×

ஆன்லைனில் நேர்முகத்தேர்வு நடத்தி டாக்டரிடம் ₹1.15 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை துபாய் மருத்துவமனையில் வேலை தருவதாக

வேலூர், ஜூலை 16: துபாயில் வேலை தருவதாக கூறி ஆன்லைனில் நேர்முகத்தேர்வு நடத்தி, டாக்டரிடம் ₹1.15 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக புகாரின்பேரில், வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 58 வயதுடைய ஒருவர் நரம்பியல் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணில் பேசிய மர்மநபர்கள், துபாயில் உள்ள மருத்துவமனையில், நரம்பியல் டாக்டராக பணியாற்ற தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து மர்மநபர்கள் ஸ்கைப் வீடியோ காலில் அவரை தொடர்பு கொண்டு நேர்முகத்தேர்வும் நடத்தி உள்ளனர். பின்னர் அந்த மர்மநபர்கள் டாக்டரிடம் நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி பதிவு கட்டணம் மற்றும் நிர்வாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அதைநம்பிய அவரும் கடந்த ஏப்ரல் மாதம் பல தவணைகளாக ₹1 லட்சத்து 15 ஆயிரத்து 684 அனுப்பி உள்ளார். பின்னர் அவர் வேலை தொடர்பாக மர்ம ஆசாமிகளை தொடர்பு கொண்டார். அப்போது, மர்ம ஆசாமிகள் பல காரணங்களுக்காக பணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு டாக்டர், ஏற்கனவே கட்டிய தொகையை திருப்பி தாருங்கள் என கேட்டுள்ளார். அதன்பின்பு மர்மஆசாமிகள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டாக்டர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

The post ஆன்லைனில் நேர்முகத்தேர்வு நடத்தி டாக்டரிடம் ₹1.15 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை துபாய் மருத்துவமனையில் வேலை தருவதாக appeared first on Dinakaran.

Tags : Vellore cyber crime police ,Dubai ,Vellore ,Vellore… ,Vellore Cybercrime police ,Dinakaran ,
× RELATED அப்பாவின் அந்த வார்த்தை இன்று குழந்தைகளை மீட்க உதவுகிறது!