்கு காலையில் பதினோரு மணிக்கெல்லாம் சாப்பாடு போட்டுடணும். பாவம்… அதுக்கு மேல பசி பொறுக்க மாட்டார். காலையில் காபி மட்டும்தான்! சாப்பாடுன்னா… அவருக்கு நல்லா ருசியா இருக்கணும். பருப்பு நெய், பச்சடி, கறி, கூட்டு, சாம்பார், ரசம், தயிர், ஊறுகான்னு… எல்லாம் இருக்கணும். ஒண்ணு கொறஞ்சாலும் அவருக்கு கோபம் வந்துடும். மருமகள் வந்த புதுசுல… ரெண்டு மூணு மாசத்துக்கு, இப்படி ஏழெட்டு அயிட்டங்களோடு சாப்பாடு நடந்துண்டிருந்தது.

நானும் சந்தோஷப்பட்டேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அயிட்டங்கள் எல்லாம் கொறஞ்சு… ஒரே ஒரு பொரியல், சாம்பார், ரசம்னு வந்து நின்னுடுச்சு. மருமகளை கேட்டதுக்கு, ‘ஒருத்தர் சம்பாத்தியத்துல இப்படித்தான் பண்ண முடியும்’னுட்டா! என்னால் ஒண்ணும் பேச முடியலே. என் கணவருக்கு, வெண்டைக்காய் சாம்பார், கத்திரிக்கா காரப்பொரியல்னா ரொம்ப இஷ்டம். அப்படித்தான் ஒரு நாள்… வெண்டைக்காய் சாம்பாரும், கத்திரிக்காய் காரப்பொரியலும் பண்ணியிருந்தேன்.

அவருக்குப் பிடிக்குமேங்கறதால… அவர் இலையில் கத்திரிக்கா பொரியலை கொஞ்சம் அதிகமா வெச்சுட்டேன் போல! இதைப் பார்த்துட்ட ஜானகி, ஆக்ரோஷமான குரலில் ‘ஓஹோ! நித்யம் இப்படித்தான் நடந்துண்டிருக்காக்கும்? ஒருத்தருக்கே இப்படி அள்ளிப் போட்டுட்டா… பாக்கிப் பேரெல்லாம் என்னத்த சாப்பிடறது? இதுக்காகத்தான் ‘நானே பரிமாறறேன்… நானே பரிமாறறேன்’னு ஓடிஓடி வறீங்களாக்கும். திங்கறத்துக்கும் ஒரு அளவு வேண்டாமானு’ கடுமையா சொன்னதோட, அவர் இலையில இருந்த கத்திரிக்காய் கறியில முக்கால்வாசியை வெடுக்குனு எடுத்துண்டு போயி, பாத்திரத்துல திரும்பப் போட்டுட்டா! நான் வியந்து போயிட்டேன்.

இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத என் கணவர், குனிஞ்ச தலையை நிமிராம அப்படியே உட்கார்ந்திருந்தார். அவரால துக்கத்தை அடக்க முடியலே! கண்கள்ல பொங்கின நீர், இலையில விழுந்து தெறிச்சுது. பார்க்க பாவமா இருந்தது. அப்புறம் போறும் போறாம அவளே பரிமாற, சாப்பிட்டு முடிச்சார்…” இந்த இடத்தில், ராஜலட்சுமி அம்மாவால் துக்கத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை. அழ ஆரம்பித்தார். அவரைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஒரு வழியாக அமைதியான அவர், மீண்டும் தொடர்ந்தார்:“அடுத்த நாள்லேர்ந்து சமையலை முடிச்சுட்டு நான் நகர்ந்து போயிடுவேன். பரிமாறும் வேலையை அவளே எடுத்துண்டுட்டா! ஒரு நாள், என் கணவர் சாப்பிட்டு கொல்லைப்புறம் கை அலம்பப் போகும் போது… கண்களில் நீர்மல்க என்னிடம், ‘ராஜம், நித்யம் பரம ருசியாத்தான் நீ சமையல் பண்றே!

ஆனால், ஜானகி பரிமாறுவது வயித்துக்குப் பத்தமாட்டேங்குது. இன்னும் ெகாஞ்சம் போடேன்னு கேக்கவும் சங்கோஜமா இருக்கு. சாப்பிட்ட கையை அலம்பிண்டு வந்த உடனேயே திரும்பவும் பசிக்கிறது. இதுக்கு நான் என்ன பண்ணுவேன், சொல்லு ராஜம். நீ எனக்கு சாப்பாட்டை வயிறாரப் போட்டு என்னை பழக்கப்படுத்திட்ட நான் இப்போ… என்ன பண்றது?’ என்று என்னிடம் அவர் சொன்னதும், நான் துடிச்சுப் போயிட்டேன்.

அன்னிக்கு ராத்திரி முழுக்க, ‘என்ன பண்ணலாம்?’னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தேன். தினமும் என் கணவர் சாப்பிட்ட அப்றம்தான் நான் சாப்பிடறது வழக்கம். எனக்கும் போட்டுட்டு, மருமகள் தனியா உட்கார்ந்து தானே போட்டுகிட்டு சாப்பிடுவா. பிறகு, பாத்திரங்களை, தேய்ச்சு வைக்கிறது என் வேலை. அடுத்த நாள்லேர்ந்து என்ன பண்ணினேன்னா… எனக்கு சாதம் போட்டுகிட்டு, மருமகள் அந்த பக்கம் போயிருக்கிற நேரத்துல… என் இலையில போட்டிருக்கிற சாதத்துல சாம்பாரைவிட்டு, கெட்டியா பிசைவேன். அதுல ரெண்டு கைப்பிடி எடுத்து என் மருமகளுக்கு தெரியாம என் புடவைத் தலைப்புல வெச்சு மறைச்சுடுவேன். பிறகு புழக்கடையில் பாத்திரம் தேய்க்கிறபோது… அந்தப் பக்கமா வர்ற என் கணவரை கிணத்து மறைவுல நிற்கச் சொல்லி, சாதத்தை அவர் கையில உருட்டிப் போடுவேன்.

‘தேவாமிர்தமா இருக்கு ராஜம்’னு சொல்லிக்கிட்டே சாப்பிடுவார். அவர் சாப்பிடறதைப் பார்த்து, எனக்கு பரமசந்தோஷமாக இருக்கும். இதுவும் ரொம்ப நாள் நீடிக்கலை. ஒரு நாள், ஜானகி இதைப் பார்த்துட்டா. அவ்வளவுதான்! ஆக்ரோஷமா ஓடி வந்தவ, என் கணவர் கையில இருந்த சாதத்தை வேகமா தட்டிவிட்டாள். நிலை குலைந்த என் கணவர், கிணத்துச் சுவர்ல முட்டிக்கிட்டார். நெத்தியில் ரத்தம் வழிஞ்சுது. ஆனால், அதைப் பத்திக் கவலைப் படாமல், என் மடியிலிருந்த சாம்பார் சாதத்தையும் பிடுங்கி தூர எறிஞ்சுட்டு, ‘இந்த திருட்டுச் சாப்பாடு எத்தனை நாளா நடக்கிறது? அப்பிடியா ஒரு வயிறு கேக்கும்’னு திட்டித் தீர்த்துட்டா. என்ன சமாதானம் சொல்லியும் அவ கேட்கலை.

ஆபீஸ்லேர்ந்து வந்த சங்கரநாராயணனிடமும், ஒண்ணுக்கு ரெண்டா சொல்லிக் கொடுத்துட்டாள். அவனும் என்ன ஏதுன்னு விசாரிக்காம, எங்களைத் திட்டித் தீர்த்துட்டான். அவமானப்பட்டு தலை குனிஞ்சு நின்னோம்! அந்த நேரத்துலதான்… பதினைஞ்சு நாள் லீவுல குடும்பத்தோடு ஊருக்கு வர்றதா ரெண்டாவது பையன் கடிதம் போட்டிருந்தான். எங்களுக்கு சந்தோஷம். ஜாம்ஷெட்பூர் போயி நிம்மதியா ரெண்டு மூணு மாசம் இருந்துட்டு வரலாம்னு, மனக்கோட்டை கட்டினோம். ஆனால், அதுவும் நிறைவேறலை!”

(தொடரும்…)

தொகுப்பு: ரமணி அண்ணா

The post அகிலத்தின் தாயான அகிலாண்டேஸ்வரி appeared first on Dinakaran.

Tags : Akilandeswari ,SriAkilandeshwari ,Rajalakshmi Ammal ,Ambikai ,Akilandeswari… ,
× RELATED சுரண்டை அருகே விவசாயிகள் பயன்பாட்டிற்காக கூடுதல் டிரான்ஸ்பார்மர்