×

ராகுல் அரசியல்வாதியாக முதிர்ச்சி அடைந்துள்ளார்: பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பேட்டி

போல்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அரசியலில் முதிர்ச்சி அடைந்திருப்பதாகவும், இனி எதிர்க்கட்சி தலைவராக அவர் சோதிக்கப்படுவார் என்றும் பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறி உள்ளார்.
நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான அமர்த்தியா சென், மேற்கு வங்கம் பிர்பூர் மாவட்டத்தின் போல்பூரில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் படிக்கும் போதே ராகுல் காந்தியை நான் அறிவேன். அப்போது என்னை சந்திக்க வருவார். அப்போது அரசியல் மீது அவருக்கு ஈடுபாடு இல்லை. அப்படிப்பட்ட சூழலில் தான் அவர் அரசியலில் களமிறங்கினார். அதனால், ஆரம்பத்தில் சில சிரமங்களை சந்தித்திருக்கலாம். ஆனால் இப்போது பல ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறார்.

அவரது சமீபத்திய செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அரசியலில் நல்ல முதிர்ச்சி அடைந்த தலைவராக ராகுல் மாறியிருக்கிறார். அதை நான் பாராட்டுகிறேன். இப்போது ராகுல் அரசியல் உள்ளிட்ட பல விஷயங்களில் மிகத் தெளிவாக இருக்கிறார். உங்களது குணாதிசயங்கள் மட்டுமே நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதை தீர்மானிப்பதில்லை. அதை நாடு எப்படி பார்க்கிறது என்பதை பொறுத்துதான் உங்கள் வெற்றி அமையும். இந்திய ஒற்றுமை நீதி பயணம் நடத்தி ராகுல் நல்ல வேலையை செய்துள்ளார். இந்த யாத்திரை நாட்டிற்கும் ராகுலுக்கும் நல்லது என்று நினைக்கிறேன்.

இந்திய அரசியலின் சிக்கல்களில் புதிதாக அவர் வேரூன்றியிருப்பதன் மூலம் ராகுலின் தலைமைத்துவத் தரத்தில் மிக முக்கியமான மாற்றம் தெரிகிறது. இது அவர் வழிநடத்தும் காங்கிரசுக்கும், நாட்டிற்கும் ஒரு வரமாக இருக்கும். இனி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் சோதிக்கப்படுவார். சமத்துவமின்மையும் மதவெறியும் அதிகரித்துள்ள இந்தியாவில், குறிப்பாக பெரும்பான்மை சமூகத்தினர் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில் ராகுல் எவ்வாறு எதிர்க்கட்சியை வழிநடத்துகிறார் என்பது மிக முக்கியமான பிரச்னை. அவர் அதை நன்றாக கையாளுகிறார் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அமர்த்தியா சென் கூறினார்.

* ராகுல் பிரதமர் ஆவாரா?
இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுலை பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த அமர்த்தியா சென், ‘‘இதற்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. யார் பிரதமர் ஆவார் என்பதை கணிப்பது மிகவும் கடினம். நான் டெல்லியில் படிக்கும் போது, எனது சக மாணவர்களில் யாருக்கு பிரதமராகும் வாய்ப்பு குறைவு என்று யாராவது என்னிடம் கேட்டிருந்தால், அரசியலில் ஆர்வமே காட்டாத மன்மோகன் சிங்கை கூறியிருப்பேன். ஆனால் அதன் பின் அவர்தான் பிரதமர் ஆனார். அதுபோல, இந்த விஷயத்தில் கணிக்க முடியாது’’ என்றார்.

The post ராகுல் அரசியல்வாதியாக முதிர்ச்சி அடைந்துள்ளார்: பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rahul ,Amartya Chen ,Bolpur ,Amartya Sen ,Congress ,West ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் தொடரும் சம்பவம்...