- பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி
- உடுமலை
- பஞ்சலிங்க
- மேற்குத்தொடர்ச்சி
- திருமூர்த்தி மலை
- உடுமலை, திருப்பூர் மாவட்டம்...
உடுமலை: உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை காரணமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் இந்த அருவியில் குளித்து மகிழ்வதற்காக திருப்பூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். வார விடுமுறை, அரசு விடுமுறை தினங்களில் வெளியூர்களில் இருந்து திருமூர்த்தி அணை மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோயிலை காண வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக அலை மோதும்.
கடந்த ஒரு மாதமாக அருவியில் சீராக தண்ணீர் விழுந்து வந்த நிலையில், கடந்த 2 தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், கேரள வனப்பகுதிகளில் பெய்து வரும் பருவ மழையாலும் பஞ்சலிங்க அருவிக்கு நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அருவியை காண பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பாலாற்றில் பாய்ந்து செல்கிறது. திருமூர்த்தி மலையடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றி ஓடும் பாலாற்றில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம்போல பாய்ந்து செல்கிறது. இதனால் பக்தர்கள் பாலாற்றில் குளிப்பதற்கோ, துவைப்பதற்கோ இறங்கக்கூடாது என கோயில் நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
கடந்த 2 நாட்களாக வனப்பகுதிகளில் இடைவிடாது சாரல் மழையோடு அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் புதிதாக நீரூற்றுகள், அருவிகள் தோன்றி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி உள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழும் நிலை உள்ளதால் கோயில் நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை,அமராவதி வனச்சரகம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. நேற்று பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து காலை முதலே அதிகரித்தது. அருவியில் இருந்து நுரை பொங்க புறப்பட்ட வெள்ளம் பாலாற்றின் வழியாக திருமூர்த்தி அணையை சென்றடைகிறது.
அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
கவியருவியில் குளிக்க 2வது நாளாக தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் கோவை மாவட்டம் ஆழியார் அருகே உள்ள கவியருவியில் நேற்று முன்தினம் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரவு முழுவதும் பெய்த கன மழையால் கவியருவியில் நேற்றும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கவியருவியில் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
The post பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு: பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.