×

காஷ்மீரில் நீடிக்கும் வன்முறை தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர்கள் 2 பேர் காயம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.  மோடியின் 3.0 ஆட்சியிலும் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் நீடிக்கிறது. ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டம் தேசா காடுகளில் திங்கள் மற்றும் செவ்வாய் இரவுகளில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு கேப்டன் உள்பட 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து தேசா பகுதியில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம்(ஜூலை 17) இரவு ரஜோரி மாவட்டம் சுந்தர்பானி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே சந்தேகத்துக்கிடமாக 2 பேர் சுற்றி திரிவதை கண்ட பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனிடையே தோடா மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் தங்குவதற்கு கஸ்திகர் பகுதியில் ஜோடன்பாடா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த அரசு பள்ளி மீது தீவிரவாதிகள் நேற்று அதிகாலை 2 மணியளவில் பயங்கர துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். ஒருமணி நேரத்துக்கும் மேலாக நீடித்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர். காட்டுக்குள் தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு முதல் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட தோடா மாவட்டத்தில் 2024 ஜூன் 12ம் தேதி முதல் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

* தீவிரவாதிகள் சுட்டு கொலை
இதனிடையே வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கெரன் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லை கட்டுப்பாடு கோடு வழியே ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 2 பேரை சுட்டு கொன்றனர். அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை நீடிக்கிறது.

* மோடி அவசர ஆலோசனை
ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறையின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஜம்மு காஷ்மீரில் தொடரும் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post காஷ்மீரில் நீடிக்கும் வன்முறை தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Kashmir Jammu ,Doda district of Jammu and Kashmir ,Modi ,Jammu and ,Kashmir ,Desa forests ,Doda district ,Jammu and Kashmir ,Dinakaran ,
× RELATED திறன் மேம்பாடு குறித்து சிங்கப்பூர்...